நண்பர்களுக்கு விருந்தாக்க முயற்சி-கணவர் மீது புகார்
சென்னை: நண்பர்களுக்கு தன்னை விருந்தாக்க முயல்வதாக கணவர் மீது மனைவி போலீசில் புகார் தந்துள்ளார்.
சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த பைனான்சியர் அசோக் குமார் (42). இவரது மனைவி லலிதா (38). 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமான இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சமீபகாலமாக கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட்டு வந்த நிலையில் லலிதா எஸ்.எம்.எஸ். மூலம் போலீஸ் கமிஷனருக்கு ஒரு புகார் அனுப்பினார்.
அதில், கணவர் தன்னை வீட்டில் பூட்டி வைத்து சித்ரவதை செய்வதாகவும், நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்துவதாகவும், துப்பாக்கியை காட்டி மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து போலீசார் அவரது வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இந் நிலையில் லலிதா தனது மகனுடன் இன்று காலை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில்,
கடந்த ஒரு மாதமாக கணவர் வெளியில் சென்றால் என்னை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டுச் செல்கிறார். அறிமுகம் இல்லாத நபர்களை நண்பர்கள் என கூறி கொண்டு வீட்டிற்கு அழைத்து வருகிறார். அவர்கள் முன்பு என்னை ஆபாசமாக வர்ணிக்கிறார். அவர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வற்புறுத்துகிறார். மறுத்தால் அடித்து உதைக்கிறார்.
சில நபர்களுக்கு வீட்டுக்குள் வைத்து மது விருந்து கொடுக்கிறார். என்னை அழைத்து அவருடன் ஒத்து போ... என்கிறார். மறுத்தால் கடுமையாக தாக்குகிறார். நேற்று துப்பாக்கியை காட்டி மிரட்டினார். எனது மானத்திற்கும், உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எனது கணவர் மீது நடவடிக்கை எடுத்து என்னை காப்பாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தியாகராய நகர் போலீஸ் விசாரணைக்கு கமிஷ்னர் உத்தரவிட்டுள்ளார்.