• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா!

By Staff
|

நியூயார்க்: ஆசன வாயில் குண்டு வைக்கும் விநோத பழக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளனராம் அல் கொய்தா தீவிரவாதிகள். இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குழப்பமடைந்துள்ளன.

இந்தக் குழப்பத்திற்குக் காரணம், இப்படி ஆசன வாயில் வைக்கப்படும் குண்டை அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க முடியாது என்பதால்தான்.

தேங்காயில் பாம் வச்சுட்டாங்க என்று ஒரு படத்தில் கவுண்டமணி பேசுவார். அதுவரை அறியப்படாத விஷயம் என்பதால் அந்த டயலாக் ரொம்பவே பாப்புலர் ஆனது. அதேபோல இப்போது யாரும் இதுவரை கேள்விப்படாத வகையில் மிக விநோதமான முறையில் குண்டு வைக்கும் வேலையை அல் கொய்தா அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆசன வாயில் குண்டு வைப்பதுதான் அல் கொய்தாவின் புதிய டெக்னிக். மனித வெடிகுண்டாக தேர்வு செய்யப்படும் நபரின் ஆசன வாய்க்குள் இந்த குண்டை செருகி விடுகின்றனராம். இதை அவ்வளவு எளிதாக ஸ்கேனர்கள் மூலமோ அல்லது மெட்டல் டிடெக்டர் மூலமோ கண்டுபிடிக்க முடியாது என்பதால் இந்த நூதன வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.

இப்படி ஆசன வாயில் குண்டும் வைக்கும் வழக்கத்திற்கு அல் கொய்தா மாறியிருப்பது கடந்த மாதம்தான் தெரிய வந்தது.

கடந்த மாதம், அப்துல்லா ஹசன் தலி அல் அசிரி என்ற தீவிரவாதி, சவூதி இளவரசர் முகம்மது பின் நயப்பின் அரண்மனைக்குள் சென்றான். சவூதி இளவரசரைக் கொல்லும் நோக்கத்துடன் சென்ற அவன் தனது ஆசன வாயில் திணித்து வைக்கப்பட்டிருந்த குண்டை வெடிக்கச் செய்தான்.

ஆனால் அவன் மட்டும் இதில் உயிரிழந்தான். அவன் இருந்த இடம் சற்று சேதமடைந்தது. ஆனால் இளவரசருக்கோ அல்லது அவருடன் இருந்த ஏராளமான பேருக்கோ எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இந்த குண்டுவெடிப்பில், மனித வெடிகுண்டு நபரின் இடுப்புக்குக் கீழ் முற்றிலும் சிதைந்து போனது.

இவன் ஒரு மனித வெடிகுண்டு என்று மட்டுமே அப்போது பாதுகாப்புப் படையினருக்குத் தெரிய வந்தது. ஆனால் உடல் சிதறாமல் எப்படி இடுப்புப் பகுதிக்குக் கீழ் மட்டும் சிதைந்தது என்பது புரியாத புதிராக இருந்து வந்தது.

இந்த நிலையில் அல் கொய்தாவினரின் ஒரு வீடியோவைக் கைப்பற்றி பார்த்தபோதுதான் மனித வெடிகுண்டாக வந்த நபர் தனது ஆசன வாயில் குண்டை வைத்திருந்தது தெரிய வந்தது.

அந்த வீடியோவில், சம்பந்தப்பட்ட நபரின் ஆசன வாயில் வெடிகுண்டு வைக்கப்படுவது விளக்கிக் காட்டப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 3 இன்ச் நீளமே உடைய குண்டை அவனது ஆசன வாயில் திணித்து அனுப்பியுள்ளனர்.

அல் கொய்தாவின் இந்த நூதன குண்டுக்கு 'கீஸ்டர் பாம்' என்று பெயர் வைக்கப்பட்டு பிரபலமாகி விட்டது. அல் கொய்தாவின் புதிய வகை ஆயுதமாக இது கருதப்படுகிறது.

மனித உடலுக்குள் குண்டு வைக்கப்படுவதால் அதை எளிதாக கண்டுபிடிக்க முடியாது. வெடிகுண்டு கருவிகள் காட்டி கொடுத்தாலும், அவர்களை முழுமையாக சோதனை செய்தாலும் கூட குண்டு இருப்பது தெரியாது.

