100% மானியத்தில் இலவச ஆடுகள்.. தமிழக அரசு திடீர் உத்தரவு! ஆதார் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
சென்னை: தமிழக அரசின் இலவச ஆடு வளர்ப்பு திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்துக்கும் ஆதார் அவசியம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தும் இன்னும் நம்பர் கிடைக்காதவர்கள் என்ன செய்வது? அவர்களும் இந்த திட்டங்களில் பயன்பெற முடியுமா? இதற்கும் தமிழக அரசு இப்போது விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
தமிழகத்தில் கிராமப்புற பெண்களின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் "வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம்" இந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம்
இந்த திட்டத்தின் மூலம் ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நேரடியாகவே பலன்களை பெற முடியும்.. தகுதியுள்ள ஒவ்வொருவருக்கும் 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
இந்த திட்டத்துக்காகவே தமிழக அரசு ரூ.109.75 கோடி நிதியையும் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் சுமார் 30,000 பேர் பயன்பெற உள்ளனர். முதல் கட்டமாக சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட 100 வட்டாரங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரம் ஆடுகள் வழங்கப்பட உள்ளன.
தமிழக அரசு ரூ.2,500 ஊக்கத்தொகை
ஒரு பயனாளிக்கு 5 ஆடுகள் வாங்குவதற்காக ரூ.30000 வழங்கப்படும். ஒரு ஆட்டின் விலை ரூ.6000 என கணக்கிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், ஆடுகளுக்கு 2 ஆண்டுகளுக்கான காப்பீடும் அரசால் செய்யப்படும். தீவனம் வாங்கவும், ஆடுகள் தங்குவதற்கு கொட்டகை அமைக்கவும் முதற்கட்டமாக ரூ.2,500 ஊக்கத்தொகை வழங்கப்படும். ஆடுகளை ஒரு வருடம் வளர்த்த பிறகு மேலும் ரூ.2,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இப்படி ஆடு வாங்குவது முதல் அவற்றை பராமரிப்பது வரை பல உதவிகளை அரசு வழங்குகிறது.
இந்நிலையில், இந்த திட்டத்தில் பயன் பெற ஆதார் எண் கட்டாயம் என்று தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. அதுபோலவே, விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்திலும் பயனாளிகள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் இல்லாதவர்கள்?
தமிழக அரசின் உதவிகள், உரிய நபர்களுக்கு நேரடியாகவே சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஆதார் எண் இல்லாதவர்கள் இந்த திட்டங்களில் விண்ணப்பிக்க முடியாது என்று அர்த்தமில்லை. சிலர் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்திருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு இன்னும் ஆதார் நம்பர் ஒதுக்கப்பட்டிருக்காது. இப்படிப்பட்டவர்கள் என்ன செய்வது என்ற கேள்விக்கும் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
அதன்படி, ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்ததற்கான ஒப்புகைச் சீட்டை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். அதனுடன் அரசு அங்கீகரித்துள்ள மாற்று அடையாள ஆவணங்களையும் கொடுக்கலாம். இதன் மூலம் ஆதார் எண் இன்னும் கிடைக்காதவர்களும் இந்த திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்க முடியும்.
எனவே, வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம் அல்லது விலையில்லா கறவை மாடுகள் திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ளவர்கள் ஆதார் ஆவணங்களைத் தயாராக வைத்துக்கொள்வது நல்லது. ஆதார் எண் இன்னும் கிடைக்காதவர்கள் அதற்கான ஒப்புகைச் சீட்டுடன் மாற்று அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications
