For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்த ஆண்டு மதுரையில் அண்ணா பல்கலை - அழகிரி

Google Oneindia Tamil News

மதுரை: அண்ணா பல்கலைக்கழகம் அடுத்த ஆண்டு மதுரையில் தொடங்கப்படும் என்று மத்திய ரசாயணத் துறை அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

மறைந்த கக்கன் நூற்றாண்டு விழா அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் தும்பைப்பட்டியில் தமிழக அரசின் சார்பில் நடந்தது. விழாவுக்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தலைமை தாங்கினார். ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி முன்னிலை வகித்தார்.

அமைச்சர் மு.க.அழகிரி, கக்கன் உருவப்படத்தை திறந்து வைத்தார். கக்கன் நூற்றாண்டு விழா தோரண வாயிலுக்கு அடிக்கல்லையும் அவர் நாட்டினார். விழாவில் 1,229 பயனாளிகளுக்கு ரூ.1.32 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அழகிரி பேசுகையில், கக்கனை பாராட்டினால் அந்த பாராட்டு எனக்கும் பொருந்தும் என்று கருதுகிறேன். அதற்கு காரணம் நான் அவரது சொந்தக்காரன். கக்கனும், பேரறிஞர் அண்ணாவும் எளிமையாக வாழ்ந்தவர்கள். பெருந்தலைவர் காமராஜர், பக்தவத்சலம் ஆகியோரது அமைச்சரவையில், கக்கன் பணியாற்றி இருக்கிறார்.

இந்த பகுதியில் அவர் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக இருந்து பல்வேறு பணிகளை செய்திருக்கிறார். அவர் விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்து செய்திட அவரது ஊழியனாக நான் பணியாற்றி வருகிறேன். காமராஜர் காலத்தில் வைகை அணை அமைக்கப்பட்டது. கக்கனின் முயற்சியால் மேலூரில் தொடங்கப்பட்ட நூற்பாலை இன்றைக்கு மூடிக்கிடக்கிறது.

அந்த நூற்பாலை உள்ள இடத்தில் கிரானைட் பாலீஷ் செய்யும் நிறுவனம் தொடங்கப்பட உள்ளது. 54 ஏக்கர் நிலப்பரப்புள்ள அந்த இடத்தில் கூட்டுறவுத்துறை மூலமாக 20 ஏக்கரில் அந்த தொழிற்சாலை 3 மாத காலத்தில் அமைக்கப்படும். அதன்மூலம் மேலூர் பகுதியை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இங்கு தியாக சீலர் கக்கன் நூற்றாண்டு விழா திருமண மண்டபம் கட்டுவதற்கு முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். விரைவில் திருமண மண்டபம் கட்டப்படும்.

மதுரையில் அண்ணா பல்கலைக்கழகம் அடுத்த வருடம் முதல் தொடங்கப்பட உள்ளது. 45 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உறங்கான்பட்டி கிராமக்கோவில் கும்பாபிஷேகம் 55 லட்சம் ரூபாய் செலவில் இந்து அறநிலையத்துறை மூலம் விரைவில் நடைபெறும்.

கிரானைட் குவாரிகளில் இருந்து வரும் கழிவு கற்களை மேலூர் பகுதியில் உள்ள சுய உதவிக்குழுக்கள் மூலம் உடைகல், ஜல்லி கற்களாக உற்பத்தி செய்ய கடந்த 22-ந் தேதி அரசு ஆணை பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரம் தொழிலாளர்கள் பயனடைவார்கள்.

அம்பலகாரன்பட்டியில் வரும் ஆண்டில் அரசு பாலிடெக்னிக் தொடங்கப்படும். ஒரு பெரிய நிறுவனம் மூலமாக மேலூர் பகுதியில் இரும்பு உருக்கு தொழிற்சாலை மற்றும் பெல் துணை நிறுவனம் தொடங்க முயற்சிகள் நடந்து வருகிறது என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X