For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏழை மக்கள் பெறும் வாழ்வு வஞ்கத்தின் வாயை அடைக்கும், இடுப்பை ஒடிக்கும்-கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: துரோகத்தையே தங்கள் வாழ்வின் தொடர் நிகழ்ச்சிகளாக ஆக்கிக் கொண்டவர்களால் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் போன்ற தூய்மையான திட்டங்களின் மீது தூசி படவும் செய்திட இயலாது என்பதை தமிழகத்தின் பட்டி தொட்டி முதல் பட்டினக் கரை வரையில் நமது திட்டங்களால் பயன்பெறும் ஏழை, எளிய சாதாரண மக்கள் பெறுகின்ற வாழ்வு வஞ்சகத்தின் வாயை அடைத்து அதன் இடுப்பை ஒடித்தே தீரும் என்ற நம்பிக்கையோடு நாம் நடை போடுவோம் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இது தொடர்பாக முரசொலியில் அவர் எழுதியுள்ள கடிதம்:

கடந்த ஆண்டு இதே நாளில்- 23-7-2009 அன்று "உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டம்'' தமிழக அரசின் சார்பில் தொடங்கப்பட்டது.

இன்று ஓராண்டு நிறைவுற்று- இந்த ஓராண்டில் இந்த திட்டத்தால் கிடைத்த பயன்கள் என்ன? நோய் நீங்கி நடமாடுவோர் எத்தனை பேர்? ஒருவரல்ல, இருவரல்ல! ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர்- சரியாகச் சொல்ல வேண்டுமேயானால்- ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 257 நோயாளிகள் நலம் பெற்றனர் என்று புள்ளி விவரம் கூறுகிறது.

இதற்காக காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் மருத்துவமனைகளுக்கு 415 கோடியே 43 லட்சம் ரூபாய் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. ஒரு கோடியே 44 லட்சத்து 45 ஆயிரத்து 117 குடும்பங்கள் இத்திட்டத்தில் உறுப்பினர்களாக கடந்த ஓராண்டு காலத்தில் சேர்ந்து- 1 கோடியே 33 லட்சத்து 60 ஆயிரத்து 439 குடும்பங்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

தொடங்கும்பொழுது இந்த திட்டம் நிறைவேறுமா? ஆண்டுதோறும் முழுமை பெறுமா? என்றெல்லாம் ஐயம் எழுப்பியோர்- ஏகடியம் செய்தோர்- எரிச்சல் கொட்டியோர்- ஏன் இந்த வீண் வேலையென்று ஏளனம் புரிந்தோர்- இவர்களின் எண்ணிக்கையும் நமக்கு தெரியும்.

ஆனால்; இந்த அரசின் மக்கள் நலத்திட்டங்களைப் பழித்தே பழகி விட்ட, பித்து மனங்களுக்கு இந்த திட்டம்- இப்போது ஓராண்டு நிறைந்து அடுத்த ஆண்டில் அடியெடுத்து வைக்கும்போது- கடந்த ஆண்டில் பாதிக்கப்பட்டு பரிகாரம் பெற்றோர்- மரணத்தை எட்டிப் பார்த்து மறுவாழ்வு பெற்றோர்- எத்தனை பேர் என்ற கணக்கு நம்மைக் களிப்பில் அல்லவா ஆழ்த்துகிறது!

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல ஒன்றிரண்டை மாத்திரம் விளக்கிச் சொல்கிறேன்.

செங்கல்பட்டு, மணிவாக்கம் பகுதியை சார்ந்த 55 வயது ராமதாஸ் என்பவருக்கு திடீரென' 24.01.2010 அன்று காலை தலை சுற்றல் ஏற்பட்டது. அன்று மாலை மயக்கம் ஏற்பட்டு, சுயநினைவற்ற நிலைக்கு சென்றார். அவரது உறவினர்கள், அவரை உடனடியாக சென்னையில் உள்ள "பில்ராத் மருத்துவமனை''யில் அனுமதித்தனர்.

அங்கு, அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்ததில் மூளையில் இரத்த கட்டி உறைவு ஏற்பட்டது தெரிய வந்தது. அவருக்கு 29.01.2010 அன்று மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு, உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் ரூ. 60,000 அளிக்கப்பட்டது. தற்போது அவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி நலமாக உள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், வேலம்பட்டியை சார்ந்த வீரப்பன் என்பவருக்கு நாவில் புற்று நோய் வந்ததின் காரணமாக மிகவும் அவதியுற்று வந்தார். இந்நோயினால் அவர் உணவும் அருந்த முடியாமல் சிரமப்பட்டார். இவரை அவரது குடும்பத்தினர் ஈரோடு புற்று நோய் மையத்தில் 01.02.2010 அன்று அனுமதித்தனர்.

அறுவை சிகிச்சைக்காக ரூ.36,500 கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, 24.02.2010 அன்று பூரண நலத்துடன் வீடு திரும்பினார்.

