For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவையில் கோலாகலமாக தொடங்கியது செம்மொழி மாநாடு-பின்லாந்து அறிஞருக்கு விருது

Google Oneindia Tamil News

Tamil Meet Logo
கோவை: தமிழறிஞர்கள், பல்துறை நிபுணர்கள், மொழியியல் அறிஞர்கள், பொதுமக்கள் என மக்கள் வெள்ளம் கோவையைச் சூழ இன்று காலை கோலாகலமாக தொடங்கியது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.

5 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான தமிழறிஞர்கள், பல்துறை நிபுணர்கள் பங்கேற்கின்றனர். கொடிசியா வளாகத்தில் இதற்காக பிரமாண்ட பந்தலும், மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இன்று காலையிலேயே பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விட்டனர்.

முதல் நாள் நிகழ்ச்சி நிரல்

இன்று காலை 10. 30 மணிக்கு மாநாடு தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. டாக்டர் சீர்காழி சிவ.சிதம்பரம், நீராடும் கடலுடுத்த என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாடினார்.

இதையடுத்து பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று தொடங்கும் செம்மொழி மாநாட்டின் மைய நோக்குப் பாடல் ஒலிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்தினார். குடியரசுத் தலைவர், முதல்வர், ஆளுநர், பேராசிரியர் சிவத்தம்பி, பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், பேராசிரியர் அஸ்கோ பாப்லோ உள்ளிட்டோருக்கு ஸ்டாலின் நினைவுப் பரிசினை வழங்கினார். ஸ்டாலினுக்கு மாநாட்டின் சிறப்பு அலுவலர் அலாவுதீன் சிறப்புப் பரிசினை வழங்கினார். அதேபோல தலைமைச் செயலாளர் ஸ்ரீபதிக்கும் அலாவுதீன் நினைவுப் பரிசினை வழங்கினார்.

அமெரிக்க அறிஞர் ஜார்ஜ் ஹார்ட் பேச்சு:

இதையடுத்து அமெரிக்க அறிஞர் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் சிறப்புரை வழங்கினார்.

அவர் பேசுகையில், இந்த சிறப்பு மிக்க மாநாட்டுக்கு அழைப்பு விடுத்த முதல்வர் கருணாநிதிக்கு முதலில் நன்றி கூறிக் கொள்கிறேன். இதில் கலந்து கொள்வதை பெருமையாகவும், கெளரவமாகவும் கருதுகிறேன்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திலும், கேரளத்திலும், வடக்கு இலங்கையிலும் தமிழ் செழித்தோங்கி இருந்தது. இந்த தனிச் சிறப்பு வேறு எந்த மொழிக்கும் கிடையாது.

தமிழ் மொழி சிறந்த இலக்கியத்தைக் கொண்டது. சமஸ்கிருதம், கிரேக்கம் போன்ற பிற செம்மொழிகளுக்கு சற்றும் சளைக்காதது தமிழ் என்றார் ஹார்ட்.

தனது பேச்சின்போது தமிழ் இலக்கியத்திலிருந்து பல வாக்கியங்களை அழகுற அவர் வாசித்துக் காட்டி அனைவரையும் வியக்க வைத்தார்.

பப்போலாவுக்கு செம்மொழி விருது:

செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனத் தலைவர் வா.சே.குழந்தைச்சாமி அளித்த வாழ்த்துரையில், இங்கு தமிழகத் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள், உலகத் தமிழர் எனஅனைவரும் உள்ளத்தால் ஒன்று கூடிய சாதனை, உலக அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. அந்த சாதனைக்குக் காரணமாக இருந்த தமிழக அரசை, அதற்கு ஆதரவு தந்தவர்களையும், அதன் தலையாய நாயகனாக விளங்கும் கலைஞர் அவர்களையும் தமிழ் உலகம் மனம் திறந்து பாராட்ட கடமைப்பட்டிருக்கிறது.

