For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ. 20 லட்சம் லஞ்சம்-2 சுகாதார அதிகாரிகள் கைது: ரயிலில் அதிகாரிகளை மடக்கியது போலீஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்சத் தடுப்புப் போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையில், தமிழக அரசின் சுகாதாரத் துறையைச் சேர்ந்த 2 அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 20.33 லட்சம் லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்களிடம் லஞ்சப் பணத்தைத் தருவதற்காக வந்த மேலும் ஒருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அதிகாரிகள் - ஊரக சுகாதாரத் துறையின் மாநில காசநோய் பிரிவு கூடுதல் இயக்குநர் சுப்புராம், கன்னியாகுமரி மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குநர் டாக்டர் செந்தில்வேல் முருகன்.

டாக்டர் செந்தில்வேல்முருகன், கன்னியாகுமரியைச் சேர்ந்த டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பாலமுருகன் மற்றும் மதுரையைச் சேர்ந்த ரவீந்திரா ஆகியோர் பெருமளவில் லஞ்சப் பணத்துடன் சென்னைக்கு வருவதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

சுகாதாரத் துறையில் காலியாக உள்ள லேப் டெக்னீஷியன் மற்றும் லேப் மேற்பார்வையாளர் பதவியைப் பெற வேண்டிய பலர் கொடுத்த பணம் இது.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை வந்து டாக்டர் சுப்புராமிடம் இந்தப் பணத்தைக் கொடுப்பது அவர்களது திட்டம்.

இதையடுத்து அவர்களை கையும் களவுமாகப் பிடிக்க லஞ்ச ஒழிப்புப் பிரிவு இணை இயக்குநர் சுனில்குமார் முடிவு செய்து 2 குழுக்களை நியமித்தார்.

ஒரு குழுவைச் சேர்ந்த போலீஸார், செங்கல்பட்டு ரயில் நிலையம் சென்று நேற்று அதிகாலை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறிக் கொண்டனர். ஏசி பெட்டியில் பயணம் செய்த செந்தில்வேல் முருகன் உள்ளிட்ட 3 பேரின் நடமாட்டத்தையும் அவர்கள் கண்காணித்தபடி வந்தனர்.

டி.எஸ்.பி.க்கள் நடராஜன் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையிலான இன்னொரு குழு தாம்பரத்தில் ரயிலில் ஏறினர்.

பின்னர் ஓடும் ரயிலில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. செந்தில்வேல் முருகன் உள்ளிட்டோரின் பெட்டிகள் சோதனையிடப்பட்டன. அப்போது அதில் ரூ. 17.13 லட்சம் பணம் இருந்தது. இந்தப் பணத்தை டாக்டர் சுப்புராமிடம் கொடுக்கச் செல்வதாகவும், அவர் கசுகாதாரத் துறை விருந்தினர் மாளிகையில் தங்கியிருப்பதாகவும் தெரிவித்தார் டாக்டர் செந்தில்வேல் முருகன்.

இதையடுத்து சுப்புராம் தங்கியிருந்த விடுதிக்கு விரைந்த போலீஸார் அங்கு சோதனையிட்டபோது ரூ. 3.2 லட்சம் பணம் சிக்கியது.

இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, செப்டம்பர் 14ம் தேதி நடைபெறவுள்ள இன்டர்வியூவின்போது பாஸ் போடுவதற்காக விண்ணப்பதாரர்களிடமிருந்து தலா ரூ. 1.5 லட்சம் வசூலிக்கப்பட்ட விவரம் தெரிய வந்தது.

ஓடும் ரயிலில் சிக்கிய மூவரில் டாக்டர் செந்தில்வேல் முருகன் மற்றும் ரவீந்திராவிடம்தான் விண்ணப்பதாரர்கள் பணம் கொடுத்துள்ளனர். உடன் வந்த பாலமுருகனுக்கு இந்தப் பண விவகாரம் தெரியாது. டாக்டர் செந்தில்வேல் முருகன் கூப்பிட்டதால் உடன் வந்துள்ளார். ஆனால் பாலமுருகனின் பையிலும் பணத்தை வைத்துள்ளனர். அதையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ரவீந்திரா புரோக்கர் போல செயல்பட்டுள்ள விவரமும் போலீஸாருக்குத் தெரிய வந்தது.

இதையடுத்து பாலமுருகனை பிணையில் விடுவித்த போலீஸார், டாக்டர் சுப்புராம், செந்தில்வேல் முருகன், ரவீந்திரா ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X