For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கம்யூ. தொழிற்சங்கம்தான் பஸ் ஊழியர் போராட்டத்திற்குக் காரணம்-கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: சென்னையில் நடந்த திடீர் பஸ் ஊழியர் போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் தொழிற்சங்கமான சிஐடியூதான் காரணம். எந்த பிரச்சினையாவது கிடைக்காதா; அதை வைத்து அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முடியாதா என்ற அடிப்படையிலேயே எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகிறார்கள் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

திமுக கவுன்சிலர் அன்பு என்பவரின் மகன் செந்தில் சுரேஷ் மற்றும் அவரது அடியாட்கள், கொலை வெறியுடன், சென்னை மாநகர போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களையம், ஊழியர்களையும் வெறித்தனமாக தாக்கியதைக் கண்டித்து நேற்று முன்தினம் சென்னை நகர போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அதிரடி ஸ்டிரைக்கில் குதித்தனர். கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஓடாததால் சென்னை நகரமே ஸ்தம்பித்துப் போனது. 8 மணி நேரம் நடந்த இந்தப் போராட்டத்தால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ. 80 லட்சம் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

இந்தப் போராட்டத்திற்கு கம்யூனிஸ்டுகள்தான் காரணம் என முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

எந்த ஜனநாயகத்திலும் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் அத்தியாவசியத் தேவைகள் என்பதை யாரும் மறுத்துரைத்திட இயலாது. ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை. அப்போதுதான், மக்களாட்சியின் மாண்புகள் மேலும்மேலும் பொலிவு பெறும். நிர்வாகத்தில் அவ்வப்போது ஏற்படும் குறைகளை ஆக்கபூர்வமான முறையில் எதிர்க்கட்சி சுட்டிக்காட்டுவதும்; வேறு எந்த உள்நோக்கமும் இன்றி இதய சுத்தியோடு சுட்டிக்காட்டப்படும் அந்தக் குறைகளைக் களைந்து, ஆளுங்கட்சி ஆட்சிச் சக்கரத்தைச் செலுத்துவதும்; ஜனநாயகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நடைமுறையாகும்.

ஆனால், தமிழக அரசியலில் நாம் காண்பதென்ன? இதுவரை இல்லாத அளவுக்கு சரித்திரம் போற்றும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது கழக அரசு. ஏழை எளியோர், பாட்டாளி மக்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், விவசாயிகள், வணிகர்கள் என அனைத்துத் தரப்பினரின் நலன்களையும் பேணிக் காத்திடும் அரசு கழக அரசு. தமிழகத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் உணவுப் பாதுகாப்பும், மருத்துவப் பாதுகாப்பும், உறைவிடப் பாதுகாப்பும் வழங்கிட வேண்டுமென்ற உயரிய நோக்கத்தோடு பல்வேறு திட்டங்களைத் தீட்டி - அதன் காரணமாக லட்சோபலட்சம் மக்கள் பலனடைந்து நிறைவும், நிம்மதியும் பெற்று வாழ்ந்து வருகின்றனர். நல்லவர்கள், நடுநிலையாளர்கள், பொருளாதார வல்லுநர்கள், அரசியல் கட்சிகளைச் சாராத அமைப்பினர், கழக அரசின் திட்டங்களையும், செயல்பாடுகளையும் போற்றிப் பாராட்டிவருகின்றனர்.

கழக அரசு நாள்தோறும் பெற்றுவரும் பாராட்டுகளையும், மக்களிடையே பெருகி வரும் பேராதரவினையும் கண்டு பொறுக்காத எதிர்க்கட்சியினர் சிலர்; எங்காவது ஒரு துரும்பு கிடைத்தாலும், அதைத் தூணாக்கிக் காட்டுவதிலும்; சிறு பொறி கிடைத்தாலும், அதனை ஊதிஊதி பெருநெருப்பாக்குவதிலும், தங்களது நேரத்தையும் நினைப்பையும் செலவிட்டு வருகிறார்கள்.

இதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூறமுடியும். நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியையே பார்ப்போமே!

சென்னை, தியாகராய நகரிலிருந்து ஆவடிக்கு 3.10.2010 அன்று இரவு 9 மணிக்கு மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறது. அந்தப் பேருந்து பாடி, புதுநகர் பஸ் நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தபோது, "ஸ்கார்ப்பியோ'' கார் ஒன்று அந்த பஸ்சை முந்திச் செல்ல முயன்றிருக்கிறது. காருக்குள் ஓட்டுநர் உதயகுமார், செந்தில் சுரேஷ், ஸ்டாலின், முருகன் என்போர் இருந்திருக்கின்றனர்.

பேருந்து ஓட்டுநர் காருக்கு வழிவிடவில்லை என்பதால், பேருந்துக்கும், காருக்கும் போட்டியும், உரசலும் ஏற்பட்டிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக இரு குழுவினருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றி, கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கைகலப்பில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த குமாரவேல், குமார், உமாபதி, தினகரன், பாப்பையா, சுப்பிரமணியம் ஆகியோர் காயம் அடைந்திருக்கின்றனர். காயம் அடைந்த 6 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கே தேவையான சிகிச்சைக்குப் பிறகு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றனர்.

