For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புலிகளுக்கு தடை: வைகோ ஆஜராகி வாதாட அனுமதி மறுப்பு

By Chakra
Google Oneindia Tamil News

Vaiko
டெல்லி: விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை நீடிக்கப்பட்டதை எதிரித்து நடந்து வரும் வழக்கில் ஆஜராகி வாதாட மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்ததை எதிரித்து டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி விக்ரமஜித் சென் தலைமையிலான ஒரு நபர் தீர்ப்பாயம் இந்த மனுவை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் தன்னையும் ஒருதரப்பாக சேர்த்துக் கொள்ளக் கோரி வைகோ விண்ணப்பம் செய்திருந்தார்.

இந்த வழக்கு சில தினங்களுக்கு முன் தீர்ப்பாயம் முன் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சார்பில் வழக்கறிஞர் ஏ.எஸ்.சந்திர், தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் தனஞ்சயன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

வைகோ நேரில் ஆஜராகி தனது சார்பில் தானே வாதாடினார். அப்போது வைகோ முன் வைத்த வாதம்:

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டிப்பதற்கு மத்திய அரசு கூறியுள்ள காரணங்கள் உண்மைக்கு புறம்பானவை.

உலகெங்கும் உள்ள தமிழர்களுக்காகவும், இந்தியாவில் உள்ள தமிழர்களுக்காகவும் சேர்த்து தனி தமிழ் ஈழ நாடு கோருவதால் அது இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தாக முடியும் என்று மத்திய அரசு தனது வாதத்தில் கூறியுள்ளது.

தனி ஈழம் என்பது இலங்கைத் தீவில் உள்ள வடக்கு, கிழக்குப் பகுதி. அது அவர்களின் தாயகம். வரலாற்றின் தொடக்கத்திலிருந்து அவர்கள் அரசாண்ட பூமி. தமிழகத்தின் ஒரு அங்குல இடத்தைக்கூட அவர்கள் தனி ஈழத்தோடு சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை. இதற்கு மத்திய அரசு ஆதாரத்தை காட்ட முடியுமா?.

புலிகள் பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்த மத்திய அரசு செய்யும் திட்டமிட்ட பிரசாரமாகும்.

புலிகளின் மீதான தடையால், ஈழத்தமிழர்களுக்கு இப்படிப்பட்ட கொடுந்துன்பமும், துயரமும் நேர்கிறது. இந்தக் காரணத்துக்காகவே, தடையை நீட்டிக்கக் கூடாது என்கிறேன் என்றார்.

அப்போது, புலிகள் மீதான தடையால் நீங்கள் எப்படி பாதிக்கப்பட்டீர்கள் என்று நீதிபதி கேட்டதற்கு பதிலளித்த வைகோ, ஒவ்வொரு முறை தடையை நீட்டிக்கும்போதும் என்னுடைய பேச்சுகளைக் காரணமாகக் காட்டி இருக்கிறார்கள். எனவே, தான் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில், என் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்றார் வைகோ.

அப்போது நீதிபதி, நீங்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறீர்களே, நீங்கள் ஏன் அதில் உறுப்பினராகச் சேரவில்லை?' என்று கேட்டார்.

அதற்கு வைகோ, நான் உறுப்பினராகச் சேரவில்லை. ஆனால், அவர்களுடைய தமிழ் ஈழக் கோரிக்கையைத் தொடக்கத்தில் இருந்தே ஆதரித்து வருகிறேன். அவர்களது இயக்கத்தையும் ஆதரித்து வருகிறேன்' என்றார்.

அப்போது மத்திய அரசு வழக்கறிஞர், வைகோ புலிகள் அமைப்பின் உறுப்பினராகவோ, அதிகாரபூர்வ பிரதிநிதியாகவோ இல்லை. அதனால் அவரது வாதத்தை அனுமதிக்கக் கூடாது என்றார்.

இது தொடர்பாக பின்னர் ஆணை பிறப்பிக்கப்படும் என்று கூறிய நீதிபதி, வழக்கை ஒத்திவைத்தார்.

