• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

இரட்டைக் கொலை- பிடிபட்டவர் காவல் நிலையத்தில் திடீர் சாவு

By Staff
|

சென்னை: சென்னையை உலுக்கிய இரட்டை கொலை வழக்கில் பிடிபட்ட கொலையாளி போலீஸ் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனால் இந்த வழக்கு மேலும் பரபரப்பாகியுள்ளது.

சென்னை நீலாங்கரை அருகே உள்ள பனையூர் என்ற இடத்தில் வசித்து வந்த முன்னாள் கப்பல் கேப்டன் இளங்கோவன் மற்றும் அவரது மனைவி ரமணி ஆகியோர் நேற்று இரவு ஒரு மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இத் தாக்குதலில் காயமடைந்த இளங்கோவன் தம்பதியின் மருமகள் வசந்தி, இரு பேரப்பிள்ளைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொலை செய்து விட்டுத் தப்பிச் செல்ல முயன்ற நபரை பொதுமக்கள் வளைத்துப் பிடித்தனர். அந்த நபரை நீலாங்கரை போலீஸார் தங்களது பொறுப்பில் எடுத்தனர்.

பிடிபட்ட நபரின் பெயர் சண்முகராஜன் என்பது தெரிய வந்தது. சைதாப்பேட்டையைச் சேர்ந்த இவர் பிரபல தொழிலதிபர் என்றும், கிரானைட் தொழில் மற்றும் ரியல் எஸ்ட்டேடில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.

நேற்று மாலை பிடிபட்ட சண்முகராஜனை நீலாங்கரை போலீஸார் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். முதலில் சண்முகராஜன் சரியாக பதிலளிக்கவில்லை.

பின்னர் கொலைகளை நான் செய்யவில்லை என்றும், நண்பர்கள் அழைத்ததால் கேப்டன் வீட்டுக்கு சென்றேன் என்றும் கூறியுள்ளார். யார் அந்த நண்பர்கள் என்ற விவரத்தையும் தெரிவித்துள்ளார். இதனால் இந்தக் கொலையில் சண்முகராஜன் தவிர வேறு சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் இளங்கோவனுக்கும் சண்முகராஜனுக்கும் நிலத்தகராறு இருந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதனால் நகை, பணத்துக்காக கொலை நடக்கவில்லை. மாறாக நிலப் பிரச்சினைதான் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

அவரிடம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடந்து கொண்டிருந்தபோது நள்ளிரவு 12.45 மணிக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். பின்னர் அவர் மயங்கி விழுந்து விட்டார்.

உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர் போலீசார். அதன் பின் அடையார் மலர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் சண்முகராஜன்.

பின்னர் காலை 7 மணியளவில் சண்முகராஜனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அடித்துக் கொன்று விட்டனர்-உறவினர்கள்:

இந் நிலையில் சண்முகராஜனுக்கும், இளங்கோவன்- ரமணி கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவரை வேண்டும் என்றே சிக்க வைத்து இப்போது அடித்துக் கொன்று விட்டனர் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அவர்கள் கூறுகையில், எங்கள் குடும்பம் பாரம்பரியமான நல்ல குடும்பம். ராஜன் 2 பேரை சுட்டுக்கொன்று விட்டதாக கூறுகிறார்கள். அவர் மீது எந்த போலீஸ் நிலையத்திலும் எந்த ஒரு வழக்கும் கிடையாது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மார்பிள்ஸ் வரவழைத்து விற்பனை செய்யும் தொழிலை ராஜன் செய்து வந்தார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்தார்.அவர் மனைவி அமுதவல்லி கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார்.

நேற்று காலை அமுதவல்லி மகள் சங்கீதா ராணி (10), மகன் செந்தில்நாதன் (5) ஆகியோரை அழைத்துக் கொண்டு நண்பர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். மதியம் அவர்கள் வீடு திரும்பினார்கள்.

பிறகு தன் நண்பர் காரில் அமுதவல்லியை கல்லூரியில் இறக்கிவிட அழைத்து சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

மாலை 4 மணிக்கு போலீசார் எங்கள் வீட்டுக்கு வந்து விசாரித்தனர். என்ன விஷயம் என்று நாங்கள் போலீசாரிடம் கேட்டபோது அவர்கள் எதுவும் சொல்லவில்லை.

சண்முகராஜனின் தம்பிகள் வெங்கடேஷ், குருமூர்த்தி, அமுதவல்லி மூவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இரவு 9.30 மணிக்கு பிறகுதான் நடந்த சம்பவங்களை எங்களிடம் கூறினார்கள். பிறகு நீங்களே சண்முகராஜனிடம் விசாரியுங்கள் என்றனர். நாங்களும் அவரிடம் இதுபற்றி கேட்டோம். அதற்கு ராஜன், நான் எந்த தப்பும் செய்யவில்லை என்று கதறி அழுதார்.

அவரது வயிற்றில் ரத்த காயங்கள் காணப்பட்டன. கொலை செய்யும் நோக்கத்துடன் சண்முகராஜன் சென்றிருந்தால் அவர்கள் வீட்டு முன்பாக காரை நிறுத்தி இருப்பானா? அவனை யாரோ சதி செய்து தூண்டி விட்டுள்ளனர். இதன் பின்னணியில் பலர் உள்ளனர்.

