For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீர் கவர்னர் வோராவை மாற்ற மத்திய அரசு முடிவு-அரசியல்வாதியை நியமிக்க முடிவு

By Chakra
Google Oneindia Tamil News

Vohra
டெல்லி: காஷ்மீர் மாநில ஆளுநராக உள்ள ஐஏஎஸ் அதிகாரி வோரா மாற்றப்பட்டு, அங்கு மூத்த காங்கிரஸ் தலைவர் ஆளுநராக்கப்படுவார் என்று தெரிகிறது.

காஷ்மீர் மாநிலத்தில் சுதந்திரம் கோரி பொது மக்கள், இளைஞர்கள், பெண்கள் நடத்தி வந்த கலவரத்தில் இதுவரை 130க்கும் அதிகமானோர் பலியாகிவி்ட்டனர்.

தொடர் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் மாநிலமே ஸ்தம்பித்துப் போயிருந்தது. இப்போது அங்கு மெல்ல மெல்ல சகஜ நிலைமை திரும்பி வருகிறது.

இந் நிலையில் காஷ்மீரில் அமைதி நடவடிக்கைக்கான 8 அம்ச திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் ஆலோசனை நடத்தினார்.

இதற்கு முன் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுடனும் பிரதமர் தனியாக ஆலோசனை நடத்தினார்.

அதில் காஷ்மீர் கவர்னரை மாற்றுவது என்றும், காஷ்மீர் பிரிவினைவாதிகள், மக்களுடன் பேச்சு நடத்த 3 பேர் குழுவை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

காஷ்மீரில் தற்போது ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி என்.என்.வோரா கவர்னராக உள்ளார். கடந்த 2008ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட அவரது பதவி காலம் 2013ம் ஆண்டு வரை உள்ளது.

ஆனால், அதிகாரியான வோரா காஷ்மீரில் சமீபத்திய பிரச்சனையின்போது திறம்பட செயலாற்றவில்லை என்று மத்திய அரசு கருதுகிறது.

இதற்கிடையே கடந்த 6 மாதமாகவே வோராவும் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னை வேறு மாநிலத்துக்கு மாற்றுமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறார்.

இதையடுத்து வோராவுக்குப் பதில் அனுபவம் வாய்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவரை காஷ்மீர் மாநில கவர்னராக நியமிக்க பிரதமர் மன்மோகன் சிங் திட்டமிட்டுள்ளார்.

காஷ்மீரில் அரசியல்வாதியை கவர்னராக நியமித்தால், முக்கிய விவகாரங்களில் இளம் முதல்வர் உமருக்கு சரியான யோசனைகளை வழங்கி வழி காட்டுவார் என்று மத்திய அரசு கருதுகிறது.

மேலும் மத்திய அரசின் 8 அம்ச அமைதி திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டுமானால், காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கவர்னராக இருப்பதே நல்லது என்று சோனியாவும், சிதம்பரமும் கருதுகின்றனர்.

இதற்கிடையே பிரதமர் மன்மோகன் சிங்கின் 8 அம்ச திட்டத்தின் ஒரு பகுதியாக காஷ்மீர் மக்களின் கருத்துக்களை அறிய 3 பேர் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதில் ஒரு இந்து, ஒரு முஸ்லிம், ஒரு பெண் ஆகியோர் இடம் பெறுவர் என்று தெரிகிறது.

இந்தக் குழுவின் தலைவராக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் அல்லது மத்திய அமைச்சர் பிரிதிவிராஜ் சவுகான் ஆகியோரில் ஒருவர் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்தக் குழு பிரிவினைவாத தலைவர்கள், முஸ்லிம் அமைப்புகள் மற்றும் தனி நபர்களிடம் பேச்சு நடத்தி கருத்துக்களை அறியும்.

முதல் கட்டமாக அவர்கள் ஜம்மு, லே, ஸ்ரீநகர் பகுதிகளில் அனைத்து தலைவர்களையும் அழைத்து பேச்சு நடத்துவார்கள்.
அதன் பிறகு பாரமுல்லா, அனந்த் நாக், சோபோர், ஊரி, தோடா, ராஜெளரி ஆகிய நகரங்களில் பொது மக்களுடன் இந்தக் குழு பேச்சு நடத்தும்.

பிறகு இந்தக் குழு தனது அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்பிக்கும். அதன் அடிப்படையில் காஷ்மீர் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கைகளை எடுக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X