• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருணாநிதியின் 87வது பிறந்த நாள் - பல கட்சி தலைவர்கள் வாழ்த்து

|

சென்னை: முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாளையொட்டி பல்வேறு கட்சிகள், அமைப்புகள், நாட்டுத் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "தமிழகத்தில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான தாங்கள் 87-வது அகவையில் அடியெடுத்து வைக்கும் உங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு சார்பில் எங்கள் பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று கூறியுள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தனது வாழ்த்துச் செய்தியில், "ராஜதந்திரத்தில் இவரை மிஞ்சுபவர் எவருமிலர் என்று இன எதிரிகள் கூடாரத்தில் இருந்து கேட்கும் குரல் அதிசயத்தின் வெளிப்பாடா-அச்சத்தின் அறிவிப்பா என்று தெரியாவிட்டாலும், அப்பட்டமான உண்மை என்பது அனைவருக்கும் விளங்குகிறது. அத்தகைய மாமனிதர்-மனித நேயத்தின் மாற்றுப்பெயரான கலைஞர் பல்லாண்டு பல்லாண்டு தந்தை பெரியார் வயதினையும் தாண்டி வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மலேசிய தலைவர் டத்தோ நல்லா வாழ்த்து

மலேசிய இந்திய ஐக்கியக் கட்சி் தலைவர் டத்தோ நல்லா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,

87-வது பிறந்த நாளை கொண்டாடும் உலக தமிழினத்தலைவர், தமிழுக்கு தலைவர் அருமை நண்பர் முதல் அமைச்சர் கருணாநிதிக்கு மலேசியாவில் வாழும் இந்தியர்கள் சார்பிலும், மலேசிய இந்திய ஐக்கிய கட்சியின் சார்பிலும் எனது சார்பிலும் உளம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆயிரம் பிறை கண்ட அற்புத நண்பரே உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு தலைவராக விளங்கும் நீங்கள், தமிழ்ச்சமுதாயத்திற்காகவும், தமிழ் மொழிக்காகவும் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துச்சொல்வதை நான் எனக்கு கிடைத்த பெருமையாக நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஜெகத்ரட்சகன் வாழ்த்து

மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வழக்கம் போல கவிதை பாணியில் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.

அது:

காலத்தச்சன் கைபுனைந்து இயற்றிய ஞாலததேரில் ஞான உலா வருகின்ற வையத்து சூரியனே, வைகறையின் ஓவியமே இமயத்தில் மெய்கீர்த்தி எழுத வந்த காவலனே, நூற்கடல் குடித்து நுண்மைகள் எடுத்து பாற்கடல் போல பந்தி வைக்கும் பாவலனே.

சொக்க வைக்கும் சொல்லழகும் சொற்போரில் மற்ற வரை சிக்க வைக்கும் பேரழகும் சீதனமாய் பெற்றவனே, கற்றவர் விழுங்கும் கற்பக கனியே கருத்துக்கே எட்டாத கற்பனையின் அற்புதமே வித்தக விரலுக்கும் வெண்கல குரலுக்கும் இலக்கணமாய் ஆன இலக்கிய சித்தனே.

தூக்கத்தை துறந்த தொண்டுக்கு பித்தனே ஊக்கத்தின் உட்பொருளே உழைப்பின் பொழிப்புரையே வள்ளுவனின் எழுத்தாணி இளங்கோவின் எழுத்தாணி கம்பனின் எழுத்தாணி கலந்த எழுத்தா-நீ. என்றறீஞர் திருக்கூட்டம் இறும்பூது எய்திடவே அன்று முதல் எழுதி வரும் அறிவுலக ஆசானே.

தமிழாய் பிறந்தவனே தாயிற் சிறந்தவனே இமையாய் தமிழ்குலத்தை எப்போதும் காப்பவனே, அக்னியில் குளித்தாலும் அருவியிலே குளிப்பது போல் அரசியல் போர்க்களத்தில் அதிசயமாய் நிற்பவனே.

எத்தனையோ தாக்குதல்கள், எத்தனையோ பேரிடிகள், அத்தனையும் வரமாக்கி அதன் மீது நடப்பவனே ஆதிக்க சக்திகளின் அன்றாட சதிவேலை, மூளையை கொண்டு முறியடிக்க கற்றவனே, சுற்றி வரும் விரோதங்கள், சூழ்ந்து வரும் துரோகங்கள், வெற்றி வரும் பாதைக்கு வித்தாக கொண்டவனே.

