மதுரை: வைகோ-தா.பா கொடும்பாவியை எரித்த காங்.!

சில தினங்களுக்கு முன் தமிழகம் வந்திருந்த காங்கிரஸ் பொதுச் செயலாளார் ராகுல்காந்தி, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தேசிய நதி நீர் இணைப்பு திட்டம் ஆபத்தானது. இதனால் நாட்டில் பேரழிவு ஏற்படும்..." என்றும், ஆனால் இது தனது தனிப்பட்ட கருத்து என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் அனைவரும் காங்கிரசில் சேருங்கள் எனப் பிரச்சாரம் செய்தார்.
மதிமுகபொதுச்செயலாளர் வைகோவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் தா.பாண்டியனும் ராகுல் காந்தியின் இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
நதிநீர் இணைப்பு விஷயத்தில் சிறுபிள்ளைத்தனமாக ராகுல் உளருவதாக வைகோ காட்டமாக விமர்சித்தார். பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மத்தியில் எப்படி கட்சிப் பிரச்சாரம் செய்யலாம் என்றும் கேட்டிருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் வக்கீல்கள் சிலர் மதுரையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். .
மதுரை நீதிமன்றத்தின் முன்பு கூடிய இந்த வக்கீல்கள் வைகோ, தா.பாண்டியன் ஆகியோருக்கு எதிரான முழக்கமிட்டனர். அப்போது திடீரென வைகோ, தா.பாண்டியன் உருவபொம்மைகளை தீவைத்து எரித்தனர். இதனால் மதுரை நீதி மன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டனர். மதுரையின் முக்கியப் பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன், இலங்கை தமிழர் பிரச்சினையில் தா.பாண்டியனின் காரை காங்கிரஸ்காரர்கள் சிலர் எரித்துவிட்டதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது றிப்பிடத்தக்கது.