இவர்கள் எதை சாதித்தார்கள்?-விஜய்காந்த்
சென்னை: திமுக ஆட்சியில் எதை சாதித்தார்கள். பணம் கொடுத்து தானே ஓட்டு வாங்கினார்கள். இதற்கு பெயர்தான் சாதனையா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
இன்று தனது பிறந்தநாளையொட்டி இந்த தினத்தை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடுவதாக விஜய்காந்த் அறிவித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் ஏழை குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ரூ. 50,000, சைதாப்பேட்டை மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு ரூ. 20,000, கூடுவாஞ்சேரி பிரபாவதி டிரஸ்ட் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு ரூ. 20,000, அருணோதயம் முதியோர் இல்லத்துக்கு ரூ. 25,000 வழங்கினார்.
காலை அரும்பாக்கம் வி.எஸ். முதியோர் இல்லம், திருவான்மியூர் காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் விஜய்காந்த் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கட்சி தொண்டர்களின் வாழ்த்துக்களைப் பெற்றார். அவருக்கு காங்கிரஸ் எம்பி ஜே.எம்.ஆரூண், திரைப்படப் பிரமுகர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய விஜயகாந்த்,
எனது பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சினிமாவில் நடிக்கின்ற காலத்தில் இருந்து கடந்த 25 வருடமாக நான் என்னுடைய பிறந்த நாளன்று நல உதவிகள் வழங்கி வருகிறேன்.
இந்த ஆண்டு தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்றைக்கு பிறக்கும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பெண் குழந்தைக்கு ரூ. 10,000 டெபாசிட் செய்ய இருக்கிறேன்.
ஒரு மாவட்டத்திற்கு 10 குழந்தைகள் வீதம் 33 மாவட்டம் என்று கணக்கெடுத்து 330 குழந்தைகளுக்கு தலா 10,000 ரூபாய் வீதம் வழங்குகிறோம். சில மாவட்டங்களில் அதிகமான பெண் குழந்தை பிறந்தாலும், அவர்களுக்கும் வழங்குவோம். இன்னும் 3 தினங்களில் இத்தொகை வழங்கப்படும்.
கடந்த ஆண்டு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு திட்டத்தை கொண்டு வந்தோம். அத்திட்டம் தற்போது லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பளித்து பூர்த்தியாகிவிட்டது (!!!).
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஜே.எம்.ஆரூண், கார்த்தி சிதம்பரம், பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன், பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்டோர் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். அரசியலுக்கு அப்பாற்பட்டு மாற்று கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தேமுதிக பணம் செலவு செய்யாமல்தான் தேர்தலில் நின்று வருகிறது. பணம் பெறாமல் வாக்களிக்கவும் மக்கள் இருக்கிறார்கள். இடைத் தேர்தல் வெற்றியை திமுக தன் சாதனைக்கும், ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி என்று கூறுகிறது. இவர்கள் எதை சாதித்தார்கள். பணம் கொடுத்து தானே ஓட்டு வாங்கினார்கள். இதற்கு பெயர்தான் சாதனையா? ஜனநாயகத்தைதான் இவர்கள் குழிதோண்டி புதைத்துவிட்டார்களே என்றார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவுடன் காங்கிரஸ் கூட்டணி சேர வாய்ப்புள்ளதா என்று கேட்டதற்கு, எனக்கு காங்கிரஸ் பிரமுகர்கள் அனைவரும் நண்பர்கள்தான். நீங்களே (நிருபர்கள்) அவர்களை என்னுடன் சேர்த்து விடுங்கள். காங்கிரஸ் எங்களுடன் வந்தால் வரட்டும் என்றார்.
இதுவரை தனித்தே போட்டியிட்ட நீங்கள் தேமுதிக தலைமையை ஏற்கும் மற்ற கட்சிகளுடன் கூட்டணிக்கு தயாரா என்று கேட்டதற்கு,
இது தேர்தல் நேரத்தில் கேட்க வேண்டிய கேள்வி. தேர்தல் வரட்டும் அப்போது பார்த்து கொள்ளலாம். இப்போது நிழலுக்கு நாம் மாலை போடக்கூடாது என்றார்.
முதல்வர் கருணாநிதி உங்களை கடுமையாக தாக்கி முரசொலியில் கடிதம் எழுதியுள்ளாரே என்று கேட்டதற்கு,
திமுகவினர் அடுக்கு மொழியில் விளம்பரம் செய்கிறார்கள். அதேபோல் தான் என் தொண்டர்களும் என் பிறந்த நாளுக்காக அடுக்கு மொழியில் விளம்பரம் கொடுத்துள்ளனர். இதைக் கண்டு அவர் பொறாமையில் எழுதியுள்ளார்.
இடைத் தேர்தலின்போது உள்ளாட்சியே வருக, நல்லாட்சி தருக என்றும், ஒளிமயமான எதிர்காலத்துக்கு ஸ்டாலினை ஆதரியுங்கள் என்றும், பாலைவனத்தை சோலைவனமாக்குவோம் என்றும் திமுகவினர் விளம்பரப்படுத்தியிருந்தனர். ஏன் இவ்வளவு நாளும் நல்லாட்சி தரவில்லையா?. ஒளிமயமில்லாமல் இருளில் கிடந்ததா?. நாடு பாலைவனமாகத்தான் இருந்ததா?. திமுகவுக்கு ஒரு நியாயம்? எங்களுக்கு ஒரு நியாயமா?.
எங்களை பார்த்து இப்படி எழுதியிருக்கிறார் என்றால் உண்மையிலேயே எங்கள் கட்சி வளர்ந்துள்ளது. அதை நினைத்து சந்தோஷப்படுகிறேன். முதல்வர் கருணாநிதி, அண்ணா வழியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்கிறார். ஆனால் கண்ணியமும், கட்டுப்பாடும் திமுகவில் கிடையாது. கடமைக்காக பணத்தை கொடுத்து ஓட்டு வாங்குகிறார்கள்.
வேட்பாளரையே விலை கொடுத்து வாங்கும் நிலை வந்துவிட்டது. ஆனால் தேமுதிக வேட்பாளர் யாரையும் விலைக்கு வாங்க முடியாது. இத்தகைய கண்ணியம் மிக்க தொண்டர்கள் கிடைத்திருப்பது நான் செய்த புண்ணியம் என்றார்.