For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

''போராட்டத்தின் இன்றைய வடிவமே நாடு கடந்த அரசாங்கம்''

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாக எழும் பல்வேறு கேள்விகளுக்கு பதில் தரும் வகையில் 15 கேள்வி- பதில்கள் அடங்கிய விளக்க அறிக்கையை விடுதலைப் புலிகள் அமைப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின் விவரம்:

நாடு கடந்த தமிழீழ அரசுத் திட்டம் அறிவிக்கப்படட பின்னர் பல்வேறு மட்டங்களிலும் இத் திட்டம் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள், விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது நல்ல ஒரு அறிகுறி. நமது அடுத்த காலடிக்கு அத்தியாவசியமானதும் கூட. ஆரோக்கியமான விவாதங்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதில்லை. மாறாகத் தெளிவினையே எற்படுத்தும்.

இப்போது வெளியிடப்படும் இந்த விளக்கம் நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பான கருத்துப்பரிமாற்றத்தை மேலும் வலுப்படுத்த துணைபுரியும் என்று நம்புகிறோம்.

இந்த விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை தற்போது சிந்தனையில் உள்ள விஷயங்களே. இவற்றில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும் நாம் புரிந்து கொள்கிறோம். இதனால், தொடர்ச்சியாக மக்கள் அமைப்புக்களின் கருத்துக்களை உள்வாங்கி; அதற்கேற்ப தேவையான மாற்றங்களைச் செய்து திட்டத்தை நடைமுறைப் படுத்துவோம்.

இத் திட்டம் தொடர்பான தங்கள் கருத்துக்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நல்ல பல ஆலோசனைகளை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம்.

நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழு:

1.நாடு கடந்த தமிழீழ அரசு என்றால் என்ன?

நாடு கடந்த தமிழீழ அரசு தமிழ் மக்களது அரசியல் வேட்கையை உயிர்ப்போடு பேணித் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி எனும் அடிப்படை உரிமைக் கோட்பாடுகளின் வழியாக தமிழீழ மக்களின் விடுதலையினை வென்றெடுப்பதற்கான ஓர் அரசியல் அமைப்பாகும். இது ஒரு புதுமையான எண்ணக் கருவாகும்.

தமது தாயகத்தில் தமிழ் மக்கள் தமது அரசியல் வேட்கைகளையும் உரிமைககளையும் வெளிப்படுத்துவதற்கும் அதற்காகச் செயற்படுவதற்கும் இப்பொழுது எவ்வித வாய்ப்புகளும் இல்லை. இலங்கை அரசு சட்ட அடிப்படையான தடைகள், ராணுவ ஆக்கிரமிப்பு, படுகொலை ஆகிவற்றின் ஊடாகத் தமிழ் மக்களது விடுதலை வேட்கையையும் உரிமைகளையும் ஒடுக்கி வருகிறது.

இந்நிலையில் தமிழீழ நாட்டின் உறுப்பாகிய புலம் பெயர்ந்து வாழும் மக்களுக்கு உள்ள மக்களாட்சி வாய்ப்புக்களைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு செயலுருவம் கொடுப்பதற்காக பாடுபடும் அதியுயர் அரசியல் நடுவமாக இந்த நாடுகடந்த அரசு அமைக்கப்படுகிறது. தாயகத்தில் வாழும் அரசியல் தலைவர்களும் மக்களும் இந்த அரசில் பங்கு பெறுவது நடைமுறைச் சாத்தியமற்றது. எனவே இந்த அரசில் உறுப்புரிமை வகிக்கும் சார்பாளர்கள் புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களிடையே இருந்து மக்களாட்சி முறையில் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த அரசு இலங்கைத் தீவில் இருக்கும் நட்பு சக்திகளுடன் கைகோர்த்துப் பயணிக்கும்.

2. நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்? அதற்கான தேவை என்ன?

