For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோலாகல 'இனியவை நாற்பது' பேரணி-குலுங்கியது கோவை!

By Chakra
Google Oneindia Tamil News

Iniyavai Naarpathu
கோவை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக இனியவை நாற்பது என்ற தலைப்பிலான பிரமாண்ட அலங்கார ரத பேரணி கோலாகலமாக நடந்தேறியது.

கோவையில் இன்று காலை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோலாகலமாக தொடங்கியது. குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து இன்று மாலை 4 மணிக்கு இனியவை நாற்பது என்ற தலைப்பில் பிரமாண்டப் பேரணி தொடங்கியது.

தமிழகத்தின் கலை, பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை விளக்கும் வகையிலான சிற்பங்கள், கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய 40 அலங்கார வாகனங்கள் இதில் கலந்து கொண்டு அணிவகுத்து வந்தன.

அவினாசி சாலையில் கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர் தொலைவுக்கு பேரணி நடந்தது. வ.உ.சி. பூங்கா மைதானத்திலிருந்து தொடங்கிய பேரணி, மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகம் வரை நீண்டது.

இப்பேரணியை லட்சுமி மில் அருகே அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடையிலிருந்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

பேரணியின் முதலில் கரகாட்டக் கலைஞர்கள், மேள தாளக் குழுவினர், நாதஸ்வரக் கலைஞர்கள் நடைபோட முதல் ஊர்தியாக வள்ளுவர் கோட்ட மாதிரி ரதம் அணிவகுத்துச் சென்றது.

பேரணியை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

ஒவ்வொரு ஊர்திக்கு முன்பும், பின்பும் கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கலைஞர்கள் ஆடியபடி சென்றனர்.

முதல் ஊர்தியாக சென்ற வள்ளுவர் கோட்ட மாதிரியில் அமைக்கப்பட்ட ரதத்தில், திருவள்ளுவரின் சிலை இடம் பெற்றிருந்தது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலங்களைக் குறிக்கும் ஊர்திகள் அடுத்து அணி வகுத்தன.

குளிரில் நடுங்கிய மயிலுக்கு தனது பட்டாடையை ஈந்த குறுநில மன்னன் பேகன், நற்றினையில் வரும் ஒரு கிராமத்துக் காட்சி, குற்றாலக் குறவஞ்சிக் காட்சி, கற்புக்கரசி கண்ணகி, மகாகவி பாரதியார் உள்பட பல்வேறு தமிழர் பாரம்பரியக் காட்சிகளுடன் கூடிய ஊர்திகள் ஒவ்வொன்றாக அணிவகுத்து வந்தன.

முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி மன்னனை சித்தரிக்கும் அலங்கார ரதம் அற்புதமாக இருந்தது.

பசு மனு நீதிச் சோழன் மன்னனிடம் நீதி கேட்கும் காட்சியும் மிக அழகாக இடம் பெற்றிருந்தது.

கோபாவேசம் பொங்க கண்ணகி பாண்டிய மன்னனிடம் நீதி கேட்கும் காட்சியும் அனைவரையும் கவர்ந்தது.

அட்சயப் பாத்திரம் ஏந்தியபடி நிற்கும் மணிமேகலை சிற்பமும், அதன் வடிவமைப்பும் பல்வேறு கருத்துக்களை தூண்டும் வகையில் அமைந்திருந்தது.

அருமையான தத்துவத்தை விளக்கும் வகையில், பகிர்ந்து உண் என்ற தலைப்பிலான ரதமும் காண்பதற்கு நல்ல விருந்தாக அமைந்தது.

வீரமங்கை வேலுநாச்சியாரின் சிலிர்ப்பூட்டும் சித்தரிப்புக்கு பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பு.

தமிழர்களின் கட்டடக் கலைக்கு பெருமை சேர்க்கும் தஞ்சைப் பெரிய கோவில், மாமல்லபுரம் கடற்கரைக் கோவில், கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றின் கோர்ப்புக் காட்சி கண்களுக்கு அரிய காட்சி.

தமிழர்களின் போர்க் கலைகளை சித்தரிக்கும் காட்சி மெய் சிலிர்க்க வைத்தது.

தமிழ்க் கடவுள் முருகன் தனது அண்ணன் விநாயகப் பெருமான், தந்தை சிவபெருமான், தாயார் பார்வதி (வேடம் பூண்டவர்கள்) சகிதம் புன்னகை தவழ டக் டக்கென நடை போட்டு வந்த காட்சி பார்வையாளர்களுக்கு குஷியூட்டியது.

தமிழர்களின் வீர விளையாட்டுக்களை சித்தரிக்கும் காட்சி அடங்கிய ரதம் கண்ணைக் கவர்ந்தது.

சாலைகளின் இரு மருங்கிலும் நின்றது போக, சாலையோரம் உள்ள அடுக்கு மாடிக் கட்டடங்கள், வீடுகளின் மொட்டை மாடிகள் என மக்கள் வெள்ளம் எங்கெங்கும் நிரம்பி அவினாசி சாலைப் பகுதியை மக்கள் கடலாக மாற்றி நிற்கிறது.

கிராமத்துக் காவல் தெய்வமான ஐய்யனாரின் தெய்வீக,முழு உருவத் திருவுருவம் தாங்கிய வாகனம் தமிழர்களின் வீரமான பக்தியை வெளிக்காட்டும் வகையில் அமைந்தது.

வயோதிகத்தை வெல்லக் கூடிய நெல்லிக் கனி தனக்குக் கிடைத்தும், அதை தான் உண்ணாமல் தமிழ் வாழ வேண்டும் என்ற நோக்கில், அவ்வைப் பாட்டிக்கு அளித்த அழகிய காட்சி அடங்கிய ரதம், கண்களுக்கு நல் விருந்து.

விறுவிறுப்பாக நடந்து வந்த பேரணி மாலை 6 மணி வாக்கில் மாநாடு வளாகத்திற்கு அருகே நெருங்கி வந்தது. அங்குள்ள லட்சுமி மில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேடையிலிருந்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், முதல்வர் கருணாநிதி, ஆளுநர் பர்னாலா, மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X