2013-ம் ஆண்டு விண்ணில் ஏவப்படுகிறது சந்திரயான்-2: 7 உபகரணங்களை அனுப்ப முடிவு
சந்திரனில் ஆராய்ச்சி செய்வதற்காக முதன்முதலாக இந்தியா சந்திராயன் செயற்கைகோளை அனுப்பியது. இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
இதையடுத்து வரும் 2013-ம் ஆண்டு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் சந்திரயான்-2 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைகோளில் எந்தெந்த உபகரணங்களை அனுப்புவது என்று முடிவு செய்யும் நிபுணர்கள் குழு கூட்டம் பேராசிரியர் யு.ஆர்.ராவ் தலைமையில் நடைபெற்றது.
இந்த குழு தீவிரமாக பரிசீலித்த பிறகு சந்திரயான்-2 திட்டத்தின் நோக்கம் மற்றும் ராக்கெட்டில் உள்ள இடவசதி உள்ளிட்டவையை கருத்தில் கொண்டு அனுப்பப்பட வேண்டிய ஆராய்ச்சி உபகரணங்களை முடிவு செய்துள்ளது.
சந்திரயான்-2 திட்டத்தில் செயற்கை கோள் (ஆர்பிட்டர்), சந்திரனில் இறங்கி ஆராய்ச்சியில் ஈடுபடும் ரோபோ (ரோவர்), அதனை சந்திரனில் கொண்டு சேர்க்கும் லேண்டர் ஆகியவை இடம்பெறும். இதில் லேண்டர் கருவியை ரஷ்யா வழங்குகிறது. ஆர்பிட்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றை இஸ்ரோ உருவாக்குகிறது.
சந்திராயனில் அனுப்பப்படும் விஞ்ஞான உபகரணங்களின் விவரம் வருமாறு:
1. சாப்ட் எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர், சோலார் எக்ஸ்-ரே மானிட்டர். இவை நிலவின் மேற்பரப்பை ஆராயும்.
2. சந்திரனில் உள்ள பனிக்கட்டி மற்றும் தண்ணீர் பற்றி ஆராய்வதற்கான எல் மற்றும் எஸ் பேண்ட் சின்தெடிக் அபெர்சர் ரேடார்.
3. சந்திரனில் உள்ள கனிம வளங்கள் மற்றும் தண்ணீரின் மூலக்கூறுகள் பற்றி ஆராய்வதற்கான இமேஜிங் ஐ.ஆர்.ஸ்பெக்ட்ரோ மீட்டர்.
4. நியுட்ரல் மாஸ் ஸ்பெக்ட்ரோ மீட்டர்.
5. சந்திரனின் பூகோள அமைப்பை ஆராய்வதற்கான டெர்ரைன் மேப்பிங் காமிரா-2 (முப்பரிமாண காமிரா)
இந்த 5 உபகரணங்களும் ஆர்பிட்டரில் இடம்பெறுகின்றன.
இவை தவிர்த்து லேசர் கதிர் மூலம் சந்திரனின் தரைப்பகுதியில் ஆராய்ச்சி செய்வதற்கான ஸ்பெக்ட்ரோஸ்கோப் மற்றும் எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோஸ்கோப் ஆகியவையும் அனுப்பப்படுகிறது.
சந்திராயன்-2 விண்வெளி ஓடத்தின் எடை 2,650 கிலோ ஆகும். இதில் செயற்கைக் கோள் 1,400 கிலோ, லேண்டர் 1,250 கிலோ ஆகும்.
ஆர்பிட்டர், ரோவர் கருவிகள் பெங்களூர், அகமதாபாத், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் உள்ள இஸ்ரோ மையங்களில் தயாராகி வருகின்றன.