ஈழத் தமிழர்களின் சமூக இருப்பு என்பது அவர்களின் அரசியல், பண்பாடு, பொருளாதாரம், வாழ்வியல் ஆகியவற்றின் தனித்துவத்தைத் தக்கவைப்பதிலும் உலகின் ஏனைய சமூகங்களுடன் இணைந்தும் அவற்றிற்கு ஈடாகவும் செயற்படுவதிலுமே தங்கியுள்ளது. இதனை நிலைநாட்டுவதற்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடிய காரணிகளைக் கட்டுப்படுத்தி வெற்றி கொள்வதற்கும் ஏதுவாக ஓர் உறுதியானதும் தன்னாட்சி உரிமையினைக் கொண்டதுமான அரசியல் கட்டமைப்பு தேவையாகும். இத்தேவை 1976ல் வட்டுக்கோட்டைத் தீர்மானமாக வடிவம் பெற்று 1977ம் ஆண்டில் மக்கள் ஆணையாக உறுதிப்படுத்தப்பட்டது. 1985 திம்பு கோட்பாடுகள், 2003 இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரைபு இதற்கு மேலும் வலுச் சேர்த்தன.

கடந்த 60 ஆண்டுகளாக இலங்கையின் அரசியல் கட்டமைப்பு தொடர்ச்சியாக ராணுவ மயப்படுத்தப்பட்டு இப்பொழுது மேலும் கூர்மைப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கள- பௌத்த வல்லாண்மை சமூகத்தினால் இயற்றப்பட்ட அரசியலமைப்பும் சட்டங்களும் ஏனைய தேசிய இனங்களின்; அடிப்படை உரிமைகளை மறுத்துள்ளன. இவை தமிழ் மக்களதும் பௌத்த சிங்களவர் அல்லாத ஏனைய சமூகங்களதும்; அரசியல் தனித்துவத்திற்கும் சமூக இருப்புக்கும் மற்றும் சுதந்திரமான பண்பாட்டு வளர்ச்சிக்கும் மிகப்பெரும் தடைக்கற்களாக இருக்கின்றன.

அத்துடன் தமிழ் மக்கள் தங்கள் அரசியல் வேட்கையைச் சுதந்திரமாகத் தெரிவிப்பதற்கும் அதற்காகக் குரலெழுப்பிப் போராடுவதற்கும் இலங்கைத் தீவின் உள்ளக நிலைமைகள் மிகப்பெரும் தடையாகவும் பேரச்சுறுத்தலாகவும் உள்ளன.

தீவில் வாழும் ஒட்டுமொத்த தமிழரும் அடிமைகளாகவும் திறந்தவெளிச் சிறைச்சாலைகளிற் கைதிகளாகவும் வாழ கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளனர். அதேவேளை சிங்கள அரசுத் தலைவர்களும் கொள்கை வகுப்பாளர்களும் அரசதந்திரிகளும் படைத் தளபதிகளும் இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதுவித சிக்கலும் இல்லை என்றும் அரசியல் தீர்வு தேவையற்றது எனவும் உள்நாட்டிலும் அனைத்துலக நாடுகள் மட்டத்திலும் பொய்ப் பரப்புரை செய்து வருகின்றனர்.

இவற்றை எல்லாம் எதிர்கொண்டு தமிழ்மக்களது அரசியல் தன்னாட்சி உரிமையை வென்றெடுப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை பல்வேறுபட்ட அணுகுமுறைகளைக் கையாண்டு முன்னெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு புலம்பெயர் தமிழ்மக்களது கைகளில் வீழ்ந்துள்ளது. அதனை முன்னெடுப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்டதும் மக்களின் ஆணையைப் பெற்றதுமான ஒரு மக்களாட்சிக் கட்டமைப்பின் தேவை இன்று உணரப்பட்டுள்ளது. அதுவே நாடுகடந்த தமிழீழ அரசு எனத் இப்பொழுது முன்மொழியப்பட்டுள்ளது.

3. நாடு கடந்த அரசுக்கும் புகலிட அரசுக்குமிடையில் வேறுபாடுகள் உண்டா? அல்லது இரண்டும் ஒன்றேதானா?

இவ்விரண்டு அரசுகளுக்கும் இடையே பல பொதுப் பண்புகள் இருந்தாலும் கோட்பாட்டு அடிப்படையில் அவை வேறானவை.