பெரியாரை முன்பற்றி அண்ணாவைப் பின்பற்றி சரியாத சாம்ராஜ்யம் சமைத்து தந்தவனே. பாராட்டை ஒரு போதும் தாலாட்டாய் கருதாமல் போராட்ட சக்திக்கு புத்துயிராய் கொள்பவனே, கோழைக்கும் வீரம் கொப்பளிக்க செய்பவனே, ஏழைக்கு வாழ்வளிக்க இறைவன் போல் வந்தவனே, திட்டங்கள், சட்டங்கள் செய்வதிலே வல்லவனே எட்டாத உயரத்தில் லட்சியத்தால் பறப்பவனே கொடி கண்ட மன்னவனே குடிபோற்றும் நல்லவனே அடி பிறழத்தெரியாத ஆணரசே-என் தலைவா.

தமிழ்நாட்டு வரலாறுதனைத்சுற்றி வருமாறு சாதனைகள் பல நூறு சாதித்து விட்டாய்-நீ.

உன்னை தவிர ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின் செல்லேன்-என்று மொத்த தமிழகமே முன்வந்து உன் அணியில் சங்கமிக்கும் காட்சி சரித்திர காட்சியன்றோ. இது போதும் எனச்சொல்லி எவரையும் ஒதுக்காமல் வருவோரை எல்லாம் வாழ்விக்கும் புண்ணியனே. ஒரு வேளை எதிர்கட்சி ஒன்றுமே இல்லாமல் மாநிலத்தை நீயாளும் மார்க்கம் பிறந்திடுமோ?

மிகையில்லை தலைவா, மீண்டும் உன் ஆட்சிக்கு பகையில்லை தலைவா பாரதமே உன் பின்னால். தேனுக்கு விளம்பரம்-தித்திப்பு. தென்றலுக்கு விளம்பரம் இனிமை, வானுக்கு விளம்பரம் கதிர் வெளிச்சம், வாரிக்கொடுக்கும் வள்ளலே உனக்கு விளம்பரம்-உன்னோடு பிறந்த உழைப்பு தானே. உழைப்போர் திலகமே உன் பிறந்த நாள் மண் செழிக்க வந்த மழை பிறந்த நாள், பண் செழிக்க வந்த பதம் பிறந்த நாள், கண் செழிக்க வந்த கலை பிறந்த நாள்.

தென்னாடுடைய தலைவா, எந்நாட்டவர்க்கும் இறைவா உன்னை வணங்காமல் ஒரு பொழுதும் உறங்க முடியாது-என்னால் வாழிய நீ பல்லாண்டு. இதயத்தில் ரோஜாவை பதிய மிட்டவனே. எண்ணத்தில் வாசனையை வழிய விட்டவனே. வாழிய நீ நூறாண்டு.

காற்றாண்டு வருகின்ற உலகத்தில்-உன் நூற்றாண்டு விழாவை காண வேண்டும் நாங்கள். மந்திர சொல்லுக்கும், மகுடி வார்த்தைக்கும் சுந்தர தமிழுக்கும் சொந்தக்காரனே. கரும்புகள் கொண்ட கணுக்களை போல தழும்புகள் கொண்ட தமிழ் அண்ணலே. நீ கடமையே பெரியதென்று கற்களிலும் படுத்துள்ளாய், முட்களிலும் படுத்துள்ளாய், அதனால் தான் அறிஞர்கள், கவிஞர்கள் சொற்களிலும் இன்று சுகமாய் படுத்துள்ளாய். சோர்வுக்கு விடை தந்த சுந்தரனே.

எவரையும் அசைக்கும் உன் எழுத்ததிகாரம் இன்று போல் தொடரட்டும். எவரையும் மயக்கும் உன் சொல்லதிகாரம்-இன்று போல் ஒலிக்கட்டும். ஏழைக்கு வாழ்வளிக்கும் பொருளதிகாரம் இன்று போல் செழிக்கட்டும் செந்தமிழர் வாழ்வுக்கு செம்மொழி தந்த சிலப்பதிகாரமே-உன் சிறப்பதிகாரம்.

இன்றுபோல் அந்த இமயம் வரை எட்டட்டும் வாழிய வாழிய எனமுரசம் கொட்டட்டும். வெற்றி மகள் ஓய்வின்றி உன் கதவை தட்டட்டும். மேலவையால் மேற் புகழும் மேன் மேலும் கிட்டட்டும் என்று பாடியுள்ளார் ஜெகத்ரட்சகன்.

விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,
இன்றே பதிவு செய்யுங்கள்
- பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more