• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அணு விபத்து இழப்பீடு மசோதா: பாஜக எதிர்ப்பால் நீக்கப்பட்ட 'அண்ட்' என்ற வார்த்தை!!

By Chakra
|

Nuclear Bill
டெல்லி: எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பைத் தொடர்ந்து அணு விபத்து இழப்பீடு மசோதாவில் உள்ள அன்ட் என்ற வார்த்தையை மத்திய அரசு நீக்கியுள்ளது. இந்த திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து விட்டது. இதையடுத்து இன்று இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தம் தொடர்பாக நாடாளுமன்ற குழு தெரிவித்த பரிந்துரைகள் குறித்து விவாதிக்க வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. அமைச்சரவை, வெள்ளிக்கிழமை காலை கூடி இந்த மசோதாவில் செய்யவேண்டிய திருத்தம் தொடர்பாக விவாதிக்கும் என அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

உத்தேச அணு விபத்து இழப்பீடு சட்டம் தொடர்பான சில அம்சங்கள் மீது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. பாஜக, இடதுசாரிகள் உள்பட பல்வேறு கட்சிகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

2008ல் நிறைவேறிய இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டின்படி இரு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி வர்த்தகம் நடைமுறைக்கு வர இந்த சட்டம் அவசியம். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுக்கு நவம்பரில் வரவுள்ளார். அதற்குள்ளாக அணுசக்தி விபத்து இழப்பீட்டு மசோதாவை நிறைவேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முனைப்பாக உள்ளது.

இந்த மசோதாவுக்கு பாஜகவின் ஆதரவை பெற காங்கிரஸ் ரகசிய உடன்பாடு செய்துகொண்டுள்ளதாகவும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சோரபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கிலிருந்து விடுக்க முயற்சிப்பதாகவும் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜவாதி கட்சி உள்ளிட்டவை குற்றம்சாட்டியுள்ளன.

இந்த நிலையில் மசோதாவில் உள்ள 'அன்ட்' என்ற வார்த்தைக்கு கடும் எதிர்ப்பு நிலவியதால் அதை தற்போது அரசு நீக்கி விட்டது.

இந்த ஒரு வார்த்தையால், அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் உரிய இழப்பீடு தராமல் தப்பித்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்பது எதிர்க்கட்சிகளின் கடும் ஆட்சேபனையாகும். இதையடுத்து இதை சரி செய்ய அரசு ஒத்துக் கொண்டது.

எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்த மசோதாவில் இடம்பெற்றுள்ள 17வது பிரிவுதான். தற்போது அந்த அன்ட் வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதில் எப்படி அந்த பிரிவு திருத்தப்பட்டுள்ளது என்பதை அரசு தெரிவிக்கவில்லை. இந்த திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து இன்றே சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கலாகிறது.

'அமெரிக்க நிர்ப்பந்தத்திற்கு அடி பணியும் இந்தியா':

முன்னதாக நேற்று நாடாளுமன்றத்தில் போபால் விஷ வாயு சம்பவத்தில் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு இந்தியா பணிந்து விட்டதாக இடதுசாரிகளும், பாஜக உறுப்பினர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

போபால் விஷவாயு கசிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடாக அமெரிக்காவின் டெள கெமிக்கல் நிறுவனத்திடமிருந்து ரூ. 1,500 கோடியைப் பெறும் முயற்சியைக் கைவிட இந்தியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்துள்ளது.

இதற்கு ஆதாரமாக திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவும், அமெரிக்க பாதுகாப்புத் துறை இணையமைச்சர் மைக்கேல் ஃபோர்மனும் பரிமாறிக்கொண்ட இ-மெயிலை ஆங்கில செய்தித் தொலைக்காட்சி ஒன்று புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை பிரச்னை எழுப்பினர். சிபிஐ உறுப்பினர் டி.ராஜா பேசுகையில்,

மாண்டேக் சிங் அலுவாலியாவுக்கும், அமெரிக்க இணையமைச்சர் மைக்கேல் ஃபோர்மெனுக்கும் இடையிலான இ-மெயில் பரிமாற்றம் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இந்தியாவை தங்கள் நிர்பந்தத்துக்கு பணியுமாறு அமெரிக்க இணையமைச்சர் கூறியுள்ளார். உலக வங்கியில் இந்தியாவுக்கு கடன் கிடைக்கும் விஷயத்தில் நாங்கள் உதவுகிறோம். ஆனால் போபால் விஷவாயு விவகாரத்தில் அமெரிக்காவின் டெள கெமிக்கல் நிறுவனத்திடம் நஷ்ட ஈடு பெறும் விஷயம் மேலும் வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அப்போதுதான் இந்தியா- அமெரிக்கா இடையிலான முதலீட்டு உறவுகள் கெடாமல் இருக்கும் என்று அமெரிக்க அமைச்சர் தனது இ-மெயிலில் கூறியுள்ளார்.

இதன் மூலம் அமெரிக்கா இந்தியாவை தாங்கள் கூறியபடி நடந்து கொள்ள நிர்பந்தப்படுத்தியுள்ளது தெளிவாகிறது. நமது நாட்டில் எடுக்கப்படும் முடிவுகளில் தலையிட்டு மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது. நமது அரசும் அமெரிக்காவின் நிர்பந்தத்துக்கு பணிகிறது. இதனை ஒருபோதும் ஏற்கமுடியாது.

அண்மையில் போபால் விஷவாயு விவகாரம் குறித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு வெளிநாடுகளில் இருந்து எவ்வித நிர்பந்தமும் இல்லை என்று குறிப்பிட்டார். இது குறித்து மத்திய அரசு முழுமையான விளக்கமளிக்க வேண்டும் என்றார்.

போபால் விஷவாயுக் கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவின் டெள கெமிக்கல் நிறுவனம் (இந்த நிறுவனம்தான் யூனியன் கார்பைடு நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ளது) ரூ. 1,500 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டுமென்று கடந்த ஜூன் 22-ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிஎம் தலைவர் சீதாராம் எச்சூரி கூறுகையில்,

இது பன்னாட்டு நிறுவனத்தின் மூலம் வந்துள்ள மறைமுக நெருக்குதல். போபால் விஷவாயுக் கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவது மட்டுமன்றி, அந்த நிறுவனத்தில் உள்ள விஷக்கழிவுகளை அகற்றும் பொறுப்பையும் டெள கெமிக்கல் நிறுவனம்தான் ஏற்க வேண்டும் என்றார்.

எம்பிக்கள் ஊதிய உயர்வுக்கும் ஒப்புதல்:

இந் நிலையில் எம்பிக்களின் ஊதியத்தை உயர்த்தும் மசோதாவுக்கும் மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

இதன்படி எம்.பிக்களின் சம்பளம் ரூ. 16,000ல் இருந்து ரூ. 50,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தினசரி படி ரூ. 1,000ல் இருந்து ரூ. 2,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X