For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரத் பந்த்: வட மாநிலங்களில் ரயில், விமான சேவை பாதிப்பு- தமிழகத்தில் பாதிப்பில்லை

Google Oneindia Tamil News

Jayalalitha
டெல்லி: எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்த 12 மணி நேர பாரத் பந்த் காரணமாக வட மாநிலங்களில் பல இடங்களில் விமானம் மற்றும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. அதேசமயம், தமிழகத்தில் இந்தப் பந்துக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை.

விலைவாசி உயர்வைக் கண்டித்தும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருப்பதைக் கண்டித்தும் பாரத் பந்த் நடத்த இடதுசாரிகள் தலைமையில் அதிமுக, பிஜூ ஜனதாதளம், லோக் ஜன சக்தி கட்சிக், இந்திய தேசிய லோக்தளம்,சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட 13 கட்சிகள் அழைப்பு விடுத்தன.

மேற்குவங்கம், கேரளா ஸ்தம்பிப்பு:

இந்த பந்த் இன்று காலை தொடங்கியது. வட மாநிலங்கள் பலவற்றில் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொல்கத்தாவில் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டனது. சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

மேற்கு வங்க மாநிலத்தில் இயல்பு நிலை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு மிதினாப்பூரில் வ்முறை வெடித்தது.

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத், காஸியாபாத் ஆகிய நகரங்களில் ரயில்களை சிலர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளாவில் பந்த் முழு அளவில் இருந்தது. மாநிலமே ஸ்த்ம்பித்துவிட்டது. அதே போல ஒரிஸ்ஸா, பீகாரிலும் பந்த்துக்கு ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது.

ஆனால், தமிழகத்தில் பந்த்துக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. சென்னை உள்பட எங்கும் பஸ், ரயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.

சில பகுதிகளில் மட்டுமே கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இடதுசாரி தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆட்டோக்கள் மட்டும் ஓடவில்லை. பேருந்துகள், ரயில்கள் வழக்கம் போல இயங்கின.

திருத்துறைப்பூண்டியில் ரயிலை மறித்துப் போராட்டம் நடத்திய அதிமுக, இடதுசாரிகள் கட்சிகளைச் சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

குலசேகரத்தில் 2 அரசுப் பேருந்துகள் மீது கல்வீசப்பட்டது. டிரைவர் காயமடைந்து தடுமாறியதால் பஸ் விபத்துக்குள்ளானது.

சென்னையில் ரயில் மறியல்-50 பேர் கைது:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மகேந்திரன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.

இதில் ஈடுபட்ட இடதுசாரிக் கட்சியினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டத்தால் அகமதாபாத் செல்லும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் தாமதமாக புறப்பட்டது.

வேலை நிறுத்தம் வெற்றி-வைகோ:

இந் நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அனைத்துப் பண்டங்களின் விலை ஏற்றத்தாலும், மத்திய அரசு கடைப்பிடிக்கும் மக்கள் விரோத நடவடிக்கைகளாலும், கோடானுகோடி மக்கள் அரசின் மீது வெறுப்பும், ஆத்திரமும் கொண்டு உள்ளனர் என்பதால்தான், கடை அடைப்பு உள்ளிட்ட பொது வேலை நிறுத்தப் போராட்டம், மாபெரும் வெற்றியை நாடு முழுமையும், குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் மூடிய கடைகளைத் திறக்கச் சொல்லி, பல இடங்களில் ஆளுங்கட்சியினர் ரௌடித்தனத்தில் ஈடுபட்டனர். ஆனால் தமிழகம் எங்கும் வணிக நிறுவனங்களையும், கடைகளையும், உரிமையாளர்கள் தாங்களாகவே விரும்பி அடைத்தனர். தனியார் வாகனங்கள் இயங்கவில்லை. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லவில்லை. தொழிற்கூடங்கள் மூடப்பட்டன.

எங்கள் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தின் அனைத்துத் தரப்பினரும், இந்தப் பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்துள்ளனர்.

கடைகளை அடைப்பதாலும், வாகனங்களை நிறுத்துவதாலும், தங்களுக்கு ஏற்படும் இழப்புகளைப் பொருட்படுத்தாமல், அவர்களாகவே விரும்பி இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதில் இருந்து ஒரு உண்மை தெளிவாகப் புலனாகிறது.

மத்திய அரசு மீதும், தமிழகத்தில் மாநில அரசின் மீதும், மக்கள் கடும் வெறுப்புக் கொண்டு உள்ளனர் என்பதுதான் அந்த உண்மை. போராட்டத்தின் வெற்றியே அதற்கு உரைகல் ஆகும். அரசுகளை எச்சரிக்கும் காலக்குறியும் ஆகும்.

போராட்டத்தை வெற்றி பெறச் செய்த வணிகப் பெருமக்கள், ஆலைகளின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், வாகன உரிமையாளர்கள் உள்ளிட்ட ஆதரவு நல்கிய அனைத்துத் தரப்புப் பொதுமக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.

வியாபாரிகளுக்கு நன்றி-மார்க்சிஸ்ட்:

மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விலைவாசி உயர்வுக்கு எதிராக அகில இந்திய அளவில் இடதுசாரி கட்சிகள் உட்பட 13 கட்சிகளும், தமிழகத்தில் அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் கடையடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன.

இதுவரை கிடைத்த தகவல்படி, தமிழகத்தில் பெரும்பாலான நகரங்களில் பொது வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான ஆட்டோக்கள், வாகனங்கள், தனியார் பேருந்துகள் ஓடவில்லை.

மேற்கு மாவட்டங்களில் முழு கடையடைப்பு நடைபெறுகிறது. பனியன் உள்ளிட்ட பின்னலாடை நிறுவனங்கள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உட்பட சுமார் 10,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் எதிர்க்கட்சியினரின் வேண்டுகோளை ஏற்று கடையடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்ட வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X