அவர்களை கண்டுபிடிக்க வேண்டும். அப்படியானால்தான் உண்மையான கொலையாளி யார் என்பது தெரியவரும் என்று கூறினர்.

ஆனால் போலீஸ் தரப்பில் வேறு விதமாக கூறப்படுகிறது. அவர்கள் கூறுகையில், ஏற்கனவே பொதுமக்களால் அடித்து உதைக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில்தான் சண்முகராஜனை நாங்கள் மீட்டோம்.

சண்முகராஜன் 2 பேரை சுட்டுக்கொன்று விட்டு வெளியில் வரும்போது பனையூர் மக்கள் பிடித்துள்ளனர். அந்த இடத்திலேயே அவருக்கு சரமாரியாக அடி உதை விழுந்துள்ளது.

போலீஸார் செல்லும் வரை சண்முகராஜனை கடுமையாக தாக்கியுள்ளனர். மிகக் கடுமையாக அடிக்கப்பட்ட நிலையில்தான் அவர் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

உடல் முழுக்க அவருக்கு உள் காயம் ஏற்பட்டுள்ளது. 12 மணிக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். மக்கள் தாக்கியதி்ல் அவருக்கு மயக்கமும் நெஞ்சு வலியும் வந்தது என்கின்றனர்.

ஆனால், கடுமையாக அடிபட்ட நிலையில் தங்களிடம் சண்முகராஜன் கிடைத்ததாக கூறும் போலீஸார், முதலில் ஏன் அவருக்குசிகிச்சை அளிக்காமல் ஏன் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர் என்ற கேள்விக்கு போலீடாரிடம் பதில் இல்லை.

போலீஸ் காவலில் இருந்த கொலைக் குற்றவாளி திடீர் மரணமடைந்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2வது கஸ்டடி மரணம்...

நீலாங்கரை போலீஸ் சரகத்தில் கடந்த ஒரு வாரத்தில் போலீஸ் பாதுகாப்பில் இருந்த ஒருவர் உயிரிழப்பது இது 2வது சம்பவமாகும்.

கடந்த வாரம் கணவன் மனைவி தகராறு காரணமாக ரமேஷ் என்ற வாலிபரை நீலாங்கரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் வைத்து ரமேஷ் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த நிலையில் தற்போது சண்முகராஜன் உயிரிழந்துள்ளார்.

இரக்கமில்லாமல் சுட்டான்-மருமகள்:

நகை, பணத்தை எடுத்துக் கொடுத்தும் கூட ஈவு இரக்கமில்லாமல் எனது மாமனார், மாமியாரை கொன்று விட்டானே என்று கொலையாளி சண்முகராஜன் குறித்து உயிர் தப்பிய இளங்கோவன்- ரமணியின் மருமகள் வசந்தி கூறியுள்ளார்.

நேற்றைய இரட்டைக் கொலைச் சம்பவத்தின்போது இளங்கோவனின் மருமகள் வசந்தி, அவரது இரு குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதில் வசந்தியின் கழுத்தில் 2 குண்டுகள் பாய்ந்தன. இது தவிர தோள் பட்டையில் ஒரு குண்டும், மார்பில் ஒரு குண்டும் பாய்ந்தது.

அவரது மகள் கழுத்தில் குண்டு உரசி சென்றுள்ளது. குற்றவாளி கத்தியை எடுத்து வீசியதில், வசந்தியின் மகன் காது அருகே கத்தி கிழித்து விட்டது.

மூன்று பேரும் அடையார் மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வசந்தியின் உடலில் பாய்ந்த குண்டுகள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு விட்டன.

அதேபோல அவரது மகள் கழுத்தில் புகுந்த குண்டு சிதறல்கள் அகற்றப்பட்டன. மகன் கழுத்தில் இருந்த காயத்துக்கும் தையல் போடப்பட்டுள்ளது.

உயிர் தப்பிய வசந்தி நடந்த சம்பவம் குறித்து கூறுகையில்,

நானும் என் குழந்தைகளும், வீட்டில் இருந்தோம்.அப்போது வீட்டுக்குள் புகுந்த ஒருவர் மாமனார் மீது துப்பாக்கியால் சுட்டான்.

நாங்கள் பதறியபடி நின்றோம். எனது மாமியார் ரமணி அங்கு துப்பாக்கியுடன் நின்றவரிடம் என்ன வேண்டுமானாலும் தருகிறேன். பணம், நகைகள் எல்லாம் கொடுத்து விடுகிறேன். எங்களை விட்டு விடு என்று சொல்லி அங்கிருந்த பணம், நகை எல்லா வற்றையும் எடுத்து கொடுத்தார்.

அப்போது அவன் துப்பாக்கியை எடுத்து எனது குழந்தை மீது வைத்து மிரட்டினான். உடனே நான் குழந்தையை ஒன்றும் செய்யாதே என் நகையை எல்லாம் கொடுத்து விடுகிறேன் என்று நகைகளை எடுத்து வந்தேன். அதற்குள் மீண்டும் சுட்டான்.

என் மாமனாரும், மாமியாரும் ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். என் குழந்தைகளுக்கும் காயம் ஏற்பட்டது. பணம், நகை எல்லாவற்றையும் கொடுத்தும் இரக்கப்படாமல் சுட்டு விட்டானே என்று கூறி அழுதார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X