புகலிட அரசு என்பது வெளிநாடுகளுக்கு தப்பியோடும் அரசியல் தலைவர்கள் தமக்கு ஆதரவு அளிக்கக்கூடிய நாடு ஒன்றில் தஞ்சம் புகுந்து அங்கு அமைக்கும் ஓர் அரசாகும். சொந்த நாடு விடுதலை பெறும் பொழுது அவர்கள் நாடு திரும்புவர். புகலிட அரசை அமைக்க குறைந்தளவு ஒரு நாட்டின் ஒப்புதலும் ஏற்புதலும் தேவை. புகலிட அரசு செயற்படுவதற்குப் புலம் பெயர்ந்து வாழும் மக்கள் இருக்க வேண்டிய தேவையில்லை.

நாடு கடந்த அரசு பற்றிய கோட்பாடு கடந்த இரு பத்தாண்டுகளாக சமூக அறிஞர்களது கவனத்தை ஈர்த்து வருகிறது. அது புலம் பெயர்ந்து வாழும் மக்களது நாடு கடந்த வாழ்க்கை முறையோடும் நாடு கடந்த அரசியலோடும் தொடர்புள்ளது.

புலம் பெயர் மக்கள் தாம் வாழும் நாடுகளில் மட்டும் அல்லாது தமது தாயகத்தோடும் வேறு நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தம் மக்களோடும் உறவைப் பேணி வருகின்றனர். இவர்களது வாழ்க்கைமுறை தாம் வாழும் நாடுகளின் எல்லைகளுக்குள் சுருங்கி விடுவதில்லை. நாடுகள் கடந்த ஒரு சமூகமாக இவர்கள் தமது வாழ்க்கையை அமைத்துள்ளனர். தாம் வாழும் நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்ட முறையில் தமது வாழ்வை இவர்கள் அமைத்துக் கொண்டபொழுதும் இவர்களது அரசியல் சமூக பொருளாதார மற்றும் பண்பாட்டு பண்புகளைத் முடிவு செய்வதில் நாடு கடந்த சமூக வெளி முதன்மையான பங்கினை வகிக்கிறது. ஈழத் தமிழரது புலம் பெயர் வாழ்க்கையும் இவ்வாறே உள்ளது.

புலம் பெயர் தமிழ் மக்கள் மட்டுமல்லாது தாயகத்தில் வாழும் தமிழ் மக்களும் நாடுகடந்த தமது தொடர்புகளைப் பேணிய வண்ணம் உள்ளனர். எனவே அம்மக்களும் ஈழத்தமிழரது நாடு கடந்த சமூக வெளியின் உறுப்பாகவே உள்ளனர். ஈழத் தமிழரது அரசியல் இலங்கைத் தீவின் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்குள் சுருங்கி விடவில்லை. அவர்களது அரசியல் இப்பொழுது நாடு கடந்த அரசியலாகவும் மாற்றம் கண்டுள்ளது. பன்முகப்பட்டதும் சமூகநலன்மிக்கதும் மக்களாட்சி அடிப்படையில் கட்டி எழுப்பப்பட்டதுமான தேசியமே தமிழ்த் தேசியம் ஆகும்.

அமைக்கப்பட இருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசு நாடு கடந்த சமூக வெளியில் வாழ்ந்து வரும் தமிழீழ மக்களால் தமிழீழ மக்களது அரசியல் வேட்கைகளை வென்றெடுப்பதற்காக அமைக்கப்படுகிறது. மேலும் தாயகத்திலும் புலத்திலும் வாழும் தமிழீழ மக்களது சமூக, பொருளாதார, பண்பாட்டு மேம்பாட்டையும் இந்நாடு கடந்த அரசு அதன் ஆளுகைக்குள் கொள்ளும்.

