For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகம் முழுவதும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்

Google Oneindia Tamil News

Heavy rain continues in TN
சென்னை: தமிழகம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. மழைக்கு இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்துள்ளதால் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரம் அடைந்து இருப்பதால், தமிழக கடலோர மாவட்டங்களில் 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

அதேபோல தென் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

தற்போதைய நிலவரம்...

வட கிழக்குப் பருவ மழை தெற்கு கடலோர ஆந்திராவில் மிகவும் தீவிரமாக பெய்து வருகிறது. தமிழகம், கேரளாவில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பலவற்றிலும், உள்புற தமிழகத்தின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் இன்று அதிக அளவாக தூத்துக்குடியில் 17 செமீ, ஓரத்தநாட்டில் 15 செமீ, ராமநாதபுரத்தில் 12 செமீ, செம்பரம்பாக்கம், மதுக்கூர், முத்துப்பேட்டை, தொண்டியில் தலா 8 செமீ, சேத்தியாதோப்பு, வேதாரண்யம், கந்தர்வக்கோட்டை, பரமக்குடி, திருவாடானை, தென்காசியில் தலா 7 செமீ மழை பெய்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில், கடலோரத் தமிழகம், புதுச்சேரி மற்றும் உட்புற தமிழகத்தின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

கடலோரத் தமிழகத்தின் சில பகுதிகளில் கன மழையும், சில பகுதிகளில் மிக பலத்த மழையும் பெய்யும். உட்புறத் தமிழகத்தில் சில இடங்களில் கன மழை பெய்யக் கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்தில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை சில இடங்களில் பெய்யக் கூடும். வானம் மேகமூட்டமாக காணப்படும்.

13 பேர் பலி ..

மழைக்கு இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகில் உள்ள கீழ மூங்கிலடியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த அய்யா பிள்ளை என்பவர் மின்னல் தாக்கி உயிர் இழந்தார். விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம் எண்டியூரை சேர்ந்த விவசாயி ராமலிங்கம், மரக்காணம் வசவன் குப்பத்தை சேர்ந்த வடிவேலு (21), வானூர் நாவல்பாக்கத்தை சேர்ந்த வேலாயுதம் (60) ஆகியோரும் மின்னல் தாக்கி பலியானார்கள்.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரை அடுத்த நாகன்குடியை சேர்ந்த சின்னையன் (65), மின் இணைப்பு குழாயில் தனது கறவை மாட்டை கட்டி இருந்தார். அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்து சின்னையன் பலியானார். மாடும் இறந்தது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே கட்ட ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்த பூமிநாதன் (43) மின்னல் தாக்கி பலியானார். மதுரை மாவட்டம், கே.ஆண்டிப்பட்டியை சேர்ந்த வேல்முருகன் (19) மின்னல் தாக்கி பலியானார்.

புதுக்கோட்டை மாவட்டம் பழைய ஆதன கோட்டையை சேர்ந்த ஆண்டி (53), அவருடைய மனைவி கருத்தம்மாளுடன் நடந்து சென்றபோது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் இருவரும் பலியானார்கள். பெரம்பலூர் மாவட்டம், நத்தமாடிப்பட்டியை சேர்ந்த தாமஸ் (40) மின்னல் தாக்கி பலியானார்.

கடலூரில் வெள்ளக்காடு...

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது. கடலூர் நகர சாலையில் 1 அடி உயரத்துக்கு மழை நீர் தேங்கி நின்றது.

மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து நின்றது. கடலூர் அருகே நூற்றுக்கணக்கான வாழைமரங்கள் முறிந்து விழுந்தன. கடல் கொந்தளிப்புடன் இருந்ததால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை...

தஞ்சை மாவட்டத்தில் நேற்று பரவலாக நல்ல மழை பெய்தது. ரோடுகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா, தாளடி சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மழை பெய்யத் தொடங்கி இருப்பது விவசாயிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகையில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக வாய்க்கால்களில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. பல குளங்கள் நிரம்பி விட்டன.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அதிகபட்சமாக 78 மில்லிமீட்டர் மழை பதிவானது. பலத்த மழை காரணமாக நேற்று தஞ்சை, திருவாரூர், நாகை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

சென்னையில் ரயில்கள் தாமதம்...

மழை காரணமாக பல ரயில் நிலையங்களில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இதனால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூர் வரும் நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் உள்பட அனைத்து ரயில்களும் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக வந்தன.

