கிளிண்டன் மகள் செல்சியா கல்யாணம் கோலாகலமாக நடந்தேறியது
அமெரிக்காவின் 'ராயல்' கல்யாணம் என மீடியாக்களால் பெரிதும் பேசப்பட்டது இந்த திருமணம். யூதரான மார்க் மெஸ்வின்ஸ்கியை மணந்துள்ளார் செல்சியா. இருவரும் இளம் வயது முதலே பழகி வந்தனர். செல்சியாவுக்கு 30 வயதாகிறது, மார்க் 32 வயதுக்காரர்.
இவர்களது திருமணம், நியூயார்க்கின் மன்ஹாட்டனிலிருந்து 2 மணி நேர பயண தூரத்தில் இருக்கும் ரைன்பெக் என்ற இடத்தில் நடந்தது.
ஹட்சன் நதிக்கரையோரம் உள்ள பிரமாண்ட எஸ்டேட் வளாகத்தில் இத்திருமணம் நடந்தது. மிகுந்த பாதுகாப்புடன் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதிபர் ஒபாமா உள்ளிட்ட பல பிரபலங்கள் திருமணத்திற்கு அழைக்கப்படவில்லை.
மார்க் இன்வெஸ்ட்மென்ட் வங்கியில் பணியாற்றி வருகிறார். அவரது தந்தை எட்வர்ட் மெஸ்விந்ஸ்கி, தாயார் மர்ஜோரி மர்கோலிஸ். இருவரும் ஜனநாயகக் கட்சியின் எம்.பிக்களாக இருந்தவர்கள்.
கிளிண்டன் மெத்தடிஸ்ட் வகுப்பைச் சேர்ந்தவர், மார்க் யூதர் என்பதால் இந்தத் திருமணம் இரு மத முறைப்படி நடந்தது. யூதமுறைப்படியான சடங்குகளை ரப்பி ஜேம்ஸ போனட்டும், மெத்தடிஸ்ட் முறைப்படியான வைபவத்தை பாதிரியார் வில்லியம் ஷில்லடியும் செய்தனர்.
கிளிண்டன் தம்பதியின் ஒரே மகள் செல்சியா என்பதாலும், அமெரிக்க அதிபர் பதவியில் கிளிண்டன் இருமுறை இருந்தவர் என்பதாலும் அமெரிக்க மக்களின் செல்லப் பிள்ளையாக செல்சியா பார்க்கப்படுகிறார். இதனால் அவரது திருமணம் அமெரிக்க மக்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.













Click it and Unblock the Notifications