For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இது உலகத்தமிழ் மாநாடே அல்ல-ஜெயலலிதா

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் அனுமதியில்லாமல், தன்னிச்சையாக கருணாநிதியால் மாநாடு நடத்தப்படுமானால், அது 9வது உலகத்தமிழ் மாநாடு என்ற தகுதியைப் பெற முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை 2010ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தனது அரசு கோயம்புத்தூரில் நடத்தும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருக்கிறார். இதனால் தமிழ் மொழிக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.

முதலாவதாக உலகத்தில் உள்ள அனைத்துத் தமிழர்களும் தற்போது நிலை குலைந்து போய் வேதனையில் இருக்கிறார்கள்.

1966ம் ஆண்டு முதல் உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய மலேசிய தமிழர்கள் இன்று அந்த நாட்டின் இரண்டாம் தர குடிமக்களாக தரம் தாழ்த்தப்பட்டிருப்பதை உணர்ந்து துன்பப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு, தங்களுடைய உணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், மலேசியத் தமிழர்கள் தெருக்களுக்கு வந்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தபோது, அந்த நாட்டு அரசாங்கத்தால் கொடூரமாக அடக்கப்பட்டனர்.

1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய இலங்கைத் தமிழர்கள், இன்று தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகள் முகாம்களில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சுய உரிமைக்கான, சுய நிர்ணயத்திற்கான இலங்கைத் தமிழர்களது போராட்டத்தை, திமுக முக்கிய பங்கு வகிக்கும் இந்திய அரசின் ராணுவ உதவியுடனும், தார்மீக ஆதரவுடனும் தானே இலங்கை அரசு இரக்கமில்லாமல் துப்பாக்கி முனையில் அடக்கியது?.

இலங்கையில் இனப் படுகொலை நடந்து கொண்டிருந்தபோது கருணாநிதி குரல் கொடுக்கவில்லை; சுண்டு விரலைக் கூட அசைக்கவில்லை.

இதற்கு முன்பு நடைபெற்ற எட்டு உலகத் தமிழ் மாநாடுகள், 1966ம் ஆண்டு மலேசிய நாட்டில் உள்ள கோலாலம்பூரிலும், 1968ம் ஆண்டு சென்னையிலும், 1970ம் ஆண்டு பாரீசிலும், 1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்திலும், 1981ம் ஆண்டு மதுரையிலும், 1987ம் ஆண்டு கோலாலம்பூரிலும், 1989ம் ஆண்டு மொரீஷியஸிலும், 1995ம் ஆண்டு ஜனவரி தஞ்சாவூரிலும் நடைபெற்றன. இந்த அனைத்து மாநாடுகளும் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டன.

1995ம் ஆண்டு நான் முதலமைச்சராக இருந்தபோது தஞ்சாவூரில் நடைபெற்ற மாநாட்டை நடத்தியவர் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் தலைவரும், ஜப்பானிய கல்வியாளரும், தமிழ் மொழி குறித்த அதிகாரியுமான பேராசிரியர் நோபோரு கராஷிமா.

இந்த மாநாட்டிற்கான ஏற்பாட்டை மட்டும்தான் எனது அரசு செய்தது. ஆனால், கருணாநிதியின் உலகத் தமிழ் மாநாடு அறிவிப்பில் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம் குறித்து எந்தவித தகவலும் இல்லை.

சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் உலகத் தமிழ் மாநாட்டை நடத்த கருணாநிதிக்கோ அல்லது அவரது அரசிற்கோ எந்தத் தகுதியும் இல்லை. சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் ஆதரவில்லாமல், அனுமதியில்லாமல், தன்னிச்சையாக கருணாநிதியால் 2010ம் ஆண்டு மாநாடு நடத்தப்படுமானால், 9வது உலகத் தமிழ் மாநாடு என்ற தகுதியை அந்த மாநாடு பெற முடியாது.

1995ம் ஆண்டிலிருந்து 14 ஆண்டுகளாக எந்த நாடுமே 9வது உலகத் தமிழ் மாநாட்டை நடத்த முன் வராததற்குக் காரணம், தமிழ் உலகமே கலக்கத்தில், பெருங்குழப்பத்தில், அமளியில் இருந்து வருவதுதான்.

உலகத்தில் உள்ள தமிழர்களின் துயர் துடைக்க கருணாநிதி என்ன செய்தார்?. கருணாநிதியின் கட்சி தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த மத்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது வாய் மூடி மெளனியாக இருந்தது குறித்து கருணாநிதி என்ன சொல்லப் போகிறார்?.

எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக அரசு ஏற்பாடு செய்தது என்ற ஒரே காரணத்திற்காக 1981ம்ஆண்டு மதுரையில் நடைபெற்ற 5வது உலகத் தமிழ் மாநாட்டில் கருணாநிதியும், அவரது திமுக கட்சியும் கலந்து கொள்ளவில்லை.

நான் முதல்வராக இருந்தபோது 1995ம் ஆண்டு எனது அரசின் ஏற்பாட்டில் தஞ்சாவூரில் நடைபெற்ற 8வது உலகத் தமிழ் மாநாட்டிலும் இதே நிலையைத்தான் கடைபிடித்தார் கருணாநிதி.

இதுபோன்ற அரசியல் நாகரீகத்தை உலகத் தமிழ் மாநாடுகளில் புகுத்திய கருணாநிதி, உலகத்தில் வாழும் தமிழர்கள் அனைவரும் எல்லாவற்றையும் மறந்து, கோயம்புத்தூரில் தான் நடத்தும் கேலிக்கூத்தான மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X