For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விழுப்புரம் அருகே லாரி மீது ராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ் மோதல்: பல ரயில்கள் தாமதம்

By Chakra
Google Oneindia Tamil News

விழுப்புரம்: ராமேஸ்வரம்- சென்னை சேது எக்ஸ்பிரஸ் ரயில் மீது இன்று அதிகாலை லாரி மோதியதில் என்ஜின் சேதமடைந்தது. இதனால் அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு வரும் அனைத்து ரயில்களும் 4 மணி நேரம தாமதமாக வந்து சேர்ந்தன.

பெங்களூரில் இருந்து புதுவைக்கு ஒடுகள் ஏற்றிய லாரி சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 4 மணியளவில் திண்டிவனம் அருகே தென்பசார் என்ற இடத்தில் ஆளில்லா லெவல் கிராசிங்கை லாரி கடக்க முயன்றபோது அதன் அச்சு முறிந்தது.

இதனால் லாரி தண்டவாளத்தின் நடுவில் நின்றது. அதை ஓட்டி வந்த டிரைவர் சங்கர் (35), கிளீனர் உமாபதி (30) ஆகியோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் லாரியை தண்டவாளத்தில் இருந்து அகற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இதையடுத்து இன்னொரு லாரி மூலம் அச்சு இந்த லாரியை சங்கிலியை கட்டி இழுக்க முயன்றனர். ஆனாலும் அகற்ற முடியவில்லை.

தகவல் அறிந்த ஏராளமானோர் அப்பகுதியில் கூடி லாரியை அப்புறப்படுத்த முயன்றும் பலனில்லை.

அப்போது சேது எக்ஸ்பிரஸ் ரயில் அங்கு வரவே டிரைவர் கீழே குதித்து ஓடினார். அங்கு கூடியிருந்த மக்களும் தண்டவாளத்தை விட்டு வெகு தூரத்துக்கு ஓடிவிட்டனர்.

அடுத்த சில நொடிகளில் லாரி மீது ரயில் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் லாரி சின்னாபின்னமானது. ரயில் என்ஜினும் பலத்த சேதமடைந்தது.

அப்போது பயங்கர சத்தத்துடன் ரயில் குலுங்கியதால் பயணிகள் அச்சத்தில் அலறினர்.

இதையடுத்து சிறிது தூரம் சென்ற ரயில் நிறுத்தப்பட்டது.
இது குறித்து உடனடியாக ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பிற ரயில் நிலையங்களுக்குத் தகவல் தந்து அந்த வழியே வரும் ரயில்களை ஆங்காங்கே நிறுத்தினர்.

தண்டவாளத்தில் சிதைந்து கிடந்த லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.

இந்த விபத்தால் லாரி மீது மோதிய ரெயில் என்ஜின் மூலம் ரயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு சுமார் இரண்டரை மணி நேரத்துக்குப் பின் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் புறப்பட்டுச் சென்றது.

இதனால் சென்னை வந்த நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி, முத்துநகர், பொதிகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில்களும் சுமார் 4 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தன.

இந்த சம்பவம் நடப்பதற்கு சற்று முன் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் அந்த இடத்தைக் கடந்துவிட்டதால் அந்த ரயில் சரியான நேரத்தில் சென்னையை அடைந்துவிட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X