For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒபாமாவுக்கு நோபல்-அவசர முடிவு: ஜெ

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: பாமக வெளியேறிதால் அதிமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ராமதாசின் அநாகரீக கருத்துகளுக்கு தரம் தாழ்ந்து பதிலளிக்க நான் விரும்பவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.

ஜெயலலிதாவுக்கு தலைமை பண்பும், ஆளுமை திறனும் இல்லை என்று கூட்டணியை விட்டு வெளியேறிய ராமதாஸ் கூறியிருந்தார்.

இந் நிலையில் 4 மாதத்துக்குப் பின் தனது கடசியின் தலைமை அலுவலகத்துக்கு தடபுடல் வரவேற்புடன் வந்த ஜெயலலிதா நிருபர்களிடம் பேசுகையில்,

பாமக வெளியேறிதால் அதிமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ராமதாஸ் என்னை தரம் தாழ்த்தி அநாகரீகமாக விமர்சித்துள்ளார். அ‌தே போல் நானும் தரம் தாழ்ந்து அவரை விமர்சிக்கத் தயாராக இல்லை.

இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுக கூட்டணில் நீடிக்கிறார்களா இல்லையா என்பது குறித்து அவர்கள் தான் விளக்கமளிக்க வேண்டும்.

அதிமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருவது தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும். கூட்டணி குறித்து தேமுதிகவுடன் பேசவில்லை.

இலங்கைக்கு தமிழக எம்.பிக்கள் குழு அனுப்பப்பட்டுள்ளது வெறும் கண்துடைப்பு வேலையாகும். அங்கு தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதே அதிமுகவின் நிலை.

ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது அவசரப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு என்றார் ஜெயலலிதா.

பேருந்து நிலையம்-கருணாநிதியின் பெற்றோர் பெயரா?:

இதற்கிடையே ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு 'முத்துவேலர் அஞ்சுகத்தம்மாள் பேருந்து நிலையம்' என்று பெயர் சூட்டவும், அந்த வளாகத்திற்குள் மேற்படி இருவரின் சிலைகளை நிறுவிடவும் திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும்,

ராதாபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மு.அப்பாவு இதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், 13ம் தேதி திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும், இதற்கு கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் வர இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

இதுபோன்ற செய்தியை கேள்விபட்டதும், திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கும்பிளம்பாடு பகுதியைச் சேர்ந்த 82 வயது தியாகி சுடலைமுத்து நாடார் என்பவர் ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயர் சூட்டப்பட வேண்டும் என்றும், அங்கு அமைக்கப்பட்டு வரும் முத்துவேலர் அஞ்சுகத்தம்மாள் சிலைகளை அகற்றி அதற்குப் பதிலாக பெருந்தலைவர் காமராசர் தியாகி கக்கன்ஜி சிலைகளை நிறுவ வேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டு, தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

இருப்பினும், திமுக சட்டமன்ற உறுப்பினர் மு.அப்பாவு இந்த விஷயத்தில் முனைப்பு காட்டுவதையும், கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் திறப்பு விழாவிற்கு வர இருப்பதையும் பார்த்தால், முத்துவேலர்- அஞ்சுகத்தம்மாள் என்பவர்கள் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களாக இருப்பார்களோ என்ற சந்தேகம் அப்பகுதி மக்களிடையே நிலவுகிறது.

மக்களின் விருப்பத்திற்கு மாறாக ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு முத்துவேலர்- அஞ்சுகத்தம்மாள் பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்படுவதும், அவர்களது சிலைகளை அங்கு நிறுவுவதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. திமுக அரசின் இந்தச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களின் விருப்பப்படி செயல்படுவதுதான் மக்களாட்சி தத்துவத்தின் மாண்பு!. எனவே, மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, 82 வயது தியாகி சுடலைமுத்து நாடாரின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழகத்தில் கல்விப் புரட்சியை உருவாக்கியவரும், நாட்டு சேவைக்கென தன்னை அர்ப்பணித்துக் கொண்டவரும், மக்களின் உள்ளங்களில் நிலையான இடத்தைப் பிடித்தவருமான காமராசரின் பெயரை ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு சூட்ட வேண்டும்.

அங்கு அமைக்கப்பட்டுள்ள முத்துவேலர்- அஞ்சுகத்தம்மாள் சிலைகளை அகற்றிவிட்டு, பெருந்தலைவர் காமராசர், தியாகி கக்கன்ஜி சிலைகளை அங்கு நிறுவ வேண்டும் என்றும் திமுக அரசின் முதல்வர் கருணாநிதியை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

மக்களின் விருப்பத்திற்கு மாறாக திமுக அரசு செயல்படுமேயானால், அதனை எதிர்த்து அதிமுக மாபெரும் போராட்டத்தில் இறங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X