For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அழகிரி ராஜினாமா: பொய் செய்தி என்கிறார் ஸ்டாலின்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முடிந்ததும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மாநிலத்தில் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று வரும் செய்திகள் தவறானவை என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தப்பிக்க வாய்தா வாங்கி காலம் கடத்தும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைக் கண்டித்து, திமுக இளைஞர் அணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

வரும் ஆகஸ்ட் 4ம் தேதி நடக்கவிருக்கும் இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஆலோசனை நடந்தது.

இதில், சொத்துக் குவிப்பு வழக்கை, 13 ஆண்டுகள் ஆகியும் வாய்தா வாங்கியே இழுத்தடித்து வரும் 'வாய்தா ராணி ஜெயலலிதாவின்' நடவடிக்கைகளை கண்டித்து, வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இளைஞரணியினர் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்.

முதல்வர் கருணாநிதியின் சாதனைகளை, மக்கள் நலத்திட்டங்களை அனைத்து தரப்பு மக்களும் அறிந்திடும் வகையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை கிராமங்கள் மற்றும் நகரங்கள் தோறும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதோடு, சாதனைகளை அச்சிட்டு வீடுகள்தோறும் வினியோகிக்க வேண்டும்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, திமுக உதயமான நாள் ஆகிய முப்பெரும் விழாவை இந்த ஆண்டும் எழுச்சியோடு கொண்டாட வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த ஸ்டாலினிடம், இந்த ஆர்ப்பாட்டம் நீதிமன்றத்துக்கு எதிரானது என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே? ஆர்ப்பாட்டத்தை கைவிடுவீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்த ஆர்ப்பாட்டம் அறிவித்தப்படி நடக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஜெயலலிதாவின் கருத்துக்கள் பற்றி எனக்கு கவலையில்லை என்றார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முடிந்ததும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மாநில அரசியலில் முக்கிய பங்கு வகிக்கப் போகிறார் என்று தொலைக்காட்சிகளில் செய்திகள் தொடர்ந்து வெளி வந்து கொண்டுள்ளதே என்று கேட்டதற்கு,

அது தவறான செய்தி. அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார் ஸ்டாலின்.

ஜெ. மீது வழக்கு-திமுக எச்சரிக்கை:

இந் நிலையில் ஜெயலலிதாவின் அறிக்கையை சாட்சியமாக வைத்து, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று திமுக சட்டத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக திமுக சட்டத்துறை செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திமுக இளைஞரணி சார்பில் 'வாய்தா ராணி ஜெயலலிதாவை' கண்டித்து, நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து அவர் வெளியிட்டுள்ள புலம்பல் அறிக்கையை கண்டனத்துக்குரியது.

ஜெயலலிதா ஆட்சியில் நீதிபதிகளையும், அவர்களது உறவினர்களையும் எந்த அளவுக்கு பழி வாங்கினார் என்பதை தமிழக மக்கள் எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது செய்த ஊழல்கள், வருமானத்துக்கு அதிகமாக குவிந்த சொத்துக்கள், டான்சி ஊழல், கொடைக்கானல் ஊழல், கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு, அன்னிய செலாவணி மோசடி வழக்கு. வருமான வரி வழக்கு, ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசிய வழக்கு, நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் மருமகன் மீது கஞ்சா வழக்கு போன்ற கணக்கிட முடியாத அளவிற்கு சட்டத்துக்கு புறம்பானவைகளை செய்தவர் ஜெயலலிதா.

ஜெயலலிதா சட்டத்தை பற்றியும், ஊழலை பற்றியும், நீதிமன்ற அவமதிப்பினை பற்றியும் அறிக்கை விடுவது சாத்தான் வேதம் ஓதுவது போன்றதாகும்.

ஜெயலலிதாவின் அறிக்கையை சாட்சியமாக வைத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர திமுக சட்டத்துறை தயங்காது என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X