ஊனமுற்ற வாலிபருக்கு உதவுவதாக ரூ. 2 லட்சம் மோசடி
தென்காசி: புளியங்குடியில் ஊனமுற்ற வாலிபருக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வாங்கி தருவதாக கூறி ரூ. 2 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவி மற்றும் அவர்களது மகன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புளியங்குடி அருகேயுள்ள துரைசாமியபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் லட்சுமணன். கூலி தொழிலாளி. இவரது மனைவி காசிமணி. இவர்கள் இருவரும் புளியங்குடி டிஎன் புதுக்குடி வேதக் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் மனைவி துரைச்சியிடம் முள் மரங்கள் வெட்டும் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு அழைக்க துரைச்சி லட்சுமணன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீ்ட்டில் இருந்த அவர்களது ஊனமுற்ற மகன் கனகராஜை பார்த்துள்ளார்.
பின்னர் துரைச்சி தான் அதிமுகவில் மாவட்ட மகளிரணி செயலாளராக இருப்பதாகவும் ஜெயலலிதாவிடம் உங்களது மகனுக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதையடுத்து லட்சுமணனும், காசிமணியும் அருகில் இருந்தவர்களிடம் கடன் வாங்கி துரைச்சியிடம் ரூ.2 லட்சத்து 2 ஆயிரத்தை கொடுத்தனர்.
ஆனால் இதுவரை எந்தவித உதவியும் கிடைக்காததை அடுத்து சந்தேகமடைந்த லட்சுமணும், காசிமணியும் புளியங்குடி போலீஸில் புகார் செய்தனர்.
இதையடுத்து புளியங்குடி இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரணை நடத்தி முருகேசன், துரைச்சி மற்றும் மகன் செல்வம் ஆகிய 3 பேரை கைது செய்து சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
துரைச்சி அதிமுகவில் உறுப்பினராக மட்டுமே உள்ளார். மேலும் எவ்வித பொறுப்பும் வகிக்கவில்லை. ஆனால் மாவட்ட மகளிரணி பொறுப்பில் இருப்பதாக போலியாக விசிட்டிங் கார்டு தயார் செய்து வைத்துள்ளார்.
இந்த விசிட்டிங் கார்டை காட்டி தான் லட்சுமணன், காசிமணியை நம்ப வைத்து மோசடி செய்துள்ளார். அவர் வேறு யாரையும் இது போன்று ஏமாற்றியுள்ளாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.