For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எரித்திரியாவில் வான்புலிகளின் 6 விமானங்கள்!

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு: எரித்திரியாவில் நிறுத்தப்பட்டுள்ள வான்புலிகளின் 6 போர் விமானங்களை கையகப்படுத்த இலங்கை அரசு தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது.

புலிகளின் சர்வதேச வலையமைப்பு இலங்கை ராணுவச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு குமரன் பத்மநாபன்தான் வெளிப்படையான பெரும் துணையாகத் திகழ்கிறார்.

இந் நிலையில் எரித்திரியா நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் வான்புலிகளுக்குச் சொந்தமான 6 லேசு ரக விமானங்களைப் பாதுகாக்கும் முயற்சிகளை விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மேற்கொண்டுள்ளதாக அரசு ஆதரவு சிங்கள மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த 6 விமானங்கள் தொடர்பான தகவல்களையும் கோத்தபாய ராஜபக்சேவுக்கு குமரன் பத்மநாபன்தான் தெரியப்படுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த 6 விமானங்களையும் கையகப்படுத்தும் முயற்சியில் கேபி உதவியுடன் இலங்கை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கேபியை புலிகளின் பிரதிநிதியாகக் காட்டி விமானங்களை எரித்திரியாவிடம் இலங்கை கோரியது. ஆனால், அவற்றை எரித்ரியா தர மறுத்துவிட்டது.

இந்த விமானங்கள் புலிகளால் வாங்கப்பட்டவை. எரித்திரியா நாட்டில் ஆஸ்மாறா என்னும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை எரித்திரிய அரசாங்கம் கோத்தபயாவிடம் கொடுக்க மறுத்துவிட்டதோடு, அதனை அதன் உரிமையாளர்களான புலிகளிடம்தான் கொடுப்போம் என உறுதியாகக் கூறிவிட்டது.
கேபியை அந்த நாடு புலிகளின் பிரதிநிதியாக ஏற்கவும் மறுத்துவிட்டது. அதாவது, புலிகளின் 'உண்மையான முக்கிய தலைவர்கள்' ஏற்கெனவே எரித்திரியாவின் தொடர்பில் உள்ளதாலேயே அந்நாடு இந்த உறுதிப்பாட்டை மேற்கொண்டுள்ளதாம்.

இன்னும் சில தினங்களில் புலிகள் இந்த 6 விமானங்களையும் பெற்றுக் கொள்வார்கள் என்றும், அவை பறக்கவிருப்பது உறுதி என்றும் சிங்கள பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

இந் நிலையில் எரித்திரியா-புலிகள் உறவை உடைக்க, அந் நாட்டில் தாங்களும் தூதரகம் அமைக்கத் தயாராக இருப்பதாக இலங்கை அறிவித்தது. ஆனால், இலங்கையுடன் தங்களுக்கு தூதரக உறவு தேவையில்லை என எரித்திரியா வெளிப்படையாக அறிவித்துவிட்டது.

கேபியை பிரபாகரன் விலக்கியதன் பின்னணி!:

2000ம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகளின் பல கப்பல்களை சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளால் அழிக்கப்பட்டன.

புலிகளுக்கு ஆயுதம் ஏந்திவந்த கப்பல்கள் வட இலங்கையை நெருங்கும் முன்னரே, அவற்றை இனம் கண்டு அழிப்பது சாதாரணமான விஷயமல்ல. அதற்கு இந்தியாவின் துணை பெரிதும் உதவியிருக்கிறது.

2002ம் ஆண்டின் துவக்கத்தில் புலிகளின் ஆயுதக் கப்பல் சர்வதேச கடற்பரப்பில் நிற்பதாக புலிகளுக்கு செய்தி அனுப்பப்பட்டது. அதில் இருக்கும் ஆயுதங்களை இறக்கி கரைக்கும் கொண்டுவரும் நடவடிக்கையில் கடற்புலிகள் ஈடுபட்டிருந்தபோது சற்றும் எதிர்பாராதவிதமாக அங்குவந்த இலங்கை கடற்படையினர் அக்கப்பல் மீது கடும் தாக்குதல் தொடுத்தனர்.

இதனால் கப்பல் தீ பற்றி எரிந்து சில மணி நேரத்தில் கடலில் மூழ்கியது. இருப்பினும் கப்பல் வெடிக்கவில்லை. வெடிகுண்டுகள், ஆயுதங்கள் இருந்திருந்தால் வெடித்திருக்கும். எனவே அக் கப்பலில் ஆயுதங்கள் இல்லை என்பதை புலிகளின் தலைமைப்பீடம் அறிந்தது. வாங்காத ஆயுதத்துக்கு கணக்குக் காட்டிய கே.பி புலிகளின் தலைவரால் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பதில்தான் ஆயுதங்களை கொள்முதல் பணிகளுக்கு பொன்னையா ஆனந்தராஜா நியமிக்கப்பட்டார்.

தற்போது கே.பி சரணடைந்து இலங்கை அரசிடம் தஞ்சம் கோரியுள்ள நிலையில், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மலேசியாவிலிருந்த புலிகள் இயக்கப் பிரமுகர் ராஜன் கைதானார். பின்னர் பிரின்சஸ் கிரிஸ்டீனா என்ற கப்பலும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அத்தோடு நின்றுவிடாமல், கே.பி தனது பொறுப்பில் இருந்த மேலும் 2 சரக்குக் கப்பல்களை, முறையே கோத்தபாய, பசில், ஆகியோரின் பெயருக்கு மாற்றிக் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

இலங்கைக்கு கப்பலைக் கொண்டுவந்தால் அது அரசுடமையாக்கப்படும் என்பதால் வெளிநாடுகளில் வைத்தே அதன் உரிமை மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இலங்கை அரசின் கவனம் பொன்னையா ஆனந்தராஜா பக்கம் திரும்பியுள்ளது. இவர் எந்த நாட்டில் வசித்துவருகிறார் என்று இதுவரை யாரும் அறிந்ததில்லை. அத்தோடு இன்றுவரை சர்வசாதாரணமாக ஆயுதங்களை வாங்க இவரால் முடியும் என்றும், அவ்வகையான தொடர்புகளை இவர் இன்னமும் வைத்திருப்பதாவதாகவும் கூறப்படுகிறது. இந்த பொன்னையாவின் இருப்பிடத்தைத் தெரிந்து அதை இலங்கை அரசிடம் சொல்ல, கேபி தனது சர்வதேசத் தொடர்புகளைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X