மக்களால் மக்களில் தங்கி நிற்கக்கூடிய முறையில் இவ்வரசு அமைக்கப்படுவதால் இதற்கு நாடுகளின் ஒப்புதல் என்பது ஒரு முன் தேவையாக இருக்காது. தமிழ் மக்களிடையே உள்ள பொது அமைப்புகள் இவ்வரசினைத் தாங்கி நிற்கும் தூண்களாக இருக்க வேண்டும். மக்களில் தங்கி நின்றவாறே அனைத்துலக அரங்கில் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்களின் தேசியச் சிக்கலுக்கு அரசியல் தீர்வுகாண்பதற்கு அனைத்துலக நாடுகளினதும் மக்களினதும் ஆதரவை இவ்வரசு திரட்டும். மேலும் இவ் அரசு தமிழீழ நாட்டின் விடுதலைக்காக அரசியல் மற்றும் அரசதந்திர வழிமுறைகள் ஊடாகப் போராடும்.

4. நாடு கடந்த அரசு உருவாகிவிட்டதா? இல்லையெனில் அது எவ்வாறு உருவாக்கப்படும்? நாடு கடந்த அரசை உருவாக்கும் பணி எவ்வாறு நடைபெறும்?

நாடு கடந்த அரசு இன்னும் உருவாகவில்லை. அதனை உருவாக்குவதற்கான நிறைவேற்றுச் செயற்குழு அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த நிறைவேற்றுச் செயற்குழுவின் உறுப்பினர்களில் இதன் இணைப்பாளரான திரு ருத்ரகுமாரனின் பெயர் மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு கடந்த அரசை உருவாக்குவதற்கான செயற்பாட்டுக் குழுவினை நாடுகள் தோறும் உருவாக்கும் பணிகள் இப்பொழுது நடைபெற்று வருகின்றன. இச்செயற்பாட்டுக் குழுவில் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ளோரை இப்பொழுது இணைத்து வருகிறோம். விரைவில் ஒவ்வொரு நாட்டுக்கும் உரிய செயற்குழு பற்றிய விளக்கங்களை அறிவிப்போம். இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள மதிவுரைக் குழு உருவாக்கற் செயற்குழுவுக்கு மதிவுரை வழங்குவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது.

இந்நாடுகள் தழுவிய செயற்பாட்டுக் குழுக்கள் தத்தமது நாடுகளில் தமிழ் அமைப்புக்களோடும் தமிழ் மக்களோடும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இந்தத் திட்டத்திற்கு ஆதரவு திரட்டும். தமிழரிடையே மட்டுமன்றி தமது நாடுகளில் உள்ள பொதுச் சமூகத்தின் ஆதரவையும் இவ்வரசை அமைக்கும் திட்டத்திற்குத் திரட்டும். மேலும் தத்தமது நாடுகளின் அரசியல் தலைவர்களதும் அரசுகளதும் ஆதரவை இந்நாடுகடந்த அரசு அமைக்கும் முயற்சிக்குத் திரட்டும் செயற்பாடுகளிலும் இச்செயற்குழு ஈடுபடும். முசுலிங்கள்;, இந்திய அறிவாளிகள் ஆகியோரை உள்வாங்கி மதியுரைக் குழு விரிவுபடுத்தப்படும்.

தமிழரிடையே இயங்கும் மக்கள் அமைப்புக்களது துணையோடும் நன்மதிப்புப் பெற்ற ஒரு நிறுவனத்தோடு இணைந்தும் ஓவ்வொரு நாட்டிலும் வாழும் ஈழத்தழிழ் மக்களது வாக்காளர் பட்டியல் ஆக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு உருவாக்கப்பெற்ற வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் அனைத்துலக நெறிமுறைகளுக்கு அமைய சுதந்திரமான தேர்தல் குழு அமைக்கப்பட்டுத் தேர்தல்கள் நடத்தப்பட்டு நாடு கடந்த அரசுக்கான மக்கள் பேராளர்கள் தெரிவு செய்யப்படுவர். தெரிவு செய்யப்படும் பேராளர்கள் தம்மை அரசியலமைப்பு அவையாக மாற்றிச் சட்டச் சிறப்புக் குழுவின் உதவியோடு மக்கள் அமைப்புகளின் பரிந்துரைகளை உள்வாங்கி நாடு கடந்த அரசு தொடர்பான யாப்பை எழுதுவர்.

(தொடரும்..)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X