• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்!

By Staff
|

<< 1ஆம் பக்கம்

இந்தியாவை வழிக்குக் கொண்டு வந்த ராஜபக்சே சகோதரர்கள்...

இந்திய அரசின் கவலை மற்றும் பிரச்சினைகளை ராஜபக்சேவும் உணர்ந்திருந்தார். தமிழகத்தை மையமாக வைத்துத்தான் இந்திய அரசியல் இருக்கிறது என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.

அதேசமயம், இலங்கைக்கு உதவுவது இந்தியாவுக்கு அவசியம் என்பதையும் அவர் புரிந்திருந்தார். இல்லாவிட்டால் தெற்காசியப் பகுதியில், இந்தியாவின் பிடி தளர்ந்து போய் விடும் என்பது இந்தியாவுக்குத் தெரியும் என்பதையும் அவர் புரிந்து வைத்திருந்தார்.

இதை ராஜபக்சே சகோதரர்கள் சரியாகப் புரிந்து கொண்டு காய்களை நகர்த்தத் தொடங்கினர். பாகிஸ்தான், சீனாவின் உதவிகளை அவர்கள் நாடத் தொடங்கினர். அதே சமயம், முற்று முழுதாக இந்தியாவை புறக்கணித்து விட முடியாத நிலையும் ராஜபக்சேவுக்கு.

இதனால் இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய மூன்று பேரையும் சரிசமமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்ட அவர் பசில், கோத்தபயா மற்றும் அதிபரின் செயலாளர் லலித் வீரதுங்கா ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்தார்.

இந்தக் குழுவின் வேலை, தினசரி, இந்திய அரசுடன் தொடர்பு கொண்டு போர் குறித்த நிலவரங்களை அப்டேட் செய்வது.

அதேபோல இந்தியத் தரப்பிலும் ஒரு ரகசியக் குழு அமைக்கப்பட்டது. சிவசங்கர மேனன், எம்.கே.நாராயணன், பாதுகாப்புத்துறை செயலாளர் விஜய் சிங் ஆகியோர் அந்தக் குழுவில் இடம் பிடித்தனர்.

இந்த இரு குழுக்களும் தினசரி போர் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டன. ஒருவருக்கொருவர் தகவல்களையும் பரிமாறிக் கொண்டனர். இரு குழுக்களும் பெரும்பாலும் தொலைபேசி மூலம் பேசிக் கொண்டாலும் கூட அவ்வப்போது நேரிலும் சந்தித்துக் கொள்ளத் தவறவில்லை. மேலும் ஒவ்வொரு சந்திப்புக்கும் ஏதாவது ஒரு காரணம் கூறி வைக்கப்பட்டது. ஆனால் இவர்களின் ஒவ்வொரு சந்திப்பின்போதும் புலிகள் அழிப்பு குறித்துத்தான் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

2007-09 ஆண்டுகளில் இலங்கைக் குழு இந்தியாவுக்கு ஐந்து முறை வந்தது. இந்தியக் குழு 3 முறை இலங்கை போனது.

இந்தியக் குழுவின் பயணங்களிலேயே மிகவும் முக்கியமானது 2008ம் ஆண்டு ஜூன் மாதம் மேனன் தலைமையிலான குழு இலங்கை போனதுதான். அப்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் விறுவிறுப்படைந்திருந்தது.

2008 ஆகஸ்ட் மாதம் கொழும்பில் சார்க் அமைப்பின் 15வது மாநாடு நடக்கவிருந்தது. இந்த நிலையில்தான் ஜூன் மாதம் இந்திய விமானப்படை விமானம் மூலம் ரகசியமாக வந்து சேர்ந்தனர் நாராயணன், மேனன், விஜய் சிங் குழுவினர். அவர்களது வருகை கிட்டத்தட்ட ரகசியப் பயணமாக வைக்கப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகள், சார்க் மாநாட்டில் பெரும் தாக்குதல் நடத்தக் கூடும் என அப்போது எதிர்பார்ப்பிருந்தது.

அதுபோல நடந்து விடாமல் தடுப்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை முடுக்கி விட வேண்டும் என மேனன் குழுவினர் கேட்டுக் கொண்டனர். மேலும், இந்தியப் பாதுகாப்புப் படையினரை பாதுகாப்புப் பணிக்காக அனுப்புவதாகவும் இந்தியா தெரிவித்தது. இதை ஏற்குமாறும் இலங்கையை அது வலியுறுத்தியது.

