For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம் நோக்கி நகரும் புயல் சின்னம்!- கன மழை பெய்யும்!!

Google Oneindia Tamil News

Satellite image of Tamil Nadu
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தற்போது குமரிக் கடலில் நிலை கொண்டுள்ள இதன் காரணமாக, அனைத்து மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன மழை காரணமாக புதுச்சேரி மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையே வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வந்துள்ளது. தற்போது அது வலுவடைந்து தமிழகத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை பெய்துள்ளது.

நாகப்பட்டனத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அதேபோல கடலூர் மாவட்டம் தொழுதூரில் 15 செமீ மழையும், கொல்லிடத்தில் 14 செமீ மழையும் பெய்துள்ளது.

செம்பரம்பாக்கம், சிதம்பரத்தில் தலா 13 செமீ மழை பெய்துள்ளது. சென்னை விமான நிலையம், சீர்காழியில் தலா 11 செமீ மழை பெய்துள்ளது.

தாம்பரம், நன்னிலம், தரங்கம்பாடி தலா 10 செமீ, கடலூர், பரங்கிப்பேட்டை, காரைக்கால், சேத்தியாதோப்பு, அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, வந்தவாசி தலா 9 செமீ மழையும்,

அண்ணா பல்கலைக்கழகம், செங்கல்பட்டு, மதுராந்தகம், காட்டுமன்னார் கோவில், திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் தலா 8 செமீ மழையும் பெய்துள்ளது.

புதுச்சேரி, பூந்தமல்லி, சோழவரம், குடவாசல், மயிலாடுதுறை, வேதாரண்யம், விராலிமலையில் தலா 7 செமீ மழை பெய்துள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் கன மழை...

அடுத்த 24 மணி நேரத்தில், கடலோரத் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் புதுச்சேரியிலும், உட்புறத் தமிழகத்திலும், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

கடலோரத் தமிழகம், புதுச்சேரியின் சில பகுதிகளில் மிக பலத்த மழைப் பொழிவு இருக்கும். தமிழகத்தின் உட்புறப் பகுதிகளில் ஆங்காங்கு கன மழை இருக்கும்.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டமாக காணப்படும். ஓரிரு முறை லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புண்டு.

நீரில் மூழ்கும் பயிர்கள்..

கன மழை காரணமாக, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை கடலூர் ஆகிய மாவட்டங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் சம்பா பயிர் இளம் பயிர்களாக இருப்பதால் தொடர்ந்து மழை பெய்தால் சம்பா சாகுபடி பெரிய அளவு பாதிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

சென்னையில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

புறநகர்ப் பகுதிகள் பலவும் சேறுமயமாகியுள்ளது. பல பகுதிகளில் இப்போதே தண்ணீர் தேங்கித் தீவுகளாகத் தொடங்கியுள்ளன.

ஆலந்தூர், நங்கநல்லூர், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிமலை, மேடவாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், பெருங்குடி, நீலாங்கரை போன்ற பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் மாலை வரை விட்டு விட்டு கன மழை பெய்ததால் மக்கள் பெரும அவதிக்குள்ளாகினர்.

பல பகுதிகளில் மின்சார வயர்கள் அறுந்து விழுந்ததால் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது.

மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் பலத்த மழை பெய்தது. அங்கு கட்டுமான பணிகளால் ஓடுபாதையில் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி நின்றது. இதனால் பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

ராமநாதபுரம், பாம்பன், மண்டபம், ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடியவிடிய கனமழை பெய்தது. நேற்று காலையும் தொடர்ந்து அடைமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ராமேசுவரத்தில் 81 மில்லி மீட்டர் மழை பதிவானது. இந்த மழையால் பருத்தி, மிளகாய், தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மதுரையில் விட்டு விட்டு தூறல்...

மதுரையிலும், மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் நேற்று விட்டு விட்டு மழை தூறியது. மாலையில் சிறிது நேரம் மழை கொட்டியது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. பல இடங்களில் மிதமான மழையாகவும், சில பகுதிகளில் பலத்த மழையாகவும் பெய்தது.

நெல்லை மாநகர் பகுதிகள், பாபநாசம் மலைப் பகுதிகள், ஆலங்குளம், பாவூர்சத்திரம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அம்பை, சங்கரன்கோவில், முக்கூடல், திசையன்விளை உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சாரல் மழையாக பெய்தது.


தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 117.8 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக திருச்செந்தூரில் 19 மில்லி மீட்டர் மழை பெய்தது.

வீடு இடிந்தது...

இந்த மழையால் திருச்செந்தூர் பகுதியில் ஒரு வீடு முழுவதுமாக இடிந்தது. குலசேகரன்பட்டினம், விளாத்திகுளம், தூத்துக்குடி பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.

நாகர்கோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென தூறல் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த இந்த மழை சில நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. இதனால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது.

திண்டுக்கல், கொடைக்கானலில் நேற்று பகலிலும், மாலையிலும் பலத்த மழை பெய்தது. சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.

திருச்சி, அரியலூர், பெரம்பலூர் - கரூர் மாவட்டங்களில் நேற்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது விட்டு விட்டு லேசான மழை பெய்தது.

புதுக்கோட்டையில் விடுமுறை...

புதுக்கோட்டையில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை தூறியது.

தஞ்சை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களிலும் நேற்று பரவலாக மழை பெய்தது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த மாவட்டத்தில் நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 15.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

புதுச்சேரியில்...

புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

இதையடுத்து இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாநில முதல்வர் வைத்திலிங்கம் அறிவித்துள்ளார்.

திருப்பதியில் கனமழை-பக்தர்கள் அவதி:

அதே போல திருப்பதியிலும் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் விடிய விடிய பலத்த மழை கொட்டியது. இதனால் பக்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் குளிர் காற்றும் வெளியில் நடமாட முடியவில்லை. இதனால் பக்தர்கள் விடுதிகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.
இதனால் திருப்பதி கோவிலைச் சுற்றிய பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X