திருப்பரங்குன்றத்தில் தீபம்! இன்று இடைக்கால தீர்ப்பு? உச்சநீதிமன்றத்தில் இறுதி கட்ட விசாரணை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நவ.24ம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு திருப்பரங்குன்றம் மலை மீது எந்த இடத்தில் தீபம் ஏற்றுவது? என்பதில் சிக்கல் நீடிப்பதால்.. இது தொடர்பான வழக்கில் இன்று இடைக்கால தீர்ப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு கார்த்திகை தீபம் அன்று, திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற இந்துத்துவா அமைப்புகள் தீவிரமாக முயற்சித்தன.

Tiruparankundram

ஆனால், இவர்கள் தீபம் ஏற்ற கேட்கும் கல்தூண் மசூதிக்கு அருகில் இருப்பதாலும், அது தீபத்தூண் இல்லை என்றும் கூறி அப்போதைய திமுக தலைமையிலான தமிழக அரசு கல்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கொடுக்கவில்லை. இருப்பினும், இந்துத்துவா அமைப்புகள் நீதிமன்றத்தை நாடி அனுமதி வாங்கின. மதுரை உயர்நீதிமன்ற கிளையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்து அமைப்புகள் கோரிய தூணில் தீபம் ஏற்ற அனுமதி உத்தரவிட்டிருந்தார். ஆனாலும் திமுக அரசு தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. கடைசியாக வழக்கமாக தீபம் ஏற்றும் உச்சிப்பிள்ளையார் கோயில் தீப தூணில் தீபம் ஏற்றப்பட்டது.

இந்த ஆண்டு எங்கு தீபம் ஏற்றுவது? என்பது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் போய், தற்போது உச்சநீதிமன்றத்தில் நிற்கிறது. நேற்று நடந்த வாதங்களில் இந்து அமைப்புகள் தீபம் ஏற்ற கோரும் தூண் யாருக்கு சொந்தம் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. திருப்பரங்குன்றம் மலையை பொறுத்தவரை சிக்கந்தர் தர்கா, படிக்கட்டுகள் மற்றும் நெல்லித்தோப்பு பகுதியை தவிர மற்ற அனைத்தும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குதான் சொந்தம் என்று அரசு தரப்பு கூறியிருக்கிறது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வர இருக்கிறது. மதியம் 2 மணிக்கு விசாரணை நடக்க உள்ளது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு இப்போது வெளியிடப்படாதது. மாறாக நவ.24ம் தேதி கார்த்திகை தீபம் திருவிழா வர இருப்பதால்.. தீபம் ஏற்றுவது தொடர்பான இடைக்கால உத்தரவு மட்டுமே பிறப்பிக்கப்பட இருக்கிறது. இன்று மீதமுள்ள தரப்புகளின் வாதங்கள் கேட்க கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது இந்து அமைப்புகள் மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்கள் மட்டுமே மீதமுள்ளன. இது விரிவான விசாரணை இல்லை என்பதால், வாதங்கள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்று நேற்றே நீதிமன்றம் சொல்லிவிட்டது. மதியம் 2 மணிக்கு தொடங்கும் வாதங்கள்.. மாலை 4 மணிக்குள் நிறைவடைந்தால்.. இன்றே இடைக்கால தீர்ப்பு வழங்கப்படும்.

பின்னணி என்ன?

கடந்த 150 ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோயில் தீப தூணில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில், திடீரென வழக்கத்தை மாற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோர.. தமிழக அரசு அதை மறுத்து வருகிறது. அந்த வகையில் இந்த வழக்கில் வெளியாகும் இடைக்கால தீர்ப்பு முதலமைச்சர் விஜய்க்கு எப்படி இருந்தாலும் நெருக்கடியை கொடுக்கும்.

காரணம் இவர் இந்த வாக்குகளுக்காக கோயில், கோயிலாக வழிபாடு செய்திருக்கிறார். அதேநேரம் இவரது தவெக அரசில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் இடம்பெற்றிருக்கிறது. எனவே, தீர்ப்பை அமல்படுத்தினால் இஸ்லாமிய கூட்டணி உடையுமா? தீபம் ஏற்றாமல் விட்டால்.. இந்த வாக்கு வங்கியை இழக்க நேரிடுமோ? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+