அமைச்சர் கே.என். நேரு தம்பியை குறிவைக்கும் கொலை கும்பல்: திருச்சியில் பரபரப்பு

தமிழக போக்குவரத்துறை அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம். இவர் திருச்சி தில்லை நகரில் வசித்து வருகிறார்.
இவர் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கிரானைட், கம்ப்யூட்டர், பைனான்ஸ் என பல்வேறு தொழில்களில் கொடிகட்டிப் பறந்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன் ராமஜெயத்தை கொலை செய்ய முயற்சி செய்வதாகக் கூறி திருச்சியைச் சேர்ந்த பிரபல ரவுடி குணாவை போலீசார் கைது செய்தனர். மேலும், தேமுதிக பிரமுகர் செந்தூரேஸ்வன் மீதும் சந்தேகப் பார்வை கொண்டு அவரை போலீசார் விசாரணை செய்தனர்.
இதற்கிடையே ராமஜெயத்தை கொலை செய்ய எட்டரைக் கோப்பு கும்பல் தான் முயன்று வருவதாக ரகசியத் தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் கே.என். நேரு குடும்பத்திற்குச் சொந்தமான நவீன அரிசி அலை ஒன்று லால்குடி அருகே பூவலூரில் உள்ளது. அந்த ஆலையில் வேலை செய்த ஒருவரை ராமஜெயம் விசாரணை என்ற பெயரில் அழைத்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் அந்த நபர் இறந்து போனார். இதற்கு காரணம் ராமஜெயம் தான் என முடிவு செய்த அவரது சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் ராமஜெயத்திடம் நீதி கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதால் இரு தரப்பும் கடும் கோபத்தில் இருந்து வந்தது.
ராமஜெயத்தை குறிவைத்து எட்டரைக் கோப்பு கும்பல் ஒன்று பயங்கர ஆயதங்களுடன் அவரை பின்தொடர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் ரவுடி குணாவை போலீசார் கைது செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதனால் திருச்சியிலும், திமுக தரப்பிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.