For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலீஸாருக்கு இனி டபுள் பெட்ரூம் வீடு-தனியாக கேன்டீன்: முதல்வர் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: காவல்துறையினருக்கான அடுக்கு மாடிக் குடியிருப்புகள் இனி டபுள் பெட்ரூம் கொண்டதாக இருக்கும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னையில் கடந்த 2 நாட்களாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இதில் நேற்று பேசிய முதல்வர் கருணாநிதி காவல்துறையினருக்கு சில சலுகைளை அறிவித்தார்.

முதல்வர் பேசுகையில்,

எந்த ஒரு அரசானாலும், எதிர்க்கட்சிகள் முதலில் குற்றம் சாட்டுவது காவல் துறையைத் தான். அதனால், காவல்துறை அதிகாரிகள் கவனத்துடன் இருக்க வேண்டும்.

மாநிலத்தின் அமைதி, நல்வாழ்வு, மக்களின் உரிமைகள் காப்பாற்றப்படும் நிலை, இவையெல்லாம் அரசின் பலதரப்பட்ட அதிகாரிகள் மூலம் நடத்தப் பட்டாலும், எல்லாவற்றையும் மிகுந்த பொறுப்புடன் கவனிக்க வேண்டியது காவல் துறையிடம் உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது.

குற்றங்களை களைவதற்கு எப்படியெல்லாம் முயற்சிகள் எடுத்தோம் என்பதைப்பற்றி கூறினீர்கள். இருந்தாலும், நாங்கள் கவலைப்படும் அளவிற்கு சில நிகழ்வுகள் மாநிலத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்துகொண்டிருப்பதை மறந்துவிடக் கூடாது.

இது மிக, மிக முக்கியமான நேரம். நாம் விரைவில், தமிழகத்தில் தேர்தலை சந்திக்க உள்ளோம். தேர்தல் நேரம் பார்த்து, அரசுக்கு ஏதாவது களங்கம் ஏற்படுத்த வேண்டும்; பழி சுமத்த வேண்டும், தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்த வேண்டும் என்று கருதுகின்ற சில எதிர்க்கட்சியினர் இருப்பர்.

நான், எல்லா எதிர்க் கட்சியினரையும் கூறவில்லை. இதற்கென்றே, தங்களுக்கு தொண்டர்கள் இருக்கிறார்களோ, இல்லையோ, ஆனால், இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு, பிரச்னைகளை உருவாக்கி, ஜாதிக் கலவரம், மதக் கலவரம் போன்றவற்றை ஏற்படுத்தி அரசுக்கு கெட்டபெயரை உருவாக்கலாம். இப்படி எண்ணுகின்ற நிலைமை இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

கட்சி சார்பற்ற முறையில், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நீங்களும், நானும் சேர்ந்து தமிழகத்தில் பொது அமைதியை நிலவச் செய்வோம். தமிழகத்தில் ஜனநாயகம் காப்பாற்றப்பட பாடுபடுவோம் என்பது தான் என்னுடைய கோரிக்கை. ஐந்து முறை முதல்வராக இருந்து ஆற்றிய பணிகளை நீங்கள் எண்ணிப் பார்த்து, இந்த ஆட்சி தொடர வேண்டுமா, வேண்டாமா என்று முடிவுக்கு வர வேண்டிய கடமையும், பொறுப்பும் சுதந்திரமாக உங்களுக்கு இருக்கிறது. அதில், நான் தலையிடவும் மாட்டேன்; மறுப்பு கருத்து சொல்லவும் மாட்டேன்.

மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்க உரிய நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும். அப்படி செய்தால், ஒரு நல்ல ஆட்சியை, அது தி.மு.க., ஆட்சி என்று நான் கூற மாட்டேன்; ஒரு நல்ல ஆட்சி தமிழகத்தில் நடைபெற நீங்களும், நாங்களும் சேர்ந்து பணியாற்றுகிறோம் என்று பொருள்.

ஒரே நேரத்தில் 3,000 போலீசார் பயிற்சி பெறும் வசதிகொண்ட காவலர் பயிற்சி மையம் அமைக்கப்படும். போலீசாருக்கு தற்போது ஒதுக்கீடு செய்யப்படும் வீட்டின் பரப்பளவு 550 சதுர அடியாக உள்ளது. 100 சதுர அடி சேர்த்து (டபுள் பெட்ரூம்), 650 சதுர அடி பரப்பளவு கொண்ட குடியிருப்புகள் கட்டப்படும்.

ராணுவத்தினருக்கு உள்ளதுபோல், போலீசாருக்கு குறைந்த விலையில் பொருட்களை பெறுவதற்கு வசதியாக, மதிப்புக் கூட்டுவரி விலக்கு பெற்ற கேன்டீன் வசதி செய்து தரப்படும்.

விபத்துகளை தவிர்த்திட இரு சக்கர வாகனங்கள் அனைத்திலும் இரவில் ஒளியை பிரதிபலிக்கும் சாதனம்பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்படும். விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டி தவறு செய்யும் ஓட்டுனர் களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க மையம் அமைக்கப்படும் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X