தூத்துக்குடியில் வெடிகுண்டு கும்பல் கைது: 7 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வெடிகுண்டு தயாரித்த கும்பலை போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.
தூத்துக்குடி, முறப்பநாடு பகுதியில் சிலர் வெடிகுண்டுகள் தயாரிப்பதாக தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. ஜெயக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரின் உத்தரவின் பேரில் முறப்பாடு இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் தலைமையிலான போலீசார் வசவப்பபுரம் அருகே உள்ள வாய்க்காலையொட்டிய காட்டுபகுதியில் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது போலீசாரைக் கண்டதும் அங்கிருந்த கும்பல் தப்பியோடியது. அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 7 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.
விசாரணையி்ல் அவர்கள் தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த சிங்காரவேல், முத்துராமலிங்கம், சுரேஷ், முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜெயபாண்டி, அனவரநல்லூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பது தெரிய வந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர். சம்பவ இடத்திற்கு எஸ்.பி. கபில்குமார் சரத்கார் வந்து விசாரணை நடத்தினார்.
வெடிகுண்டுகளை கண்டறியும் மோப்ப நாய் பிரிவு மூலம் அப்பகுதியில் மேலும் ஏதேனும் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது.