For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வன்னித் தமிழர்களுக்கு கனடா தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உதவிக்கரம்

Google Oneindia Tamil News

டொரன்டோ: வன்னியில் தமிழர் புனர்வாழ்வுப் பணிகளுக்காக கனடா தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பல்வேறு உதவிகளைப் புரியவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து கனடா தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தலைவர் இரா. குணநாதன் விடுத்துள்ள அறிக்கை..

கனடா தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கடந்த ஓராண்டுக்கு மேலாக அதன் செயற்பாடுகளை முடக்கி வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. நாட்டில் தொடர்ந்தும் நிலவுகின்ற குழப்ப நிலையே அதற்குக் காரணம். மேலும், கழகத்தின் செலவுகளை தவிர்க்கும் பொருட்டு எமது அலுவலகமும் தற்போது மூடப்பட்டுள்ளது. கழகத்தின் நிதி அனைத்தும் கணக்காய்வு செய்யப்பட்டு கனடிய வைப்பகமொன்றில் பாதுகாப்பாக இடப்பட்டுள்ளது. தாயகத்தில் இன்னலுறும் எம்மக்களுக்கு இடருதவி வழங்க இந்த நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்பதை நிதி வழங்கிய பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

எமது தாயகத்தில் உற்றார் உறவினரைப் பலிகொடுத்துத் தவிப்பவர் தொகை அளவிடமுடியாதது. உடல் உறுப்புகளை இழந்தவர்கள் ஆயிரம் ஆயிரம். வாழ்ந்த வீடுகள் தேடிய சொத்துக்கள் பயன்தரும் மரங்கள் அனைத்தையும் இழந்து அலைந்துலைந்த எமது உறவுகள் நீண்ட காலம் முகாங்களில் அடைக்கப்பட்டுத் துன்புற்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் தற்போது மீள் குடியேற்றம் என்ற பெயரில் மீண்டும் தமது ஊருக்குக் கொண்டுவந்து விடப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் குடியிருப்பதற்கு உரிய வீடின்றி, குளிப்பதற்கும் குடிப்பதற்கும் நீரின்றி, உண்ணப் போதிய உணவின்றி பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப வசதியின்றி, வாழ்க்கையைக் கொண்டு நடத்த வருவாய் ஏதும் இன்றி அல்லல் படுகின்றனர். பல்கலைக்கழக மாணவர்கள் நிதியின்மையால் தம் கல்வியைத் தொடரமுடியாது தத்தளிக்கின்றனர். அதுமட்டுமின்றி வடகிழக்கில் ஏறத்தாழ 75, 000 பெண்கள் தங்கணவரை இழந்து கைப்பெண்கள் ஆகியுள்ளனர்.

இந்நிலையில் கனடா தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தொடர்ந்தும் செயலற்றிருக்க முடியாதெனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இன்னலுறும் எம்மக்களுக்கு ஏதாவது வகையில் உதவவேண்டும் என்ற முனைப்பால் நாட்டிலுள்ள சில நம்பிக்கைக்குரிய அமைப்புகளின் உதவியுடன் எம் உதவிகளையாற்ற கனடா தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஒழுங்கு செய்துள்ளது என்பதை அறியத் தருகின்றோம்.

வன்னி மாவட்டத்தில் இருந்த பல கிணறுகள் பாழடைந்துள்ளன. குடிப்பதற்கும் குளிப்பதற்கும் நீருக்காக எம்மக்கள் இன்னல் படுகிறார்கள். எனவே எமது இடருதவியின் முதற்கட்டமாக பாழடைந்த இக்கிணறுகளை இறைத்துச் சுத்தமாக்கி மக்கள் பாவனைக்கு ஏற்றதாகத் திருத்தி அமைப்பதற்கென கனடா தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அதன் நிதியிலிருந்து 10,000 வெள்ளிகளை உடனடியாக வழங்க முன்வந்துள்ளது.

அடுத்த கட்டமாக கல்வியைத் தொடரமுடியாத பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவும் திட்டம் மேற்கொள்ளப்படும். இதனையடுத்து மக்கள் வழங்கும் நிதி உதவியைக்கொண்டு மேலும் பல இடருதவிப் பணிகளை எமது கழகம் முன்னெடுக்கவுள்ளது.

எமது இடருதவிப் பணிகள் யாவும் வழமை போல் வெளிப்படையாகவும் பொறுப்பான முறையிலும் நடைமுறைப்படுத்தப்படும். இந்த வரலாற்றுக் கடமையைச் செவ்வனேயாற்ற நல்லுள்ளம் கொண்ட பல தன்னார்வத் தொண்டர்களின் உதவி தேவைப்படுகிறது. விரும்புவோர் தயவுசெய்து 416 431 1262, 416 661 6933, 416 418 5697, 416 505 7723 என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X