கும்மிடிப்பூண்டி அருகே மழை காரணமாக ரயில்வே சிக்னல் பழுதடைந்தது. இதனால் வடமாநிலங்களில் இருந்து சென்டிரல் வரக்கூடிய அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால், சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விடிய விடிய மழை ...

சென்னையில் நேற்று விடிய விடிய பெய்த மழையால் சுரங்கபாதையில் பஸ்கள் சிக்கிக்கொண்டன. மரங்கள் வேராடு சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நேற்று காலையிலும் விட்டுவிட்டு மழை பெய்ததால் சென்னை நகர மக்களின் மாமூல் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளி-கல்லூரிகளுக்கு மாணவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கிநின்றதால் அந்த வழியாக சென்ற வானங்கள் மெதுவாக சென்றன.

வடசென்னை பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பெரம்பூர், மூலக்கடை, கொடுங்கைiர், எம்.பி.கே. நகர் பகுதிகளில் வசிப்பவர்கள் நகரின் மற்ற பகுதிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் தவித்தனர். இதன் காரணமாக பலர் வேறு வழியாக சென்றனர்.

வடசென்னையின் முக்கிய பகுதியான வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வே சுரங்கபாதையில் தண்ணீர் குளம்போல தேங்கிநின்றது. இதனால் நேற்று காலை அந்த பாதையில் போக்குவரத்து தடைபட்டது.

ஒரு சில பஸ் டிரைவர்கள் துணிச்சலாக பஸ்களை ஓட்டி வெள்ள நீரை கடந்து சென்றனர். அப்போது 2 அரசு பஸ்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டன. இதனால் கணேசபுரம் சுரங்கப் பாதையில் பல மணிநேரம் போக்குவரத்து தடைபட்டது.

சுரங்கபாதையில் தேங்கி நின்ற நீரை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மோட்டார் மூலம் அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பெரம்பூர் மேட்டுப்பாளையம் சுரங்கபாதையில் இடுப்பளவு தண்ணீர் ஓடியது. இதனால் அந்த வழியாக சென்ற சென்ற வாகனங்கள் பழுதடைந்து தண்ணீரில் சிக்கிக்கொண்டன. கணேசபுரம், மேட்டுப்பாளையம் சுரங்கபாதைகளை வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் வடசென்னை பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தீவில் சிக்கியதுபோல தவித்தனர்.

வில்லிவாக்கம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள கால்வாய் உடைந்து பஸ் நிலையத்தின் உள்ளே தண்ணீர் புகுந்ததால், துர்நாற்றம் வீசியது.

தியாகராயநகர், வடபழனி பஸ் நிலையங்களில் மழை நீர் நிரம்பி குளம்போல காட்சி அளித்ததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

வளசரவாக்கம், போரூர் சாலையில் பெருக்கெடுத்து மழை நீர் ஓடியதால் அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஓட்டேரி, புரசைவாக்கம் தானா தெரு பகுதியிலும் மழை நீர் தேங்கிநின்றன.

தேனாம்பேட்டை அண்ணா மேம்பாலத்தையொட்டி நின்ற மரம் ஒன்று வேரோடு விழுந்து கிடந்தது. இதனால் அந்த வழியாக வாகன போக்குவரத்தில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல தியாகராயநகர் பசுல்லா ரோடு, எழும்பூர் ஹாரிஸ் சாலை, விருகம்பாக்கம் பார்த்தசாரதி தெரு, திருவல்லிக்கேணி வெங்கட்ராமன் தெரு, மேடவாக்கம் டேங்க் ரோடு, அடையாறு இந்திராநகர் உள்பட பல இடங்களில் சாலையோர மரங்கள் விழுந்ததால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.

குற்றாலம் அருவிகளில் வெள்ளம்...

குற்றலாத்தில் பலத்த மழை காரணமாக அருவிகளில் வெள்ளபெரு்க்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 2வது நாளாக மெயினருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் முதல் இரவு வரை தொடர்ந்து பெய்த மழையால் மெயினருவி, பழைய குற்றால அருவி, ஆகியவற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் மெயினருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். இந்நிலையில் இன்று காலை பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் வெள்ளபெருக்கு சற்று குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் அருவியின் ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும் மெயினருவியில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு புலியருவி சென்றனர்.

வியாபாரிகள் ஓட்டம்..

