வட சென்னையில் 2 பெண்களிடம் ஹெல்மட் கொள்ளையர்கள் அடுத்தடுத்து நகை திருட்டு
சென்னை : வட சென்னையில் நர்ஸ் மற்றும் ஆசிரியை ஒருவரிடம் அடுத்தடுத்து ஹெல்மட் அணிந்தபடி வந்த கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மகாகவி பாரதி நகர் நகர் 12-வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி பொன்னம்மாள். அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிகிறார்.
நேற்று காலை இவர் வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மட் அணிந்த 2 பேர் வந்து அவரது கழுத்தில் இருந்த நகையை பறித்துச் சென்று விட்டனர். இதுபற்றி எம்.கே.பி. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுபதி விசாரித்து வருகிறார்.
இதேபோல எருக்கஞ்சேரி ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ராணி ஆசிரியையாக வேலை பார்க்கிறார். நேற்று மாலை வீட்டு வாசலில் நின்றிருந்தபோது ஹெல்மெட் அணிந்து மோட்டார்சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் அவரது கழுத்தில் கிடந்த நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.