For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உடையும் அபாயத்தில் ஸ்ரீசைலம் அணை - நீரில் மிதக்கும் கர்னூல்

Google Oneindia Tamil News

Srisailam Dam
ஹைதராபாத்: ஆந்திர மாநில வெள்ள நிலையில் லேசான முன்னேற்றம் காணப்பட்டாலும் இன்னும் பெரும் ஆபத்து நீங்கவில்லை. கர்னூல் நகரமும், விஜயவாடா நகரமும் வெள்ள நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன.

ஆந்திர மாநிலத்தில் கன மழை கொட்டி வருகிறது. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கர்னூல் மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

மூழ்கி வரும் கர்னூல்...

மழை, வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது கர்னூல் நகரம். அங்கு 8 அடி அளவுக்கு தண்ணீர் நிற்பதால் மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

கர்னூல் நகரில் கடந்த இரண்டு நாட்களாகவே மின்சாரம் இல்லை. உணவு, குடிநீரும் இல்லை. நகர் முழுவதும் மக்கள் தங்களது வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். அப்படிப் போக முடியாதவர்கள் வீடுகளின் மொட்டை மாடிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

கீழே 8 அடி அளவுக்கு தண்ணீர் நிற்பதால் யாரும் தண்ணீரில் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உடையும் நிலையில் ஸ்ரீசைலம் அணை...

நகரில் உள்ள 5 லட்சம் பேரையும் பத்திரமான முறையில் வெளியேற்ற நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும், ஸ்ரீசைலம் அணை கிட்டத்தட்ட உடையும் அபாயத்தை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதால் கர்னூல் மக்களின் நிலை பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருப்பதி, பெங்களூர், புட்டபர்த்தி ஆகிய இடங்களிலிருந்து நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கர்னூல், மகபூப் நகர், குண்டூர், கிருஷ்ணா மாவட்டங்களில் இதுவரை 2 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நாசமடைந்துள்ளன.

கடந்த 3 நாள் மழையில் இதுவரை 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை. 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீசைலம் அணையின் நீர் மட்டம் இன்று காலை 895 அடியாக இருந்தது. அதன் முழுக் கொள்ளலவை விட இது 10 அடி அதிகமாகும்.

அணைக்கு விநாடிக்கு 11 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 13 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதுதவிர துங்கபத்திரா, ஹந்திரி ஆகிய ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு அபாயகரமானதாக இருக்கிறது. இதனாலும் கர்னூல் நகருக்கு ஆபத்து அதிகரித்துள்ளது.

விஜயவாடாவுக்கும் ஆபத்து...

இதேபோல நாகர்ஜுன சாகர் அணைக்கு பெருமளவில் நீர் வந்து கொண்டிருப்பதால் விஜயவாடா நகருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதுதவிர கிருஷ்ணா, குண்டூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளும் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து விஜயவாடா நகரிலிருந்து மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் முழு வீச்சில் இறங்கியுள்ளனர்.

ராகவேந்திரா பக்தர்கள் மீட்பு...

துங்கபத்திரா நதி கரைகளில் உடைப்பு ஏற்பட்டதை அடுத்து ராகவேந்திர சுவாமி மடம் உள்ள மந்த்ராலயம், தண்ணீரில் மூழ்கியுள்ளது. அங்கிருந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அவர்களாகவே இடம் பெயர்ந்து சென்றுள்ளனர். மந்த்ராலயம் மடாதிபதி ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார். 15 பக்தர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

மந்த்ராலயம் தொகுதி எம்.எல்.ஏ பாலநாகி ரெட்டியும் வெள்ளத்தில் சிக்கி தனது வீட்டின் மாடியில் சிக்கித் தவித்து வருகிறார். அவருடன் ஏராளமான மக்களும் மாடிகளில் ஏறி தப்பி தவித்து வருகின்றனர்.

மந்த்ராலயத்திற்கும், ஆந்திராவின் பிற பகுதிகளுக்கும் இடையிலான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

மந்த்ராலயத்தில் 9 அடி அளவுக்கு தண்ணீர் நிற்கிறது.

துங்கபத்ரா ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கர்னூல் நகரம் கிட்டத்தட்ட மூழ்கும் நிலை காணப்படுகிறது. ஆற்று வெள்ளம் நகருக்குள் பாய்ந்து கொண்டிருக்கிறது.

குடிநீர், மின் விநியோகம், தகவல் தொடர்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப் பெருக்கு காரணமாக 20 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பதாக தெரிகிறது. இவர்களை மீட்க ராணுவம் மற்றும் விமானப்படை ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளன.

ஏராளமான படகுகளிலும் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். ஆனால் வெள்ளப் பெருக்கு கடுமையாக இருப்பதால் மீட்புப் பணிகளில் பெரும் சிக்கல் நிலவுகிறது.

இதேபோல மகபூப் நகர் மாவட்டம், விஜயவாடா நகரம் ஆகியவையும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு்ளனர். லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் தண்ணீர் புகுந்து அழித்து விட்டது.

பிரதமர் உதவி - ரோசய்யா தகவல்

இதற்கிடையே, ஆந்திர மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் உறுதியளித்துள்ளதாக ஆந்திர முதல்வர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரோசய்யாவுடன், பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

ஆந்திர வரலாற்றிலேயே ஸ்ரீசைலம் அணைக்கு பெருமளவில் தண்ணீர் வருவதும், பெருமளவில் தண்ணீர் வெளியேறுவதும் இதுவே முதல் முறை என்றும் ரோசய்யா தெரிவித்துள்ளார். இதனால்தான் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோருடனும் ரோசய்யா பேசி உதவிகள் கோரியுள்ளார்.

சோனியா காந்தியும் ஆந்திர நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறார். மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவானை தொடர்பு கொண்ட அவர் ஆந்திராவுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஆந்திரா, கர்நாடகத்தில் 140 பேர் பலி...

கர்நாடகாவில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கொடிய மழைக்கு கர்நாடகாவின் ஆறு வடக்கு மாவட்டங்களில் மட்டும் 104 பேர் இறந்துள்ளனர்.

அதிகபட்சமாக பிஜப்பூர் மாவட்டத்தில் 29 பேர் இறந்துள்ளனர். குல்பர்கா 13, ராய்ச்சூர் 11, கோப்பல் 10, பாகல்கோட் 10, தாவங்கரே 9, பெல்லாரி 8, பெல்ஹாம் 6, காடக் 5, பிடார் 2, சிக்பல்லாபூர் மாவட்டத்தில் ஒருவர் பலியாகியுள்ளனர்.

இரு மாநிலங்களிலும் சேர்த்து இதுவரை 140 பேர் பலியாகியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X