ஆனால், சி.ஐ.டி.யு. சங்கத்தைச் சார்ந்த சிலர், குமாரவேல், குமார், தினகரன் ஆகிய மூவரையும் அழைத்துச் சென்று சென்னை பொது மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். வேண்டுமென்றே திட்டமிட்டுப் பொய்யுரையாக, "காயம் அடைந்த ஒருவர் இறந்துவிட்டார்'' என்ற வதந்தியை அந்தத் தொழிற்சங்கத்தினர் பரப்பியதால், போக்குவரத்துக் கழகப் பணிமனைகளில் பதற்றம் ஏற்பட்டது.

இதன் காரணமாக, 4.10.2010 காலையில் அண்ணா நகர், ஆவடி, அம்பத்தூர் ஆகிய பணிமனைகளைச் சேர்ந்த ஓட்டுநர்களும், நடத்துநர்களும் பேருந்துகளை இயக்க மறுத்தனர். பேருந்துகளை எடுத்துச் சென்ற ஓட்டுநர்களையும், நடத்துநர்களையும் வழிமறித்து, பேருந்துகளை சாலைகளிலேயே குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தச் செய்தனர்.

நாள்தோறும் சென்னை மாநகரச் சாலைகளில் 3,151 பேருந்துகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆனால், நேற்று 1,907 பேருந்துகள் மட்டுமே ஓடின. 713 பேருந்துகள் ஓடவில்லை. அதற்குக் காரணம், சில எதிர்க்கட்சிகளைச் சார்ந்த தொழிற்சங்கங்கள் தான். பேருந்துகள் ஓடாமல் இருந்ததால், பொதுமக்கள் எவ்வளவு அவதிக்கு ஆளானார்கள் என்பதை அனைத்துப் பத்திரிகைகளும் விரிவாக வெளியிட்டிருக்கின்றன.

செந்தில் சுரேஷ், ஸ்டாலின், முருகன், உதயகுமார் ஆகிய நான்கு பேர் மீதும் கொலை முயற்சி, பொதுச் சொத்தைச் சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து; அவர்களைக் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

இதில் உண்மைநிலை என்ன தெரியுமா? காரில் பயணம் செய்த செந்தில் சுரேஷ் என்பவர் அம்பத்தூர் நகராட்சி, 37வது வட்டம் தி.மு.க. கவுன்சிலர் அன்பு என்பவரின் மகன். கைகலப்பின் காரணமாகக் கலவரத்தில் காயம்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓட்டுநர்-நடத்துநர்களில் உமாபதி, பாப்பையா, சுப்பிரமணியம் ஆகியோர் கழகச் சார்பிலான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள். அவர்கள் தி.மு.க.வினர் அல்லது தி.மு.க. ஆதரவாளர் என்பதற்காக; காவல்துறை அவர்களைக் கைது செய்யாமலோ, ரிமாண்டில் வைக்காமலோ, விடுவித்து விடவில்லை - மாறாக; அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுமிருக்கிறார்கள். இத்தனை நடவடிக்கைகளையும் பாரபட்சமில்லாமல் - தயவு தாட்சண்யம் பாராமல்; இந்த அரசின் காவல்துறை எடுத்திருக்கும்போது, பேருந்துகளை இயக்கிடாமல்; தொழிலாளத் தோழர்கள் கிளர்ச்சியில் ஈடுபடுவதால், போக்குவரத்து ஸ்தம்பித்துப் போய், பொதுமக்கள் எவ்வளவு பெரும் பாதிப்புக்கு ஆளாகிட நேரிட்டது என்பதை நடுநிலையோடு சிந்தித்துப் பார்த்திட வேண்டுகிறேன்.

நியாயத்துக்காகப் போராடும் தொழிலாளிக்கு விரோதமாக எந்தவொரு செயலும் நடைபெறுவதை நான் விரும்பாதவன் என்பதை; இன்று நேற்றல்ல; இளமைக் காலம் முதலே நிரூபித்து வருபவன் என்ற முறையில்; யாருடைய கோபதாபமானாலும், அதன் விளைவாக பொது மக்களோ, பொதுச் சொத்துக்களோ தாக்குண்டு - ஏற்படும் இழப்பை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?

இரு குழுவினருக்கிடையே ஏற்பட்ட மோதலை, காரணமாகக் காட்டி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தொழிலாளர் சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு பல்வேறு வகையிலும் இன்னல்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

இப்படித்தான், தமிழகத்திலே இருக்கின்ற எதிர்க்கட்சிகள் பிரச்சினைகளே இல்லை என்றாலும்கூட, பிரச்சினைகளை உருவாக்கி, தொடர்புடையவர்களைத் திசைதிருப்பியும், உருவாக்குகின்ற பிரச்சினைகளின் மூலமாக பொதுமக்களுக்கு அவதியும், இன்னலும் ஏற்படும் என்றாலும், அதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலை கொள்ளாமல், எந்தப் பிரச்சினையாவது கிடைக்காதா, அதை வைத்து அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முடியாதா என்ற அடிப்படையிலேயே செயல்பட்டு வருகிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்ச்சியும் ஒரு சான்றாகும்.

தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சியினர்க்கு ஆக்கபூர்வமான முறையில் பொதுப்பணி ஆற்றிட வேண்டும் என்ற நோக்கத்தைவிட; எதையாவது வைத்து அரசியல் நடத்திட வேண்டும்; தாங்கள் சார்ந்திருக்கும் கட்சிக்கு ஆதாயம் தேடிட வேண்டும்; என்பதிலேயே கண்ணுங்கருத்துமாக இருக்கிறார்கள் என்ற நிலையைத் தமிழக மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை; இத்தகைய அமைதி குலைக்கும் காரியங்களில் ஈடுபடுவோர் மறந்துவிடக்கூடாது என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X