கடலூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உரிமையாளர் பலி : 4 பேர் கவலைக்கிடம்
கடலூர்: கடலூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உரிமையாளர் பலியானார்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள எல்லப்பன்பேட்டையைச் சேர்ந்த சிவக்கொழுந்து( 60) என்பவர் அரசு அனுமதி பெற்ற பட்டாசு மற்றும் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்தார்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் பட்டாசு மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வந்தது.
நேற்று இரவு 9 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்ததில் அந்த தொழிற்சாலை தரை மட்டமானது. தகவல் கிடைத்தவுடன் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இடிபாடுகளை அகற்றியபோது அதில் சிக்கி சிவக்கொழுந்து இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த சிவக்கொழுந்தின் பேரன்கள் சந்தானம்(7), தருண்(4) , அங்கு வேலை பார்த்த அப்பு(22), பாபு(25) ஆகியோர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
புஸ்வானத்தை சோதனை செய்தபோது அதிலிருந்து வந்த தீப்பொறி அருகில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு பண்டல்கள் மீது பட்டதால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.