For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பணியாளர் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு- நலிந்து வரும் பிரம்பு மூங்கில் பொருள் தயாரிப்பு

Google Oneindia Tamil News

- கே.எம்.கே.இசக்கிராஜன்

தமிழ்நாட்டில் அதுவும் தென்மாவட்டமான நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தயாராகும் பிரம்பு மூங்கில் பொருட்கள் தமிழகம், கேரள உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலுள்ள சொகுசு பங்ளாக்களையும், விஐபி வீட்டின் வரவேற்பு அறைகள் முதல் நடுந்தர, சாதாரண வகுப்பு மக்களின் இல்லங்களையும் அழகுபடுத்தி வருகிறது.

இந்த பிரம்பு மூங்கில் மூலம் கட்டில், சோபா, சேர், டைனிங் டேபிள், பூக்கூடை, ஊஞ்சல், என ஒரு வீட்டிற்கு மரத்தில் செய்யப்படும் பொருட்களுக்கு நிகராக இந்த பிரம்பு மூங்கில் மூலமும் செய்யப்படுகிறது.

பார்ப்பதற்கு கண்ணை பறிக்கும் விதம் இந்த பொருட்களின் கலை நயமும், சீரான பின்னல்களும், நேர்வரிசை அமைப்புகளும் நம்மை ஆசை கொள்ள செய்யும் அளவுக்கு இருந்தாலும் இன்று அதிகரித்து வரும் ஆணி, வார்னிஷ், கலர் வார்னிஷ் பொருட்களின் விலைவாசி உயர்வால் ஏழைகளின் ஏக்கம் நிறைவேறாத நிலையே இப்பொருட்களின் உற்பத்தியில் உள்ளது.

காரணம் ஒரு பிரம்பு மூங்கி்ல் சேர் விலை 1200, ஊஞ்சல் விலையே ஆயிரம் ரூபாய், கட்டில் விலை 15 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரையும் சோபா செட் விலை 6 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை உள்ளது.

செங்கோட்டை அருகேயுள்ள விசுவநாதபுரம் என்ற கிராமப்பகுதியில் 1970ம் ஆண்டு முதல் சுமார் 300 குடும்பத்தினர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 1970-80ம் ஆண்டு வரை இந்த பிரம்பு மூங்கில் கொடியை தமிழக மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் வனத்துறையின் அனுமதியோடு கொள்முதல் செய்து வந்தனர் இத்தொழில் புரியும் பணியாளர்கள்.

ஆனால் மத்திய அரசு வனப்பகுதிகளை பாதுகாக்கும் பொருட்டு திடீரென இந்த மூங்கில் வகை கொடிகளை வெட்ட கூடாது என்று தடை போட்டதால் இத்தொழிலாளர்கள் தங்களின் வாழ்க்கை பறிபோய் விட்டது என்று கருதிய காலகட்டத்தில் அசாம், இந்தோனேசியா, அந்தமான், மலேசியாவில் போய் பிரம்பு கொள்முதல் செய்ய தொடங்கினர்.

அன்று அங்கு கழிவு பொருட்களாக இருந்த பிரம்பு மூங்கில் காசு கொட்டும் காமதேனுவாக இப்போது மாறி 9 டன் பிரம்பு மூங்கில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இப்பகுதிக்கு கொண்டு வர ரூ.10 லட்சம் வரை செலவாகி விடுவதால் பிரம்பு மூங்கில் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. மேலும் அன்று 1971வாக்கில் ரூ.30க்கு விற்பனை செய்த சேர் இன்று ரூ.1200 ஆகியுள்ளது.

கேரள மாநிலத்திற்கு அதிகளவு இந்த பிரம்பு மூங்கில் பொருட்கள் கொண்டு செல்லப்பட்ட காலம் மாறி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் இப்பகுதியில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் விதமாக 1 வருடம், 6 மாதம் அந்தந்த பகுதிகளில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி மையங்கள் மூலம் (டிரைசம் டிரைனிங் சென்டர்) பயிற்சி வழங்கியது. ஆனால் அதனையும் நிறுத்தியது.

இப் பயிற்சியகம் மூலம் பயிற்சி பெற்ற ஏராளமான இளைஞர்கள் மாவட்டத்தின் பல பகுதிகளில் இதுபோன்ற பிரம்பு மூங்கில் தொழிற்கூடம் அமைத்து வேலைவாய்ப்பு பெற்றனர். ஆனால் இன்று வருமானம் கொழிக்க வைக்கும் இத்தொழிலை செய்ய பணியாளர்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

தினமும் இத்தொழில் புரியும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை 300 முதல் 600 வரை சம்பளம் பெறுகின்றனர் என்று கூறப்படுகிறது. இத்தொழிலை அபிவிருத்தி செய்ய வங்கிகளில் கடன் கேட்டால் கைவிரித்து விடுகின்றனர். இறக்குமதியாகும் பிரம்பு மூங்கில் பொருட்களால் ஏற்றம் காணுவது இடைதரகர்கள் மட்டும்தான்.

தமிழக அரசு மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வளரும் கொடி வகையை சேர்ந்த மூலிகை தன்மை வாய்ந்த பிரம்பு மூங்கில் வெட்டி தனியாக கூட்டுறவு பண்டக சாலை மூலம் விற்பனை செய்தால் இப்பொருட்களை செய்யும் தொழிலாளர்கள் வாழ்வும் மேம்படும். வாங்கும் பொதுமக்களுக்கும் பொருளாதார பாதிப்பு நீங்கும்.

மருத்துவ குணம் வாய்ந்த பிரம்பு மூங்கில் வகை பொருட்கள் உடல் ரீதியாக ஏற்படும் நோய்களை தடுக்கும் சக்தி கொண்டது என்பதும், வனப்பகுதியில் நீர்நிலைகள் அதிகமுள்ள பகுதிகளில் தான் இவை வளரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X