சென்னை, தாம்பரம் லெட்சுமி நகரைச் சேர்ந்த, 45 வயதான சரவண ஐயர் என்பவர் இரண்டு மாதங்களுக்கு மேலாக கடுமையான வயிற்றுவலியால் துடித்து வந்தார். அவருடைய வயிரும் வீங்கி வாந்தியும் எடுத்து அவதியுற்றதால் உணவும் அருந்தாமல் சிரமப்பட்டார். சரவண ஐயர் இரண்டு மாதங்களுக்கு மேலாக மஞ்சள் காமாலை நோய் தாக்கியும் ஆபத்தான நிலைக்கு ஆளானார். ஏழ்மையான இவரை சார்ந்துதான் அவரின் குடும்பம் இருந்தது.

நோயினால் அவரின் மொத்த குடும்பமும் செய்வதறியாமல் திகைத்த போது, உடனே அவரை அழைத்து வந்து "லைப்ஃலைன் மல்டி ஸ்பெஷாலிடி'' மருத்துவமனையில் கடந்த 10.05.2010 அன்று சேர்த்தனர். உடனடியாக இவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து, பித்தப்பை சம்பந்தமான புற்றுநோய் வந்திருப்பது தெரிய வந்ததால் உடனடியாக 10 பாட்டில் ரத்தம் ஏற்றப்பட்டு அவருக்கு 14.05.2010 அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் இப்பொது நலமுடன் உள்ளார். இவருக்கு கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சைக்கான செலவையும் ஏற்று ரூ.1 லட்சம் காப்பீடு தொகையாக வழங்கப்பட்டது.

தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் நல வாரிய உறுப்பினரான உடுமலைப்பேட்டை, கே.வல்லக்குண்டாபுரத்தைச் சேர்ந்த டி.தங்கவேலு என்பவரின் மகள் சரண்யா. இவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு பொள்ளாச்சி அருண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பீட்டு நிறுவனத்திடம் ரூ.17,500 அனுமதி பெற்று 21.10.2009 அன்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்ற இவர் தற்போது நலமுடன் இருக்கிறார்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி, ஒக்கரைப்பட்டியை சார்ந்த பாண்டியன் என்பவரின் மகன் பள்ளி செல்லும் முனியாண்டிக்கு இதய நோய் காரணமாக பள்ளி செல்ல இயலாத நிலை ஏற்பட்டு, வளர்ச்சியும் குன்றி அவதிப்பட்டார். ஏழ்மை நிலையில் இருக்கும் அவரது தந்தை கலைஞர் காப்பீட்டு திட்டம் பற்றி அறிந்து, மிகவும் நலம் குன்றிய நிலையில் முனியாண்டியை மதுரை மாவட்டத்திலுள்ள சரவணா மருத்துவமனையில் 23.11.2009 அன்று சேர்த்தார்.

மருத்துவர்கள் அவரை பரிசோதித்து, உடனடியாக அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்தனர். அவரது அறுவை சிகிச்சைக்கான முழு செலவான ரூ.60,000 கலைஞர் காப்பீட்டு திட்டம் மூலம் செலுத்தப்பட்டு அவர் நலமுடன் வீடு திரும்பினார்.

சேலம் மகுடஞ்சாவடி, தனலட்சுமி அம்மாள் 15-1-2010 அன்று பொங்கல் விழாவினைக் கொண்டாடிவிட்டு, ஒரு மினி ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பும்போது, சேலத்திற்கு அருகில் உள்ள மகுடஞ்சாவடியில் வளைவில் ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்து விடுகிறது. அதில் தனலட்சுமியின் முன் கை துண்டாகி விடுகிறது. துண்டான முன்னங்கை ஐஸ்கட்டிகளில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது. விபத்து நடந்த 6 மணி நேரத்திற்குள் கோவையில் உள்ள கங்கா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு- மைக்ரோ சர்ஜரி அறுவை சிகிச்சையின் மூலம் துண்டான கை ஒன்று சேர்த்து வைக்கப்பட்டது. இரண்டு வார தொடர் கண்காணிப்பிற்கு பின்னர் இணைக்கப்பட்ட கையுடன் இல்லம் திரும்பினார்.

சுந்தரசேகர் திண்டுக்கல்லைச் சேர்ந்தவர், 52 வயது. இவருக்கு இரண்டு மாத காலமாக சிறுநீரோடு சேர்ந்து ரத்தமும் கசிந்து, பல மருத்துவர்களிடம் காட்டி குணமாகவில்லை. கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்த பின்னர்- ஸ்கேன் எடுக்கப்பட்டு- நோயின் காரணமறிந்து- 23-5-2010 அன்று அறுவை சிகிச்சை ஆறு மணி நேரம் நடைபெற்று தற்போது முழுவதும் குணமாகியுள்ளார்.

மதினா வயது 28 - திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பென்னாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். குறவர் வகுப்பைச் சேர்ந்த பெண்மணி. பல ஆண்டுகளாக இருதயத்தில் கோளாறு. கலைஞர் காப்பீட்டு திட்டத்தின்படி செட்டிநாடு மருத்துவ மனையிலே சேர்ந்து இருதய சிகிச்சை செய்து கொண்டு தற்போது நலமாக இருக்கிறார்.