இத்தகைய பெருவெள்ளம் எதற்காக கூடியிருக்கிறது. 21ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தமிழுக்கு புதிய பெருமை சேர்ந்தது. மைய அரசு தமிழை செம்மொழியா பிரகடனம் செய்ததே அந்தப் பெருமை.

உலகில் ஏறத்தாழ 6000 மொழிகள் உள்ளன.அதில் 6 மொழிகள் மட்டுமே செம்மொழிகளாகும். அதில் நம் தாய் மொழியும் ஒன்று என்பதை எண்ணிப் பார்க்கும்போது ஓரங்குலம் உயர்ந்து நிற்கிறோம்.

இந்த உண்மை மையக்கோப்பில் இருந்தால் மட்டும்போதாது, மாநில அரசின்கோப்பில் இருந்தால் மட்டும் போதாது, தமிழுலகம் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியோடு வரவேற்க வேண்டும், உணர வேண்டும் என்பற்காகவே இந்த கூட்டத்தைக் கூட்டியுள்ளார் கலைஞர்.

நாளை நடக்கவிருக்கும் நான்கு நாள் தொடர் ஆயவரங்குகள், 1000க்கும் அதிகமான ஆய்வாளர்கள் உலகம் முழுவதுலுமிருந்தும் கூடியிருக்கிறார்கள். அந்த ஆய்வாளர்களில் மூவரைத்தான் மேடையில் பார்க்கிறோம். கார்த்திகேசு சிவத்தம்பி, இலங்கையிலிருந்து வந்திருக்கும் யாழ்ப்பாணத் தமிழர். ஒரு பேராசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால் கார்த்திகேசு போல இருக்க வேண்டும் என்று கூறும் அளவுக்கு தலை சிறந்த, புலமை வாய்ந்த பேராசிரியர்.

பேராசிரியர் ஹார்ட் அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் மகளை மணந்தவர். தமிழை வணங்குபவர். மைய அரசு தமிழுக்கு செம்மொழி என அறிவிக்கத் தயங்கிய காலத்தில், ஹார்ட் அவர்கள், இந்தியா மகத்தான நாடு என்பது எந்த அளவுக்கு உண்மையோ, இந்து சமயம் மாபெரும் சமயம் என்பது எவ்வளவு உணமயமை அந்த அளவுக்கு தமிழும் செம்மொழி என்பதும் உண்மை என்பதை எவரஸெட்டில் நின்று அறிவித்தைப போல அறிவித்தவர் ஹார்ட்.

அடுத்து அஸ்கோ பப்போலா. சிந்துவெளி நாகரீகம் என்பது உலகின் மிகப் பழமையான நாகரீகம், 6000 ஆண்டு பாரம்பரியம். அதற்குச் சொந்தக்காரர்கள் திராவிடர்கள். அந்த வழியில் வந்தவர்கள் தமிழர்கள். நீங்களும் நானும் 6000 ஆண்டு கொண்ட மிகப் பெரிய நாகரீகத்திற்குச் சொந்தமானவர்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருப்பவர் அஸ்கோ பப்போலா.

தமிழ் ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு இருக்குமானால், அந்தப் பரிசை பெறும் தகுதி உடையவர்கள் ஹார்ட்டும், பப்போலா அவர்களும்தான். இப்போதும் குறைந்த விடவில்லை. தமிழ் செம்மொழி என்று அறிவித்தபிறகு அறிவிக்கப்பட்ட குறள் பீடம் என்ற உலகம் தழுவிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதைக் குடியரசு் தலைவர் கையில்இருந்து டெல்லியில் பெறவிருக்கிறார்கள் ஹார்ட் அவர்கள்.

பப்போலா அவர்களுக்கு டாக்டர் கலைஞர் செம்மொழி விருது தரப்படவுள்ளது. இன்று, இந்தியாவில் மொழிகளுக்கென அறிவிக்கப்படிருக்கும் விருதுகளிலேயே இந்த விருதுதான் பெரிய விருது. 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை கொண்ட இந்த விருதை தொழிலதிபர்கள் உருவாக்கவில்லை. நோபல் பரிசை உருவாக்கிய நோபல் வெடிமருந்து கண்டுபிடித்தார். அதிலிருந்து கிடைத்த பணத்திலிருந்துதான் அவர் நோபல் பரிசை உருவாக்கினார்.

