For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இளங்கோவன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - 3 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

Ilangovan
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக நாம் தமிழர் அமைப்பைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தீவிரவாத தாக்குதலுக்கு மகாத்மா காந்தி, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி போன்ற பெரும் தலைவர்களை இழந்து விட்டோம். அவ்வளவு பெரிய தலைவர்கள் வரிசையில் காங்கிரசின் ஒரு சிறு தொண்டனாகிய என் உயிர் பறிக்கப்படுமானால் அதை பற்றி கவலை படமாட்டேன் என்று இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார் இளங்கோவன்.

பின்னணி என்ன...?

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாளையொட்டி ஈரோட்டில் பல்வேறு இடங்களில் தமிழ் தேச விடுதலை இயக்கத்தினர் மற்றும் ஜவுளித் தொழிலாளர்கள் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந் நிலையில் இளங்கோவன் தலைமையில், மொடக்குறிச்சி காங்கிரஸ் எம்எல்ஏ பழனிச்சாமி, ஈரோடு துணை மேயர் பாபு மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பேனர்களை கிழித்து எறிந்தனர்.

மேலும் பிரபாகரனின் பேனர்கள் வைத்தவர்களை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

3 குண்டுகள் வீச்சு...

இந்த நிலையில், சென்னை அடையார் இந்திரா நகர் 10-வது குறுக்குத் தெருவில் உள்ள இளங்கோவன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.

நேற்றிரவு 11.30 மணிக்கு காவலாளி மோசஸ் முன்பக்க கதவை பூட்டிவிட்டு தூங்கச் சென்றார். நள்ளிரவு 12 மணி அளவில் இளங்கோவன் வீட்டுக்கு 3 மர்ம மனிதர்கள் வந்தனர். அவர்கள் இளங்கோவன் வீட்டுக்குள் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசினார்கள்.

அது வீட்டு முன்பக்க அறை வாசலில் விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்தது. அங்கு போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் தீ பிடித்து எரிந்தன. ஆள் உயரத்துக்கு நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது.

சத்தம் கேட்டு காவலாளி மோசஸ் எழுந்து ஓடிவந்தார். முன் பக்க கதவை திறந்து பார்த்தார். அப்போது மர்ம மனிதர்கள் மேலும் 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

3 தடவை பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் வாசல் அருகில் தீ பயங்கரமாக எரிந்தது. என்றாலும் அதிர்ஷ்டவசமாக தீ வேறு பகுதிக்கு பரவவில்லை. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

தீயை அணைக்க கூச்சலிட்ட காவலாளி மோசஸ் துணிச்சலாக தெரு பகுதிக்கு வந்து எட்டிப்பார்த்தார். ஆனால் அதற்குள் மர்ம மனிதர்கள் தப்பி சென்றுவிட்டனர்

இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சாஸ்திரி நகர் போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சீமான் இயக்கத்தினர் 3 பேர் கைது...

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தகவல் கிடைத்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். 50க்கும் மேற்பட்டோரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சீமானின் நாம் தமிழர் இயக்கமே இதற்குப் பின்னணியில் இருப்பதாக போலீஸார் அறிந்தனர்.

இதையடுத்து சீமானின் உதவியாளரும் டைரக்டருமான மித்ரன், அருண், மணி ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மூவரும் நாம் தமிழர் அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர்.

விசாரணையின்போது, விஜயக்குமார் தலைமையில் வந்து நாங்கள் பெட்ரால் குண்டு வீசினோம் என்று தெரிவித்தனர். மேலும், பெட்ரோல் குண்டு தயாரிக்க உதவியர்கள் குறித்தும் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த 3 பேர் மீதும் வெடி மருந்து சட்டம் உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சில பிரிவுகள் மிக கடுமையான பிரிவுகளாகும். கைதான 3 பேரும் ஒரு காரில் வந்ததாக கூறினார்கள். அந்தக் காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இளங்கோவன் வீட்டின முன்பு திரண்ட அவரது ஆதரவாளர்கள், அடையார் காவல் நிலையத்திற்குச் சென்றனர். அங்கு உருவ பொம்மையை எரித்னர். காவல் நிலையம் முன்பே உருவ பொம்மையை எரித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

காங். தலைவர்கள் முதல்வருடன் சந்திப்பு...