செல்வன் முருகன் வயது 9 - வந்தவாசி, குலாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன். இதய நோயினால் பிறந்தது முதல் அவதிப்பட்டு வந்தான். இவனுக்கு சிகிச்சை செய்ய வசதி இல்லாத ஏழைப் பெற்றோர், அவனுடைய ஆயுள் அவ்வளவு தான் என்று கை விட்டு விட்டனர். கலைஞர் காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு அந்த திட்டத்தின்படி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நல்ல உடல் நலத்தோடு இருக்கிறான்.

மோசஸ்- வயது 60 - தர்மபுரி மாவட்டம்- இலங்கை தமிழர் இவர்- அகதியாக தங்கியிருக்கிறார். இவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு ஓராண்டு காலமாக அவதிப்பட்டு வந்தார். கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்து அதன் கீழ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது நலமாக உள்ளார்.

விக்னேஸ்வரன்- வயது 32 - கும்மிடிப்பூண்டியில் உள்ள அகதிகள் முகாமில் இருப்பவர். சாலை விபத்து ஒன்றில் சிக்கி, எலும்பு முறிவு முகத்தாடையில் ஏற்பட்டு மிகுந்த சிரமத்தோடு இருந்தார். இவர் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின்படி மருத்துவமனையிலே சேர்ந்து அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது முழு நலத்தோடு உள்ளார்.

இன்னும் எழுதிக்கொண்டே போகலாம். இத்திட்டத்தினால் பயன் பெற்றவர்கள் எல்லாம் இத்திட்டம் ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, கடந்த 23-ந் தேதி என்னை தலைமைச் செயலகத்திலே சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டார்கள்.

அப்போது அவர்கள் என்னைப் பார்த்து, என்றும் "இந்த திட்டம் இல்லாவிட்டால் நாங்கள் உயிரோடு இருந்திருக்கவே மாட்டோம்'' என்று, நெஞ்சு நெக்குருகச் சொல்லிய போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா? ஆனால் அவர்கள் நோயினால் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருந்தோம் என்பதையும், இந்த அளவுக்கு ரூபாய் செலவழித்து தங்களால் சிகிச்சை செய்து கொண்டிருக்கவே முடியாது என்பதையும் கண்களில் நீர் மல்க சொன்ன போது எனக்கு பெருமிதமாகவும் இருந்தது.

இந்த ஒரு திட்டம் மாத்திரமல்ல; 108 என்ற திட்டத்தைப் பற்றி நீ அறிவாய். அந்த திட்டத்தைப் பற்றி நாள்தோறும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. கிராமப்புற மக்கள் எல்லாம் அந்த திட்டத்தினால் தாங்கள் உயிர் பிழைத்தச் செய்தியை தொடர்ந்து சொல்லி, இந்த அரசைப் பாராட்டுகிறார்கள்.

எனவே, இயலாதோர்க்கு உதவிட வேண்டுமென்ற எண்ணம் வேண்டும். அந்த எண்ணம் எங்களுக்கு இருக்கின்ற காரணத்தால் அந்த வழியிலே செயல்படுகிறோம். இதை ஊழல் திட்டம் என்றும், கோடிக் கோடியாகக் கொள்ளைப் போய் விட்டது என்றும் சிலர் பேசுகிறார்கள் என்றால்; நான் அவர்களைப் பொருட்படுத்தாதற்கு காரணம்- உண்மை ஒரு நாளும் தோற்காது - வாய்மையை எதிர்த்து வஞ்சகம் ஜெயிக்காது.

துரோகத்தையே தங்கள் வாழ்வின் தொடர் நிகழ்ச்சிகளாக ஆக்கிக் கொண்டவர்களால் இது போன்ற தூய்மையான திட்டங்களின் மீது தூசி படவும் செய்திட இயலாது என்பதை தமிழகத்தின் பட்டி தொட்டி முதல் பட்டினக் கரை வரையில் நமது திட்டங்களால் பயன்பெறும் ஏழை, எளிய சாதாரண மக்கள் பெறுகின்ற வாழ்வு வஞ்சகத்தின் வாயை அடைத்து அதன் இடுப்பை ஒடித்தே தீரும் என்ற நம்பிக்கையோடு நாம் நடை போடுவோம்!

அதற்கு நம்மை ஊக்குவிக்கும் ஓராயிரம் பேர், ஒரு லட்சம் பேர் என்று உடல் நலம் பெற்றோரின் உருவப்படங்களை இணைத்து வழங்கிட இந்த கடிதத்தில் இடம் இல்லாத காரணத்தால்- அன்று நலிவடைந்து- இன்று நலம் பெற்றோர் அனைவரின் சார்பாகவும் ஒத்துழைப்போர் எல்லோருக்கும் உளமார்ந்த நன்றி கூறுகிறேன். தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டுமென்றும் அவர்களுக்கும், அவர் போன்றோருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று எழுதியுள்ளார் முதல்வர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X