ஆனால் கலைஞர் அவர்கள் இரவு முழுவதும் கண்வழித்து, கையிலே கோல் பிடித்து எழுதி, எழுதி, தேனைச் சேர்பப்துபோல சேர்த்து சொந்த நிதியிலிருந்து உருவாக்கிய நிதியில்தான் இந்த விருதைத் தருகிறார்.

எதிர்காலத்தில் தமிழுக்கு நோபல் என்றால் அது இந்த கலைஞர் செம்மொழி விருதுதான். தமிழர்கள் விருந்துக்குப் பெயர் போனவர்கள். கொங்கு மண்டலம் அதன் தலைமைப் பீடம். எனவே இந்த மாநாட்டை நடத்தி, கொங்கு மண்டலத்திற்கு தமிழர்களை வரவழைத்து, வரவேற்கும் வாய்ப்பு கொடுத்ததற்காக, நான் கரூரில் பிறந்தவன் என்பதால் கொங்கு மண்டலம் சார்பில் வாழ்த்தி அமைகிறேன் என்றார்.

நிகழ்ச்சியில் ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா, மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட அதை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பெற்றுக் கொண்டார். இதையடுத்து நிதியமைச்சர் அன்பழகன் தகுதி உரை நிகழ்த்தினார். அதில் கலைஞர் செம்மொழி விருது பெறும் பப்போலாவின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.

இதையடுத்து கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினை பின்லாந்து அறிஞர் அஸ்கோபர் போலோவுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வழங்கினார்.

அடுத்து ஆளுநர் பர்னாலா சிறப்புரை நிகழ்த்தினார். இதையடுத்து முதல்வர் கருணாநிதியின் தலைமையுரை இடம் பெற்றது. தொடர்ந்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் விழாத் தொடக்க உரை சிறப்புரையை நிகழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதி நன்றியுரை நவிழ தொடக்க விழா நிறைவு பெற்றது

இனியவை நாற்பது பேரணி

மாலை 4 மணிக்கு இனியவை நாற்பது பேரணி பிரமாண்டமாக நடைபெறுகிறது.

தமிழகத்தின் செழுமை வாய்ந்த கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு ஆகியவற்றை சிற்பங்களாக சித்தரிக்கும் அலங்கார வாகனங்கள் இதில் கலந்து கொண்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்.

வ.உ.சி. பூங்காவில் பேரணி தொடங்குகிறது. 9 கிலோமீட்டர் தூர பயணத்திற்குப் பின்னர் கொடிசியா மாநாட்டு வளாகத்தில் இது முடிவடையும். இந்தப் பேரணியைத் தலைவர்கள் பார்வையிடுவதற்கு வசதியாக வழியெங்கும் 7 இடங்களில் சிறப்பு மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. லட்சுமி மில் அருகே அமைக்கப்பட்டுள்ள மேடையிலிருந்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி ஆகியோர் பார்வையிடுகின்றனர்.

இத்துடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் முடிவுக்கு வருகின்றன.

நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ஆய்வரங்குகள், கவியரங்குள், கருத்தரங்குகள் உள்ளிட்டவை நடைபெறும். ஆய்வுரை நிகழ்த்தும் நிகழ்ச்சிகளுக்காக பல்வேறு தமிழ்ரப் புலவர்கள், அறிஞர்கள் பெயர்களில் தனித் தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

பலத்த பாதுகாப்பு

உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான தமிழறிஞர்கள் வருகை தந்துள்ளதால், கோவை முழுவதும் மாநாட்டுக்கான பாதுகாப்பு பலமாக போடப்பட்டுள்ளது.

11,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகர் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் சகிதம் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X