குற்றாலம் மெயினருவியில் நேற்று இரவு கட்டுகடங்காத வெள்ள பெருக்கு ஏற்பட்டது. அருவியில் இருந்து ஆற்றில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டியது. பழைய குற்றால அருவியிலும் வெள்ளம் கொட்டியது. மெயின் அருவியில் போலீஸ் கண்காணிப்பு கோபுரம், நடைபாதை, உடை மாற்றும் அறை போன்றவை சேதம் அடைந்தது.

நேற்று மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இரண்டு மணி நேரம் குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்தது. இதன் எதிரொலியாக மெயின் அருவி தடாகம் மற்றும் நடை பாலத்தை தாண்டி ஆற்றின் மீது தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டியது.

இரவு 8.30 மணியளவில் அருவியில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத வெள்ளத்தால் மெயின் அருவியில் அமைக்கப்பட்டிருந்த போலீஸ் கண்காணிப்பு கூண்டு, மற்றும் நடை பாதையில் அமைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற டைல்ஸ்கள், அருவி அருகில் இருந்த உடை மாற்றும் அறையின் மேற்கூரை ஆகியவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

சன்னதி பஜார் பகுதிகளும் வெள்ளத்தால் சூழப்பட்டது. குற்றாலம் அருவி கரை, மற்றும் சன்னதி பஜார் பகுதியிலிருந்த கடைகளை மூடி விட்டு வியாபாரிகள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓட்டம் பிடித்தனர்.

கடந்த 1992ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை நினைவு கூறும் விதமாக நேற்றைய வெள்ளப்பெருக்கு இருந்தது. மெயினருவியில் தண்ணீர் அபரிதமாக கொட்டியதால் குற்றாலம் தபால் நிலைய பகுதியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

குற்றாலம்-செங்கோட்டை சாலையில் அண்ணா சிலை பாலத்தின் மீது சுமார் மூன்றரை அடி உயரம் வரை வெள்ளம் சென்றதால் அந்த வழியாக ஒரு மணி நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

3வது நாளாக குளிக்க தடை

குற்றால அருவிகளில் கட்டுகடங்காத வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இன்று 3வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது.

மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால், அருவிகளில் தண்ணீர் அதிகரித்தது. அதிகமான தண்ணீர் காரணமாக மெயினருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்றும் தடை விதிக்கப்பட்டிருந்ததால் யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி பால் வியாபாரி இறந்தார். ஆலங்குளம் அடுத்த அய்யனார் குளத்தை சேர்ந்த மயாண்டி என்பவர் நல்லூர் அறவன்குடியிருப்பு சென்று விட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அய்யனார் குளம் சுடலைமாடசாமி கோயில் அருகே வரும்போது மி்ன் கம்பத்தில் தொங்கி கொண்டிருந்த மின் வயர் மீது மாயாண்டி மோதினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி இறந்தார்.

2 வீடுகள் இடிந்தன

சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர், திருச்செந்தூர் அருகேயுள்ள செம்மறிகுளத்தி்ல் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளது. மாவட்டம் முழுவதும் 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான உப்பளங்கள் நீரில் முழ்கியுள்ளன. இதனால் உப்பு உற்பத்தி அடியோடு மூடங்கியுள்ளது.

இதன் காரணமாக உப்பு விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. தாக்காளி உள்ளிட்ட காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.

நெல்லை, தூத்துக்குடி...

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றிரவு விடிய, விடிய மழை பெய்தது. விகேபுரம் பகுதியில் உள்ள தாமிரபரணி நகரில் 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்குள்ள மக்கள் வெளியில் வரமுடியாமல் தவிக்கின்றனர்.

நேற்று மாலை சுமார் 6 மணியளவில் பாளை வண்ணார்பேட்டை சாலை தெருவில் உள்ள பெரிய மரம் ஓன்று திடீரென சாய்ந்து மின் கம்பத்தில் விழுந்தது. இதில் மின்கம்பம் இரண்டாக உடைந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் அருகில் இருந்த டிரான்பார்மர் சாய்ந்து விழுந்தது.

இதுகுறித்து பாளை தீயணைப்பு துறை மற்றும் மின் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மின் சப்ளை நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நி்லைய அலுவலர் சிவசுப்பிரமணியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் திருமலையப்பன், ஏசுதாஸ், முருகராஜ், செண்பகராஜ், சுப்பிரமணியன், ராமசந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் மின் கம்பத்தின் மீது விழுந்த மரத்தை ரம்பத்தால் அறுத்து அப்புறப்படு்த்தினர்.

மின் கம்பம், சாய்ந்து நின்ற டிரான்பார்மரை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழி்யர்கள் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை செய்யப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X