For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரண் திமுக: ஸ்டாலின்

By Chakra
Google Oneindia Tamil News

Stalin
சென்னை: எப்போதும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் கருணாநிதிக்கும் திமுக ஆட்சிக்கும் முஸ்லீம்கள் பக்க பலமாக இருந்து துணை புரிய வேண்டும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழ் மாநில தேசிய லீக் கட்சி சார்பில் சென்னை எழும்பூர் அசோகா ஹோட்டலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. அதில் பேசிய ஸ்டாலின்,

இங்கு உரையாற்றிய திருப்பூர் அல்தாப் ஒன்றை நினைவுக் கூறினார். தலைவர் கருணாநிதி ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் தவறுவதில்லை என்றார்.

எப்போதும், சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்குபவர் கருணாநிதி. நானும் 31 ஆண்டுகளாக தொடர்ந்து இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறேன். என்னுடைய கனிவான கோரிக்கை என்னவென்றால், ஒவ்வொரு முறையும் அழைப்பிதழில் என்னுடைய பெயரை சிறப்பு விருந்தினர் என்று குறிப்பிடுகிறீர்கள்.

நான் சிறப்பு விருந்தினர் அல்ல. நான் உங்களின் ஒருவனாக இருந்து இந்த வாய்ப்பை பெற்றுவருகிறேன். எனவே, அடுத்த ஆண்டாவது உங்களின் ஒருவனாக என்னைக் கருதி பங்குபெறும் வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும்.

1969ம் ஆண்டு கழக ஆட்சியில் தான் மீலாது நபிக்கு முதன் முதலாக அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை கடந்த அதிமுக அரசு 2001ல் ரத்து செய்தது. 15.11.2006 முதல் மீலாது நபி நாளை அரசு விடுமுறை நாளாக மீண்டும் அறிவித்தது தலைவர் கருணாநிதி ஆட்சியில் தான்.

1973ம் ஆண்டு உருது பேசும் லப்பைகள், தெக்கனி முஸ்லிம்கள் ஆகியோரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததும் கருணாநிதி தான். 1974ம் ஆண்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசினர் மகளிர் கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயரை சூட்டியதும் அவர் தான்.

1989ம் ஆண்டு இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் சமுதாய மக்கள் பெரும்பயன் எய்தும் வகையில் " சிறுபான்மையினர் நல ஆணையம்'' உருவாக்கப்பட்டது. 1998ல் ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கை 2,000 என்பது 2,200 ஆக உயர்த்தப்பட்டு, 2008ல் 2,400 ஆகவும் உயர்த்தப்பட்டது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்.

1999ம் ஆண்டு வரை ஹஜ் புனிதப் பயணத்திற்கு குலுக்கல் முறையில் ஆண்டிற்கு 1,800 பேருக்கு மிகாமல் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட முறையை கைவிட்டு, 1999ம் ஆண்டு முதல் தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கியதும் கருணாநிதி தான்.

1999ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை, இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் பயன்பெறும் வகையில் தனியே பிரித்து தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை' உருவாக்கியவர் கருணாநிதி.

ஆனால், ஜெயலலிதாவின் அதிமுக அரசு 2003ல் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்துடன் இணைத்துவிட்டது.

2006ல் ஆட்சி பொறுப்பிற்கு வந்த கருணாநிதி மீண்டும் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை தனியே செயல்படச் செய்து, அதன் மூலம், சிறுபான்மைச் சமுதாய மக்களுக்குத் கழக அரசு தொடர்ந்து உதவி வருகின்றது.

2000ம் ஆண்டு இஸ்லாமியரின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப்பட்டு 21.7.2000 அன்று உருது அகாடமி தொடங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோருக்கான 30 விழுக்காடு இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு, 3.5 சதவீத உள் ஒதுக்கீட்டினை 15.9.2007ல் அண்ணா 99வது ஆண்டு பிறந்த நாள் பரிசாக வழங்கியதும் தலைவர் கலைஞர்.

2008ல் சீறாப்புராணம் பாடிய உமறுப் புலவருக்கு எட்டயபுரத்தில் அமுதகவி உமறுப்புலவர் மணிமண்டபம் ஏற்படுத்தியதும் தலைவர் தான்.

உலமாக்கள் நல வாரியம் 24.8.2009 அன்று ஏற்படுத்தப்பட்டது. தமிழக மேலவையிலும், ராஜ்யசபாவிலும் முஸ்லிம் பிரதிநிதிகளை இடம்பெறச் செய்ததும் திமுக தான்.

2006ம் ஆண்டு 5ம் முறையாக முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி எப்போதும் இல்லாத அளவிற்கு இரண்டு
இஸ்லாமியர்களை தமிழக அமைச்சர்களாக அமர்த்தி அழகு பார்த்தார். தொடர்ந்து முஸ்லிம் பெருமக்களுக்கு பாடுபட்டு, சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் கருணாநிதிக்கும் திமுக ஆட்சிக்கும் பக்க பலமாக இருந்து துணை புரிய நீங்கள் எல்லாம் உறுதி ஏற்க வேண்டும் என்று அன்போடு கேட்டு கொள்கிறேன் என்றார்.

நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, டி.பி.எம்.மைதீன்கான், சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், தமிழ்நாடு ஜமாதுல் உல மகா சபை தலைவர் அப்துல் ரகுமான் ஹஜ்ரத், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் கவிக்கோ அப்துல் ரகுமான், தமிழ்நாடு ஹஜ் கமிட்டித் தலைவர் பிரசிடென்ட் அபுபக்கர், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பேராயர் வின்சென்ட் சின்னத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கருணாநிதிக்கு மேற்கு வங்க முதல்வர் பாராட்டு:

இதற்கிடையே முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதற்காக முதல்வர் கருணாநிதியை, மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா பாராட்டியுள்ளார்.

கொல்கத்தாவில் ரூ. 15 கோடியில் 10 ஆயிரம் பேர் தங்கக்கூடிய ஹஜ் டவர் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் பேசிய புத்ததேவ், முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கியதற்காக தமிழக முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X