'அந்த' இடத்தில் குண்டு வைக்கப்பட்டிருக்குமா என்ற சந்தேகம் யாருக்குமே வராது. மேலும் அங்கு குண்டு இருக்கிறதா என்பதை சோதனையிடவும் முடியாது. இப்படி இயற்கையாக உள்ள சிக்கலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு 'அந்த' இடத்தில் குண்டு வைக்கும் நூதன முறையை அல் கொய்தா கண்டுபிடித்துள்ளது.

ஆனால் இந்த வித்தியாச குண்டால் பெரும் சேதத்தை ஏற்படுத்த முடியாது. காரணம், இதன் அளவு மிகச் சிறியதாக இருப்பது.இருப்பினும், விமானத்தில் ஏறிக் கொண்டு இந்த குண்டை வெடிக்கச் செய்தால் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்த முடியும் என்பதால் வல்லரசு நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் சற்று பீதியடைந்துள்ளன.

இந்தப் புதிய வகை மனித வெடிகுண்டு குறித்து எங்களுக்குத் தெரியும். இதைக் கண்டுபிடிக்கத் தேவையான அனைத்து வகை சோதனை முறைகளையும் நாங்கள் கைவசம் வைத்துள்ளோம்.

விமான பயணிகளின் அசைவுகளை வைத்து அவர்களில் சந்தேகத்திற்கிடமானவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்த முடியும். இதுபோன்ற குண்டுகளைப் பொருத்திக் கொண்டு வருவோரால் இயல்பான நிலையில் இருக்க முடியாது.

எனவே அவர்களின் நெளிவுகளை வைத்து எளிதில் அடையாளம் காண முடியும் என நம்புகிறோம். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று டல்லாஸ் பாதுகாப்பு அதிகாரி ஆன்ட்ரியா மெக்காலி தெரிவித்துள்ளார்.

புளோரிடாவை சேர்ந்த வெடிபொருள் ஆராய்ச்சி அகாடமியை சேர்ந்த சான்டி ஸ்டிராஸ் கூறுகையில்,

இது போன்று குண்டுகளை உடலுக்கு வைத்திருப்பவர்களுக்கு அப்பகுதியில் வலி இருக்கும். இதை வைத்து அவர்களை கண்டுபிடித்துவிடலாம். மேலும் உடைகளைக் கழற்றியும் சோதனை போடலாம். ஆனால் அனைத்து பயணிகளிடமும் இப்படி செய்தால் அவர்களின் கோபத்தை சம்பாதிக்க நேரிடும் என்றார்.

மிசெளரி பல்கலைக்கழக ஆய்வாளரும், வெடிபொருள் நிபுணருமான பால் ஒர்சி கூறுகையில், இந்த வெடிகுண்டால் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை. வெடிகுண்டு பொருத்திய நபர் யாரையாவது கட்டிப் பிடித்துக் கொண்டால் மட்டுமே அவருக்கு ஆபத்து ஏற்படும். மற்றபடி வெடிகுண்டு பொருத்தப்பட்ட நபர்தான் பெரும் சேதத்தை சந்திப்பார்.

மேலும், இந்த வெடிகுண்டை ரிமோட் கன்ட்ரோல் மூலம் மட்டுமே இயக்க முடியும். அதாவது சவூதி சம்பவத்தில் வெடிகுண்டு பொருத்திய நபரின் உடலில் பொருத்தப்பட்ட குண்டை இன்னொரு நபர் செல்போன் மூலம் இயக்கி வெடிக்கச் செய்தார்.

கிட்டத்தட்ட செல்போன் மூலமாக இதை இயக்கும் வகையில்தான் அதை உருவாக்கியுள்ளனர். எனவே விமானத்தில் பயணிகளை அனுமதிக்கும் முன்பாக அனைவரின் செல்போன்களையும் வாங்கி வைத்துக் கொண்டால் பிரச்சினையைத் தவிர்க்க முடியும் என்கிறார்.

இதுவரை இப்படிப்பட்ட நூதன குண்டுவெடிப்பு சவூதியில் மட்டுமே நடந்துள்ளதால் யாரும் பீதி அடையத் தேவையில்லை என்பது ஒர்சியின் கருத்து.

எப்படியெல்லாம் உட்கார்ந்து யோசிக்கிறாங்க..?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X