இந் நிலையி்ல் இந்த வழக்கில் வைகோ ஆஜராகி வாதாட அனுமதி மறுத்து நீதிபதி விக்ரம்ஜித் சென் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவரோ, உறுப்பினரோ அல்லது அதன் நிர்வாகிகளில் ஒருவரோதான் சட்டப்படி இந்த வழக்கில் ஆஜராக முடியும் என்று தனது உத்தரவில் குறிப்பிட்ட நீதிபதி, வைகோவின் கோரிக்கையை நிராகரித்தார்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை, அக்டோபர் 5ம் தேதி சென்னையிலும், 20ம் தேதி, ஊட்டியிலும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகாரி மர்ம சாவு-சிபிஐ விசாரிக்க வைகோ கோரிக்கை:

தூத்துக்குடி நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரி முருகன் மர்மச் சாவு தொர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வைகோ கோரியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தரக்கட்டுப்பாட்டு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த முருகனின் மரணம், தற்கொலையால் நிகழ்ந்தது அல்ல, கொலை செய்யப்பட்டுத்தான் மடிந்தார் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

பிரேதப் பரிசோதனை அறிக்கை முருகன் கொலை செய்யப்பட்டார் என்பதற்கு முழு ஆதாரமாக இருக்கிறது.
பிரேதப் பரிசோதனை இறுதி அறிக்கை தந்த மருத்துவர், முருகன் 'மாலத்தியான்' விஷம் குடித்து இறந்திருக்கக் கூடும் என்று தெரிவித்திருப்பது நிர்ப்பந்தத்தால் கொடுக்கப்பட்ட அறிக்கையாகத் தெரிகிறது.

முருகனின் உடம்பில் இருக்கின்ற காயங்களை அந்த அறிக்கை மறைக்க முடியவில்லை.

முருகன் மனைவி செல்வி உண்ணாவிரதம் இருந்து போராடினார். நான் அந்த சகோதரியைச் சந்தித்தபோது, அழுதுகொண்டே அவர் என்னிடம் கூறியது: என் கணவரைக் கொலை செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. என் கணவருடைய உயிர் திரும்பி வரப்போவது இல்லை. ஆனால், அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று அரசாங்கத் தரப்பில் கூறுவது, அவர் மீது அபாண்டமாகப் பழி சுமத்துகின்ற கொடுமை ஆகும். அவர் தற்கொலை செய்யவில்லை என்ற உண்மை, ஊருக்கும், உலகத்துக்கும் தெரிய வேண்டும்'' என்று விம்மல்களுக்கு மத்தியில் கூறியபோது, தாங்க முடியாத வேதனை ஏற்பட்டது.

காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் கொந்தளிப்பை உணர்ந்தபிறகு, பிரச்சனையை மூடி மறைக்க, சிபிசிஐடி போலீசார் விசாரிப்பார்கள் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அவரது மனைவி செல்வி கொடுத்த புகார் மீது, உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகாரிகளைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும்.

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் முருகன் குற்றம் சாட்டி உள்ள நபர்களையும் உடனடியாகப் பணி இடை நீக்கம் செய்ய வேண்டும். முருகன் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.

கொலை செய்யப்பட்டுத்தான் முருகன் இறந்தார் என்பதை மூடி மறைக்கத் தமிழ்நாடு அரசு முயலவில்லை என்று கூறுமானால் சிபிஐ விசாரணைக்கு, மாநில அரசே ஏற்பாடு செய்ய வேண்டும் என்றப கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடல்-வைகோ வரவேற்பு:

அவர் வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில், தூத்துக்குடி நகரிலும், சுற்று வட்டாரங்களிலும் நாசம் விளைவித்துக் கொண்டு இருந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என்று 15 ஆண்டுகளாக மதிமுக போராடி வந்தது.

மராட்டிய மாநிலத்தில் ஆலையை அமைக்க அனுமதிக்காமல் அந்த அரசு விரட்டியபிறகு, தமிழ்நாட்டுக்கு இந்த ஆலை வந்தது. விவசாயிகள், மீனவர்கள், அந்தப் பகுதியில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பெருங்கேடு விளைவித்து வந்தது இந்த ஆலை.

விளை நிலங்கள் பாழாகும்; கடல்வாழ் உயிர் இனங்கள் அழியும்; மக்களின் உடல்நலத்துக்குப் பெருங்கேடு நேரும் என்பதால் இந்த ஆலை மூடப்பட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்து நானே வாதாடினேன். இந்த ஆலையை மூட வேண்டும் என்று தேர்தல் பிரகடனத்திலும் தெரிவித்தோம்.

இப்போது, உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. உண்மை ஒருநாள் வெல்லும்; நீதி நிலைக்கும் என்பதற்கு உதாரணமாகி விட்டது. எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ அவர்கள் அநீதியை எதிர்த்துப் போராடி வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை இந்தத் தீர்ப்பு வழங்கி உள்ளது என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X