செஞ்சி சிறுமி மாயம்.. சின்ன கிராமத்தில் நடந்த கற்பனைக்கு எட்டாத மாஸ்டர் பிளான்! போலீஸ் திணறுவது ஏன்?
விழுப்புரம்: பொதுவாக எந்தவொரு பெரிய குற்றச் சம்பவமாக இருந்தாலும்.. அது ஆட்கடத்தலாக இருக்கட்டும், கொலையாக இருக்கட்டும் அல்லது பல கோடி ரூபாய் நகைக்கடை கொள்ளையாக இருக்கட்டும்.. குற்றவாளிகள் எவ்வளவுதான் சாதுரியமாகச் செயல்பட்டாலும், சம்பவ இடத்தில் ஏதாவது ஒரு சிறிய தடயத்தையாவது விட்டுச் செல்வார்கள்.
ஒரு கைரேகை, ஒரு கால்தடம், செல்போன் சிக்னல் அல்லது ஏதாவது ஒரு சிசிடிவி காட்சி என அந்த ஒரு புள்ளியைப் பிடித்தே காவல்துறை ஒட்டுமொத்த வழக்கையும் உடைத்துவிடும். சமீபத்தில் மதுரை தனிஷ்க் வழக்கில் கூட நிஷாந்த் - மீனாட்சி சிக்கியது அப்படித்தான்.

ஆனால், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவில் 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான வழக்கில், ஒரு மாதத்திற்கும் மேலாகியும் உறுதியான ஒரு சிறு துப்பு கூட இதுவரை சிக்கவில்லை என்பதுதான் ஒட்டுமொத்த காவல்துறையையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
வெறும் யூகங்கள் மட்டுமே... உறுதியான ஆதாரம் இல்லை!
கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய சிறுமி ஹேமலதா, மறுநாள் அதிகாலையில் மாயமானார். அன்று முதல் இன்று வரை காவல்துறை கையில் எடுத்த அத்தனை கோணங்களும் வெறும் யூகங்களாகவே நீடிக்கின்றனவே தவிர, ஒரு வலிமையான ஆதாரம் கூடக் கிடைக்கவில்லை:
ரவுடி ராஜதுரை, கூட்டாளி அரவிந்த், சாமியார் சரவணன், மாஜி பஞ்சாயத்து தலைவர் எனப் பலரை விசாரித்தும் நேரடித் தொடர்பு நிரூபிக்கப்படவில்லை. 14 நேஷனல் பெர்மிட் லாரிகள், நள்ளிரவில் சென்ற வில்லுப்பாட்டு குழுவின் வேன், நாமக்கல் முருகன் கோவில் சிசிடிவி எனப் பல திசைகளில் தேடியும் விடை கிடைக்கவில்லை.
பெற்றோரைத் தனித்தனியாக 7 முதல் 8 மணி நேரம் விசாரித்தும், செங்கல் சூளையில் தடயவியல் சோதனை நடத்தியும் மர்ம முடிச்சு இன்னும் அவிழவில்லை.
சிசிடிவி இல்லாததே காவல்துறைக்குப் பெரிய மைனஸ்!
சமீபத்தில் மதுரையில் நடந்த தனிஷ்க் நகைக்கடை கொள்ளையைக் காவல்துறை வெறும் 48 மணி நேரத்தில் உடைத்ததற்கு முக்கியக் காரணம் அங்கு இருந்த சிசிடிவி கேமராக்கள். ஆனால், ஆலம்பூண்டி குளக்கரை தெரு என்ற இந்தச் சிறிய கிராமத்து மண் சாலையில் ஒரே ஒரு சிசிடிவி கேமரா கூட இல்லாதது காவல்துறைக்கு மிகப்பெரிய மைனஸ் பாயிண்டாக மாறிவிட்டது.
நள்ளிரவு இருட்டில் வீட்டிற்குள் வந்தது யார், குழந்தை எந்தத் திசையில் கொண்டு செல்லப்பட்டாள் என்பதைக் காட்ட எந்த டிஜிட்டல் கண்ணும் இல்லாததால், புலனாய்வு அதிகாரிகள் இருட்டில் துழாவ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கற்பனைக்கு எட்டாத அளவுக்குப் பக்காவான மாஸ்டர் பிளான்!
இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறை வட்டாரங்கள் மிக முக்கியமான ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகின்றன. அதாவது, இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மிகத் துல்லியமான, கற்பனைக்கு எட்டாத அளவுக்குப் பக்காவான ஒரு திட்டத்தை தீட்டி இதைச் செய்துள்ளார்கள் என்பதே அது!
ஒரு பெரிய நகரத்திலோ அல்லது தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த இடத்திலோ இவ்வளவு நேர்த்தியாகத் தடயங்களை அழித்து ஒரு குற்றம் நடந்தால் ஆச்சரியப்படலாம். அவர்களுக்கு அதற்கான exposure இருக்கும். ஆனால், வெளியாட்கள் எளிதில் வந்து செல்ல முடியாத, எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்த ஒரு சின்ன கிராமத்தில், எந்த ஒரு சத்தமும் இல்லாமல், ஒரு சிறு தடயம் கூடச் சிக்காமல், ஒரு 7 வயதுக் குழந்தையை மாயமாக்கியிருப்பது சாதாரண விஷயமல்ல என அதிகாரிகள் கருதுகின்றனர்.
செல்போன் சிக்னல்களில் சிக்காமல் தப்பித்தது எப்படி? நள்ளிரவு நேரத்தைத் துல்லியமாகத் தேர்ந்தெடுத்தது எப்படி? உள்ளூர் போலீசாரின் ஆரம்பக்கட்ட அலட்சியத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது எப்படி?
இவை அனைத்தையும் பார்க்கும்போது, இந்தச் சம்பவத்தின் பின்னணியில் மிகத் தெளிவான திட்டமிடல் இருப்பது உறுதியாகிறது. ஒரு சின்ன கிராமத்தில் அரங்கேறிய இந்த பெர்ஃபெக்ட் கிரைம் புதிரை உடைக்க, சிபிசிஐடி அதிகாரிகள் இப்போது ஒவ்வொரு வார்த்தையையும், ஒவ்வொரு நொடியையும் நுணுக்கமாக ஆய்வு செய்து வருகின்றனர். அந்த ஒரு சிறு தடயம் சிக்கும் நாளில்தான், செஞ்சி சிறுமி ஹேமலதா மாயமான மர்மத்திற்கு விடை கிடைக்கும்!


Click it and Unblock the Notifications
