• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண் குழந்தைகளுக்காக தேமுதிகவின் புதிய திட்டம்- விஜயகாந்த் தொடங்கினார்

By Staff
|

Vijayakanth
சென்னை: ஏழைப் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் நலனுக்காக பெண்கள் நாட்டின் கண்கள் என்ற பெயரில் புதிய திட்டத்தை தேமுதிக தொடங்கியுள்ளது.

இத்திட்டத்தை கட்சித் தலைவர் விஜயகாந்த் தொடங்கி வைத்தார். திட்டத்தின் தொடக்கமாக தனது பிறந்த நாளின்போது பிறந்த 320 ஏழை பெண் குழந்தைகளின் பெயரில் வங்கியில் ரூ. 33 லட்சம் டெபாசிட் செய்யப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த தலா 10 பெண் குழந்தைகள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 10 குழந்தைகள் இந்தத் திட்டத்தால் பலன் பெறவுள்ளன.

இது குறித்து விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கை:

தேமுதிக தொண்டர்கள் ஆண்டுதோறும் எனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகின்றனர். அன்று ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர, நம்மால் ஆன நற்பணிகளை செய்து வருகிறோம்.

இந்த ஆண்டும் வரும் 25ம் தேதி எனது பிறந்த நாளையொட்டி சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள மக்களின் மேம்பாட்டுக்கான பணிகளை செய்யத் திட்டமிட்டுள்ளேன்.

எம்ஜிஆரின் பெயரால் இயங்கும் ராமாபுரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் காதுகேளாதோர் பள்ளிக்கு இந்த ஆண்டும் ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும்.

மேலும், கொரட்டூரில் இயங்கும் அருணோதயம் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளிக்கும், சைதாப்பேட்டையில் உள்ள கருணை இல்லம் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளிக்கும், கூடுவாஞ்சேரி நந்திவரத்திலுள்ள பிரபாவதி அறக்கட்டளையின் ஊனமுற்றோர் சிறப்பு பள்ளிக்கும் தலா ரூ.25 ஆயிரம் அளிக்கப்படும்.

விருத்தாசலம் தொகுதியில் ஏழை பெண்களுக்கு 10 தையல் எந்திரங்கள் இலவசமாகத் தரப்படும்.

பாசத்தில் தலைசிறந்தது தாய்ப்பாசம் என்பர். ஆனால் நான்கு நாட்களுக்கு முன்பு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை தவிக்க விட்டுவிட்டு பெற்ற தாய் மாயமாகி விட்டார் என்ற திடுக்கிடும் செய்தியை பார்க்கிறோம்.

பெண் சிசுக்கொலைக்கு தமிழ்நாட்டில் பஞ்சமில்லை. பெண் குழந்தைகள் பிறந்தாலே பெற்றோர்கள் அதைப் பெரும் சுமையாக கருதுகின்றனர்.

ஒரு பெண் குழந்தையை நல்ல முறையில் வளர்க்க வேண்டும், படிக்க வைக்க வேண்டும், பாதுகாப்பு தரவேண்டும், வேலையில் சேர்க்க வேண்டும், நல்ல இடம் தேடி மணம் முடிக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணுகின்ற பெற்றோர்கள் இந்தப் பெருஞ்சுமைக்கு பதிலாக கருவிலேயே கண்டுபிடித்து பெண் சிசுவை கலைத்து விடுகின்றனர்.

இந்த அவலநிலையை உணர்ந்து தான் 2006ம் ஆண்டே சட்டசபை தேர்தல் அறிக்கையிலேயே, ஏழைக் குடும்பங்களில் பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் வங்கியில் ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும் என்று சொன்னேன்.

இதன் மூலம் பெண் குழந்தைகள் வளர்ந்து திருமண வயதை எட்டுகின்ற பொழுது சுமார் ரூ. 2 லட்சத்துக்கு மேல் கிடைக்கும் என்று தெரிவித்தேன். ஏழைக்குடும்பங்களில் பிறக்கும் பெண் குழந்தைகளின் வாழ்க்கைச் சுமையை இது பகிர்ந்து கொள்ளும் முயற்சியாகும்.

வாழ்க்கையில் பெண்களுக்கு ஏற்படும் துன்பங்களைத் துடைத்திட மத்திய - மாநில அரசுகள் இதுவரை எந்த உருப்படியான திட்டங்களும் மேற்கொள்ளவில்லை என்பது உண்மையிலேயே எனக்கு வருத்தத்தை அளிக்கின்றது.

பெண்கள் நாட்டின் கண்கள்...

ஆகவே, என் சக்திக்கு ஏற்ப இந்த திட்டத்தை நானே செயல்படுத்துவது என தீர்மானித்து இந்த ஆண்டு எனது பிறந்த நாளையொட்டி பெண்கள் நாட்டின் கண்கள்' என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளேன்.

இதன்படி எனது பிறந்தநாளன்று அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஏழை பெண் குழந்தைகளுக்கு மாவட்டத்திற்கு 10 குழந்தைகள் என்ற விகிதத்தில் (சென்னை மாவட்டத்தில் மட்டும் 20 குழந்தைகள்) தமிழ்நாட்டிலுள்ள 31 மாவட்டங்களிலும், புதுச்சேரியில் பத்து குழந்தையின் பெயரிலும் தலா ரூ.10 ஆயிரம் என்ற விகிதத்தில் 32 இடங்களிலும் 33 லட்ச ரூபாய் என்னுடைய சொந்த பணத்தில் டெபாசிட் செய்ய உள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

தொண்டர்களும், நிர்வாகிகளும், கழக அணியினரும் இதே போன்று எனது பிறந்தநாளை முன்னிட்டு அவரவர் சக்திக்கும், வசதிக்கும் ஏற்ப ஏழை குடும்பத்தில் பிறக்கும் பெண்குழந்தைகளுக்கு தங்களால் இயன்ற அளவு நிதி சேர்த்து பெண்களே நாட்டின் கண்கள்' என்னும் இத்திட்டத்தை விரிவுபடுத்துவார்களேயானால் அதுவே, எனது பிறந்தநாளை அவர்கள் விமரிசையாகக் கொண்டாடியதாக நான் பெருமைப்படுவேன்.

ஏழைகள் இல்லாத நாடு...

ஏழைகள் இல்லாத நாடு எங்கள் நாடு என்ற லட்சியத்தை தமிழ்நாடு எய்தும் வரையில் நம் போன்றோர் அவரவர் சக்திக்கேற்ப, வறுமையுற்று வாடிக்கிடக்கும் குடும்பங்களை கைதூக்கி விடுவதையே கடமையாகக் கொள்ள வேண்டுமென்று என்னுடைய பிறந்தநாளில் தாய் உள்ளம் கொண்ட தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என விஜயகாந்த் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X