For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீமான், வைகோ, நெடுமாறன் கைது செய்யப்பட்ட செயலுக்கு ஈழவேந்தன் கண்டனம்

Google Oneindia Tamil News

டோரன்டோ: நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கு முன்னாள் இலங்கை எம்.பி. மா.க.ஈழவேந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசின் கனடாப் பேராளருமாக செயல்பட்டுவரும் ஈழவேந்தன் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

செந்தமிழ்ச் சீமானையும், எம் தலைவர் பிரபாகரனையும் தமிழகத்தில் காத்து வந்த கொள்கைக் குன்று நின்ற சீர் நெடுமாறனையும், வையம் ஏற்றும் வைகோ வையும் மற்றும் தியாகத் தழும்பேறிய தொண்டர்களையும் சிறையிலடைத்துச் சித்திரவதை செய்வதனால் செந்தமிழ் இனத்தைச் சீரழிக்கலாமென்றோ தமிழினத்தின் விடுதலை வேட்கையைத் திசை திருப்பலாம் என்றோ கருதி தமிழக அரசு இவர்களைத் துன்புறுத்தி எதையும் நிலைநாட்டலாம் என்று கருதுவார்களாயின் தம்மைத் தாமே ஏமாற்றுகின்றார்கள் என்பது தான் பொருள்.

ஏறக்குறைய 500 க்கு மேற்பட்ட தமிழக மீனவர்களைச் சாகடித்து விழுங்கி ஏப்பமிடும் ஸ்ரீலங்கா அரசைத் தட்டிக் கேட்காமல் தமிழக மக்களின் விடுதலை வேட்கையின் வடிவமாக விளஙகும் இத்தலைவர்களை சித்திரவதை செய்வதனால் தனககுத்தான் அழிவினைத் தேடப் போகின்றது.

நாமார்க்கும் குடியல்லோம் என வீரவாழ்வு வாழ்ந்த நாவுக்கரசரை சுண்ணாம்பு அறையில் வைத்து வாட்டி வதைத்தும் கல்லைக்கட்டி கடலில் தூக்கி எறிந்ததும் இறுதியில் வெற்றி பெற்றது யார். மன்னிப்புக் கேட்டு மணிமுடி தாங்கிய மகேந்திர பல்லவன் தன்னை மன்னிக்கும் படி நாவுக்கரசர் காலடியில் வீழ்ந்த வரலாறும் சமணம் நீங்கி சிவநெறி பக்தனாக மாறியதும் வரலாற்றில் பதியப்பட்டு உள்ள ஒரு நிகழ்ச்சி !

பெண் சுமந்த பாகன் மண் சுமந்து கூலி கொண்டு அக்கோவால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி தாங்கியதன் விளைவு பண் சுமந்த மணிவாசகரின் திருவாசகம் எழுந்தது.

பாண்டிய மன்னன் இன்று மணிவாசகரின் பாடலைக்கேட்டு உருகிய வரலாற்றினைத் திருவாசகம் எடுத்துரைக்கின்றது. இறுதியாகக் கப்பலோட்டிய .உ.சியை செக்கிழுக்க வைத்த பிரித்தானியப் பேரரசிற்கு என்ன முடிவு ஏற்றபட்டது!

இனத்தின் விடுதலை என்பது தாக்குகின்ற சக்தியை விடத் தாங்குகின்ற சக்தியில்தான் ஒரு இனத்தின் விடுதலை அமையும். இதற்கமைய தமிழீழ மக்களுடைய விடுதலையும். தமிழக மக்களுடைய விடுதலை வேட்கையும் ஒருங்கே கிளர்ந்தெழுந்து தமிழீழ விடுதலைக்கு வழிவகுக்கப் போவது உறுதி.

மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எம்மை மாட்ட நினைத்திடும் சிறைச்சாலை என்று பாவேந்தர் பாடலைப்பாடி அன்று ஹிந்தியை எதிர்த்த கலைஞர் இன்று தன்வசதிக்காக எம்மை ஏய்த்துப் பிழைக்கும் தலைவனாக மாறியிருப்பது வரலாறு வசைபாட வழி சமைக்கின்றது என்று கூறியுள்ளார் ஈழவேந்தன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X