For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரில் சீக்கியர்களுக்கு தீவிரவாதிகள் மிரட்டல்: பாதுகாப்பதாக மத்திய அரசு அறிவிப்பு

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: காஷ்மீரில் வசிக்கும் சீக்கியர்கள் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று தீவிரவாத அமைப்புகளிடமிருந்து மிரட்டல்கள் வர ஆரம்பித்துள்ளன.

இதையடுத்து தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு காஷ்மீரில் வசிக்கும் சீக்கியர்கள் பயப்பட வேண்டாம், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 70,000 சீக்கியர்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு, சமீப காலமாக தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்து வருகின்றனர். காஷ்மீரில் நடைபெறும் கலவரத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் என்றும் தீவிரவாதிகள் மிரட்டுவதாக கூறப்படுகிறது.

அவ்வாறு மதம் மாறாவிட்டால் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என்று மிரட்ட ஆரம்பித்துள்ளனர். இந்தக் கடிதங்கள் காஷ்மீரில் உள்ள குருத்வாராக்கள் மற்றும் சீ்க்கிய அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு வர ஆரம்பித்துள்ளன.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பியது. மக்களவையில் கேள்வி நேரம் தொடங்குவதற்கு முன் அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த ரத்தன் சிங் அஞ்சாலா, இந்த பிரச்சனையைக் கிளப்பினார்.

அவர் கூறுகையில், தீவிரவாதிகளிடம் இருந்து காஷ்மீர் சீக்கியர்களுக்கு மர்ம மிரட்டல் கடிதங்கள் வருகின்றன. அவர்களை மதம் மாறுமாறு வலியுறுத்துகின்றனர். எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் மரணத்தை தழுவினாலும் தழுவுவார்களே தவிர வேறு மதத்தை தழுவ மாட்டார்கள் என்றார்.

அப்போது பேசிய காஷ்மீரின் ஆளும் தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த எம்.பி. மிர்சா மெகபூப், இது போன்ற மிரட்டல்கள் காஷ்மீர கொள்கைகளுக்கு எதிரானது. காஷ்மீரில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் சீக்கியர்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்றார்.

இதையடுத்துப் பேசிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, சீக்கியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும். காஷ்மீரில் உள்ள முஸ்லிம்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள முஸ்லிம்களும் சீக்கிய சமுதாயத்துக்கு துணை நிற்பார்கள் என்றார்.

இந்தப் பிரச்சனை ராஜ்யசபாவிலும் கிளப்பப்பட்டது. பாஜக எம்பி்க்களான அலுவாலியா, பல்பீர் புஞ்ச் ஆகியோர் பேசுகையி்ல், ஏற்கனவே காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து 5 லட்சம் இந்துக்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். தற்போது, சொந்த நாட்டிலேயே அவர்கள் அகதிகளாக வாழ்கின்றனர். இதனால் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு ஆட்டம் கண்டுள்ளது என்றனர்.

இதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, சிறுபான்மை மக்களை காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

ஆனால், இந்த பதிலால் எதிர்க்கட்சியினர் திருப்தி அடையவில்லை. அவர்கள் அமளியில் ஈடுபடவே அவை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் கூடியது.

அப்போது பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தீவிரவாதிகள் மிரட்டல் குறித்து நாங்கள் அறிவோம். அதுபற்றி அச்சப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை. சீக்கிய சமூகத்துக்கு யாரும் தீங்கிழைக்க அனுமதிக்க மாட்டோம். சீக்கியர்களின் உரிமை பாதுகாக்கப்படும் என்று காஷ்மீர் முதல்வர் உமரும் உறுதி அளித்துள்ளார் என்றார்.

இந் நிலையில் இந்த மிரட்டல்களுக்கு பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் வசிக்கும் சீக்கியர்களுக்கு பாதுகாப்பு தர மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பாட்டியாலாவில் நிருபர்களிடம் பேசிய பாதல், காஷ்மீரில் வசிக்கும் சீக்கியர்கள் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோருடன் தொலைபேசியில் பேசியுள்ளேன்.

காஷ்மீரில் இப்போதுள்ள நிலை குறித்து ஆய்வு நடத்த ஒரு குழுவை அனுப்புமாறு சிரோமணி குருத்துவாரா பிரபந்தக் கமிட்டி தலைவர் அவ்தார் சிங் மக்கரை கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார்.

காஷ்மீரில் ஊரடங்கு நீட்டிப்பு-துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி:

இந் நிலையில் காஷ்மீரில் போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியாயினர். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.

கலவரத்தையொட்டி காஷ்மீரில் 8 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரை சுதந்திர நாடாக அறிவிக்கக் கோரி பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் ஒரு பிரிவை சேர்ந்த இளைஞர்களும் பெண்களும் வீதிகளில் இறங்கி கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X