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் உள்ளிட்டோர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து இந்த விவகாரம் குறித்துப் பேசினர்.

பின்னர் தங்கபாலு கூறுகையில், இளங்கோவன் வீட்டில் நேற்றிரவு சமூக விரோதிகள் சிலர் பெட்ரோல் குண்டு களை வீசி தாக்குதல் நடத்தி இருக்கும் செயல் கடும் கண்டனத்துக்குரியது. அரசியல் ரீதியாக சந்திக்க இயலாதவர்கள் எங்கள் கட்சித் தலைவர்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்துகிறார்கள்.

இதுதொடர்பாக நானும், சுதர்சனமும் முதல்வர் கருணா நிதியை சந்தித்து பேசினோம். தாக்குதல் சம்பவம் பற்றி நேற்றிரவு தகவல் கிடைத்ததும் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது. முழு விசாரணை நடத்தி உண்மையான குற்ற வாளிகளை கண்டு பிடிக்க அரசு உதவும் என்று நம்புகிறேன். முதல்வர் கருணாநிதியும் இதற்கு உறுதி அளித்துள்ளார்.

வன்முறையால் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த முடியாது. அரசியல் ரீதியாக எத்தகைய கருத்துக்களையும் சந்திக்க தயாராக உள்ளோம்.

வன்முறை தலைவிரித்தாட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து தமிழ்நாட்டில் வன்முறையை வேரோடு அழிக்க நட வடிக்கை எடுக்கும். இதில் காங்கிரஸ் கட்சியும், தோழமை கட்சிகளும் கடுமையாக இருக்கும

காங்கிரஸ் பல்வேறு சோதனைகளை கடந்து வந்துள்ளது. தீவிரவாதி களுக்கும், சமூக விரோதிகளுக்கும் தமிழ்நாட்டில் இடம் இல்லை என்றார்.

உயிரே போனாலும் கவலையில்லை...!

இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எந்த தீவிரவாதத்துக்கு எதிராக போராடி வருகிறோமோ அதே தீவிரவாத இயக்கங்களின் செயல்தான் இது. இவ்வாறு வெடி குண்டு வீசி மிரட்டுவதன் மூலம் என்னையும் என் நடவடிக்கைகளையும் முடக்கி விடலாம் என்று கருதுகிறார்கள்.

அவர்கள் கனவு ஒரு போதும் பலிக்காது. ஏற்கனவே தீவிரவாத தாக்குதலுக்கு மகாத்மா காந்தி, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி போன்ற பெரும் தலைவர்களை இழந்து விட்டோம். தீவிரவாதத்தால் அவர்கள் உயிர்த் தியாகம் செய்து இருக்கிறார்கள்.

அவ்வளவு பெரிய தலைவர்கள் வரிசையில் காங்கிரசின் ஒரு சிறு தொண்டனாகிய என் உயிர் பறிக்கப்படுமானால் அதை பற்றி கவலை படமாட்டேன்.

ஈரோட்டில் போஸ்டர்கள் அப்புறப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக என் வீட்டின் மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சும் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படும் இயக்கங்களின் கையாலாகாத செயல் என்று தெரிகிறது. நிச்சயமாக இதில் ஈடுபட்டவர்களை காவல் துறை கண்டுபிடிக்கும் என்று நம்புகிறேன்.

முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேச உள்ளேன். அப்போது நடந்த சம்பவங்கள் அனைத்தையும் விரிவாக எடுத்துச் சொல்வேன். தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்புகளுக்கு தடை விதிக்க கோரிக்கை விடுப்பேன் என்றார் இளங்கோவன்.

--

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X