For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பென்னாகரம் தேர்தலில் பாமகவை ஆதரிக்க முன்வந்த அதிமுக

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: பென்னாகரம் இடைத் தேர்தலில் எங்களை ஆதரிக்க அதிமுக முன்வந்தது. ராஜ்யசபா எம்பி சீட் தருவதாகவும் கூறியது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

பாமகவின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்துக்குப் பின் ராமதாஸ் நிருபர்களிடம் பேசியதாவது:

மக்களவைத் தேர்தல் தோல்வி மூலம் தேர்தல் நேர பேரம் பேசுவதில் பாமகவின் செல்வாக்கு குறைந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. பேரம் பேசுவதில் எங்களுக்கு உடன்பாடே இல்லை.

இன்றைய நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சி வளர்ச்சி மற்றும் உள்கட்சித் தேர்தல் ஆகியவை பற்றி மட்டுமே விவாதிக்கப்பட்டன. மற்றவை பற்றி கூட்டத்தில் பங்கேற்ற யாரும், எதுவும் பேசவில்லை.

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர பகைவரும் இல்லை என்று கூறுவார்கள். ராஜாஜி, கட்சி கூட்டத்தில் திமுகவை மூட்டைப் பூச்சியை போல நசுக்கி விடுவேன் என்று முழக்கமிட்டார். ராஜாஜியின் குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து திமுகவினர் பெரும் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

ஆனால் 1967ல் எதிரும், புதிருமாக இருந்த திமுக, ராஜாஜியின் சுதந்திரா கட்சி, கம்யூனிஸ்டுகள் சேர்ந்து கூட்டணி அமைத்திருக்கிறார்கள். நான்சென்ஸ் என்று நேரு கூறியதற்காக போராட்டம் நடத்திய திமுக 71ல் இந்திரா காங்கிரசுடன் கூட்டணி அமைத்தது. இதுபோல நிறைய உதாரணங்களை கூற முடியும்.

திமுகவுடன் பா.ம.க. கூட்டணி சேர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து திமுக உயர்நிலை செயல் திட்ட குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் எங்கள் கட்சியின் பிரதிநிதிகள் முதல்வர் கருணாநிதியை 2 முறை சந்தித்துப் பேசியுள்ளனர். கூட்டணி பற்றி தொடர்ந்து பேசி வருகிறோம்.

கூட்டணியை ஒரே நாளில் பேசி முடிவு செய்து விட முடியாது. அதற்கு சில நாட்கள் தேவைப்படும். திமுகவுடன் கூட்டணி அமைக்க எங்களின் கோரிக்கை என்ன என்பது பற்றி உங்களிடம் (பத்திரிகையாளர்களிடம்) கூற முடியாது.

எங்கள் குழு முதல்வரை நேற்று சந்தித்தது. மீண்டும் முதலமைச்சரை சந்திக்கும். அவரை சந்தித்த பின் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் கிடைக்கும்.

ராஜ்யசபா எம்பி பதவி குறித்த பிரச்சனைக்கு நாங்கள் முக்கியத்துவம் தரவில்லை. எங்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்திலும் அது பற்றி விவாதிக்கப்படவில்லை. நானோ, அன்புமணியோ, குருவோ யாரும் ஒரு வார்த்தை கூட இதைப்பற்றி பேசவில்லை.

2011ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் பாமகவுக்கு 40 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று திமுகவுடன் நாங்கள் பேரம் பேசுவதாகக் கூறப்படுவது உங்களது (பத்திரிகையாளர்களின்) கற்பனை தான்.

காடுவெட்டி குரு மிக மிக மிக நல்லவர். அவர் உண்மையைத் தான் பேசுவார்.

தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவையைக் கொண்டு வருவது என்ற முதல்வர் கருணாநிதியின் கனவுத் திட்டம் பாமக அளித்த ஆதரவால்தான் நிறைவேறியுள்ளது.

இது குறித்த தீர்மானம் சட்டப் பேரவையில் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை. பாமக மட்டும் தீர்மானத்தை ஆதரிக்காமல் இருந்திருந்தால், அந்தத் தீர்மானம் நிச்சயம் நிறைவேறியிருக்காது. எனவே, பாமக ஆதரவு இல்லாவிட்டால், தமிழகத்தில் மேலவை இல்லை. இது உறுதி, உறுதி, உறுதி என்றார் ராமதாஸ்.

பென்னாகரம்-பாமகவை ஆதரிக்க முன் வந்த அதிமுக:

கூட்டணி அமைக்க அதிமுகவிடம் இருந்து அழைப்பு வந்ததா என்று நிருபர்கள் கேட்டதற்கு, அதிமுகவுடன் எங்கள் கட்சிக்கு இருந்த உறவு முறிந்த பின்னரே பென்னாகரம் இடைத் தேர்தல் நடைபெற்றது. எனினும், பென்னாகரம் இடைத் தேர்தலில் எங்களை ஆதரிக்க அதிமுக முன்வந்தது. ஏற்கெனவே எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி ராஜ்யசபா தேர்தலிலும் எங்களை ஆதரிப்பதாகக் கூறினர். இது குறித்து அக்கட்சியின் தலைவர்கள் சிலர் எங்கள் கட்சித் தலைவர்களுடன் பேசினார்கள் என்றார்.

திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. இல்லாவிட்டால் எந்த பாதிப்பும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளது பற்றி கேட்டதற்கு, இது குறித்து நான் எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை என்றார் ராமதாஸ்.

திமுக நிர்வாகிகளை கலந்து பேசித் தான் கூட்டணி குறித்து முடிவு செய்வோம் என்று முதல்வர் கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, அவரது கட்சி நிலைப்பாட்டை அவர் சொல்கிறார். என்னுடைய கட்சி நிலைப்பாட்டை நான் எடுக்க அதிகாரம் கொடுத்திருக்கிறார்கள் என்றார்.

நாடாளுமன்றத் பாராளுமன்ற தேர்தல் தோல்வி, பென்னாகரம் தோல்வி காரணமாக உங்களது 'பார்கெய்ன் பவர்' குறைந்துவிட்டதா என்று கேட்டதற்கு, சக்தி குறைந்துவிட்டதா? அதிகரித்திருக்கிறதா? என்பதற்கெல்லாம் முக்கியத்துவம் தருவதில்லை. எங்கள் கொள்கை திட்டங்கள் மற்ற கட்சிகளுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு உள்ளன. பென்னாகரத்தில் தனித்து போட்டியிட்டு 42 ஆயிரம் ஓட்டுகள் பெற்றிருக்கிறோம். உண்மையில் வெற்றி பெற்றது நாங்கள் தான் என்றார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X