For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புலிகளாகவே இருந்தாலும் இப்படியா..?-ஜெ கேள்வி!

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: விடுதலைப் புலிகளாகவே இருந்தாலும், வழக்கு விசாரணையே இல்லாமல் அனைவரையும் சுட்டுக் கொல்வது என்ற இலங்கை ராணுவத்தின் செயல் காட்டுமிராண்டித்தனமானது, மனிதத்தன்மையற்றது, நாகரீக கோட்பாடுகளுக்கு எதிரானது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கைத் தமிழர்கள் இலங்கை ராணுவத்தினரால் கொடூரமான முறையில் நடத்தப்படுவது தொடர்பாக இந்தியா மற்றும் வெளி நாடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன.

இளைஞர்களின் ஆடைகளை அகற்றி நிர்வாணமாக்கி அவர்களுடைய கைகளாலேயே கண்களை மூடி விட்டு கால்களை இழுத்துக்கட்டி, ஈவு இரக்கமின்றி சீருடை அணிந்த இலங்கை ராணுவத்தினர் அவர்களை காலால் உதைத்து, பின்னிருந்து தலை வழியாக துப்பாக்கிகளால் சுடுகின்ற காட்சிகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.

கைபேசியின் மூலம் ராணுவ வீரரால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த கோரமான வீடியோ படக்காட்சி, இலங்கையில் மக்களுக்கான விடுதலையுரிமை இல்லை என்பதும் அங்குள்ள தமிழ் மக்கள் இலங்கை ராணுவத்தினரின் காட்டுமிராண்டித்தனமாக கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள் என்ற என்னுடைய கருத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாக உள்ளது.

இந்த ரத்தம் உறைந்த காட்சிகள் இந்தியத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியும், சில புகைப்படங்கள் பெரும்பாலான பத்திரிகைகளில் வெளியிடப்படடும் இலங்கை அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்திய அரசுக்கோ அல்லது தமிழக அரசுக்கோ ஏற்படாதது வியப்பை அளிக்கிறது.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்றும், அங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாகவும் இலங்கை அரசு தெரிவிக்கிறது. மனிதத்தன்மையை வேண்டுமென்றே காலால் போட்டு மிதிக்கக்கூடிய இது போன்ற ஒட்டுமொத்த கொடுமையை எந்த ஜனநாயகமும் அனுமதிக்கவில்லை.

தீவிரவாதத்திற்கோ அல்லது தீவிரவாத அமைப்புகளுக்கோ ஆதரவாக அதிமுக ஒரு போதும் இருந்ததில்லை. தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுவது என்ற பாதையிலிருந்து விலகி தமிழ் மக்களுக்காக போராடுகிறோம் என்று கூறி தனது அரசியல் எதிரிகளை அழித்து தனக்கு ஒத்துவராதவர்களை கொலை செய்து வருகின்ற தீவிரவாத இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் என்றைக்கு மாறியதோ, அன்றிலிருந்து இந்த இயக்கத்தை நான் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறேன்.

இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஒளிபரப்பப்படும் காட்சிகளில் வருபவர்கள் விடுதலைப் புலிகளாக இருந்தாலும், வழக்கு விசாரணையே இல்லாமல் அனைவரையும் சுட்டுக் கொல்வது என்பது காட்டுமிராண்டித்தனமானது, மனிதத்தன்மையற்றது, நாகரீக கோட்பாடுகளுக்கு எதிரானது.

இது, போரின்போது சிறைபிடிக்கப்பட்டவர்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற சர்வதேச சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளது.

வழக்குகள் விசாரணைக்கு வந்தால் அதில் உள்ள அரசியல் தொடர்பு வெளிப்பட்டு விடக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில், காவல் துறையின் கண்காணிப்பில் இருப்பவர்களை கொலை செய்வது, தற்போது தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் 25 மைல் தொலைவில் உள்ள இலங்கைத் தீவில் நிகழ்த்தப்படும் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் குறித்து திமுக அரசு சிறிய அளவிலாவது குரல் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவுக்கு இல்லை.

இருப்பினும் அதிமுகவும், தமிழக மக்களும் இலங்கையில் நடைபெறும் தமிழர்கள் மீதான கொடுமையை இந்திய அரசு தட்டிக் கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அருவருக்கத்தக்க சூழ்நிலையில் மறுவாழ்வு முகாம்களில் வாடிக் கொண்டிருக்கின்ற அப்பாவி இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை மற்றும் மதிப்பை புதுடெல்லியில் உள்ள இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

இலங்கை அரசின் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறலை சர்வதேச அமைப்புகளில் எழுப்பி, இலங்கை அரசாங்கம் அங்குள்ள தமிழர்களை கௌரவத்துடன் நடத்த வேண்டும்.

இல்லையெனில் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அனைத்து நாடுகளும் நிர்ப்பந்திக்கும் வகையில் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்திய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இலங்கையில் நடைபெறும் கொடூரமான சமூக தன்னுரிமை மீறல்களுக்கு எதிராக அதிமுக ஒத்த கட்சிகளுடன் இணைந்து மாபெரும் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X