For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எல்லா நிதியமைச்சர்களுக்கும் பிடித்த மாநிலம் தமிழகம்- பிரணாப்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் எனக்கு மட்டுமல்ல, எல்லா நிதியமைச்சர்களுக்கும் பிடித்தமான மாநிலமாகும் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

சென்னையில் நடந்த அறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில், அண்ணா உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை வெளியிட்டு அவர் பேசுகையில்,

அறிஞர் அண்ணா ஒரு சக்திவாய்ந்த அரசியல் கட்சியின் நிறுவனர் மட்டுமல்ல, பெரும் சமூக சீர்திருத்தங்களை ஏற்படுத்திய திமுக என்ற இயக்கத்தின் அடிநாதம்.

இந்தியாவில் சமூகப் புரட்சிக்கு வித்திட்ட தலைவர்களில் முக்கியமானவர் அண்ணா. சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய தலைவர்களில் அண்ணா குறிப்பிடத்தக்கவர்.

சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர்.

அவர் சிறந்த நாடாளுமன்றவாதியாகவும், ஜனநாயகவாதியாகவும், இலக்கியவாதியாகவும் திகழ்ந்தார். அப்போது மட்டுமல்ல இப்போதும் அவர் நமக்கு வழிகாட்டி வருகிறார்.

1967ம் ஆண்டில் தமிழகம் உள்பட 9 மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆட்சியைப் பிடித்தன. மற்ற மாநிலங்களில் எதிர்கட்சிகள் எல்லாம் கூட்டு சேர்ந்து தான் காங்கிரசுக்குத் தோல்வியை ஏற்படுத்தின.

ஆனால் தமிழகத்தில் திமுக தனியாக காங்கிரசுக்கு அதிர்ச்சித் தோல்வியைத் தந்தது. அதற்குக் காரணம் அண்ணா.

அந்தத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியடைந்தது. அப்போது மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சிதான் கோலோச்சியிருந்தது. ஆனால், அந்த தேர்தலில் காங்கிரசின் அஸ்திவாரமே ஆடியது போல் ஆகிவிட்டது.

அண்ணாவில் தலைமையிலான திமுக, தனிக்கட்சியாக மெஜாரிட்டியை மட்டும் பெறவில்லை. ஒரு வரலாற்றையே படைத்தது. அதுமுதல், தமிழகத்தில் திராவிட கட்சிகள் மட்டுமே ஆட்சி புரிந்து வருகின்றன. இன்று வரை நிலைக்கும் அளவுக்கு மாபெரும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியவர் அண்ணா.

அண்ணா உறுப்பினராக இருந்த மாநிலங்களவையில் நானும் உறுப்பினராக இருப்பதை எண்ணி பெருமையடைகிறேன்.

நாடாளுமன்றத்தில் அண்ணா பேசப் போகிறார் என்றால் மைய மண்டபத்தில் இருக்கும் எம்.பி.க்கள் அனைவரும் மாநிலங்களவைக்கு விரைவார்கள். அந்த அளவுக்கு அண்ணாவின் பேச்சைக் கேட்பது சுவையான அனுபவமாக இருக்கும்.

அவருக்காக சென்னையில் நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகம் எனக்கு மட்டுமல்ல, எல்லா நிதியமைச்சர்களுக்கும் பிடித்தமான மாநிலமாகும்.

ஏனெனில், இம்மாநிலத்தின் மக்கள் தொகை இந்திய மக்கள் தொகையில் 6 சதவீதம் தான். ஆனால், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிக அதிக அளவிலான பங்களிப்பை அளிக்கும் மாநிலம் தமிழகம்.

அதிகமான நகரமயமான மாநிலமாகவும், அதிக தொழில்மயமான மாநிலமாகவும் விளங்கும் அதேநேரத்தில், தொழில் அமைதி திகழும் மாநிலங்களில் ஒன்றாகவும் திகழ்வது தமிழகத்தின் சிறப்பு.

தமிழகம் சிறந்த இலக்கிய பாரம்பரியமும், சிறந்த மொழியையும் கொண்டிருக்கிறது. 2,500 ஆண்டுகால பழமையான கல்வெட்டுக்களையும், இலக்கிய வரலாற்றையும் பெற்ற மாநிலம் இது.

இந்தியத் திருமகன் அண்ணா உயிரிழந்தபிறகு, 1970ம் ஆண்டில் அவரின் நினைவு தபால் தலையை வெளியிட்டு இந்திய அரசு கெளரவப்படுத்தியது. இன்று, அவரது நூற்றாண்டு நிறைவுவிழாவில், அவரது நினைவு நாணயத்தை அறிமுகப்படுத்தி கெளரவிக்கும் நேரத்தில், அவருக்கு உரிய மரியாதையுடன் அஞ்சலி செலுத்துவதன் மூலம் நம்மை நாமே கெளரவப்படுத்திக் கொள்கிறோம் என்றே அர்த்தம் என்றார் பிரணாப்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X