ஒருவேளை இந்தியாவின் பாதுகாப்புப் படையினரை இலங்கை ஏற்காவிட்டால் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்றும் மிரட்டலாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியாவின் படை வருகையை இலங்கை அரை மனதுடன் ஏற்றுக் கொண்டது.

அதன்படி இந்திய கடற்படைக் கப்பல்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் ஆகியவை கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் குவிக்கப்பட்டன.

தேர்தலுக்கு முன்பு 'முடிக்க' விரும்பிய இந்தியா...

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்தியக் குழு கொழும்பு வந்து சேர்ந்தபோது பத்திரிக்கையாளர் குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். இதுபோன்ற ஒரு பாதுகாப்பை நான் அதுவரை இலங்கையில் பார்த்ததே இல்லை. அந்த அளவுக்கு வரலாறு காணாத பாதுகாப்பு முற்றுகையில் இருந்தது இலங்கைத் தலைநகர்.

கிட்டத்தட்ட கொழும்பு நகரம் மூடப்பட்டதைப் போன்ற ஒரு சூழ்நிலை காணப்பட்டது.

பண்டாரநாயகே விமான நிலையத்திலிருந்து மாநாடு நடந்த இடத்திற்கு மன்மோகன் சிங் உள்ளிட்ட இந்திய அதிகாரிகள் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். அனைத்து சாலைகளும் பல மணி நேரத்திற்கு மூடப்பட்டன. பாதுகாப்பு கெடு பிடி காரணமாக கொழும்பில் வசித்து வந்த பலர் வீடுகளை விட்டே வெளியேறியதும் எனக்கு நினைவில் உள்ளது. பிரச்சினை எதுவும் இல்லாமல் சார்க் மாநாடு முடிந்தது.

இந்த பயணத்தின்போது இந்திய அதிகாரிகள், விடுதலைப் புலிகளுடனான போரின் நிலவரம் குறித்தும் முக்கியமாக ஆலோசித்தார்கள். இலங்கை ராணுவ தளபதி பொன்சேகா, கடற்படைத் தளபதி கரன்னகோடா ஆகியோருடன் இந்தியக் குழு ரகசியமாக சந்தித்துப் பேசியது.

இந்த சந்திப்பின்போது சீன மற்றும் பாகிஸ்தான் தலையீடுகள் குறித்து இந்தியத் தரப்பினர் கவலை தெரிவித்தனர். ஆனால் இந்தியா ஆயுத உதவிகளைச் செய்ய மறுத்ததால்தான் சீன, பாகிஸ்தான் உதவியை நாட நேரிட்டதாக இலங்கைத் தரப்பு கூறியபோது இந்தியாவால் அதற்குப் பதிலளிக்க முடியவில்லை என்று இலங்கை அதிகாரி ஒருவர் பின்னர் என்னிடம் தெரிவித்தார்.

இருப்பினும் அதைப் பொருட்படுத்தாத இந்தியா, ராஜபக்சேவிடம் ஒரே ஒரு முக்கிய செய்தியை மட்டும் சற்று உறுதிபட தெரிவித்து விட்டு வந்தது. அது - 2009ல் நடைபெறவுள்ள இந்திய லோக்சபா தேர்தலுக்கு முன்பாக போரை முடித்து விடுங்கள் என்பதுதான்.

தேர்தலின்போது ஈழப் போரின் நிழல் விழுவதையும், அதனால் தங்களது வெற்றி வாய்ப்புகள் பாதிக்கப்படுவதையும் காங்கிரஸ் அரசு விரும்பவில்லை. மேலும், தேர்தல் நேரத்தில் போர் நீடித்துக் கொண்டிருந்தால் அது சரியாக இருக்காது, தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் அரசு பயந்தது.

இந்தியாவின் கவலையைப் புரிந்து கொண்டார் ராஜபக்சே. அதேசமயம், அவர் காலக்கெடு எதையும் நிர்ணயித்துக் கொள்ள விரும்பவில்லை. அதேசமயம், நடவடிக்கைளை விரைவுபடுத்துவதாக அவர் உறுதியளித்தார்.

இதையடுத்து மேனன், நாராயணன், விஜய் சிங் கோஷ்டியினர், பாதி கோரிக்கைள் நிறைவேறிய அரை குறை திருப்தியுடன் டெல்லி திரும்பினர்.

3ஆம் பக்கம் >>

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X