For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நடு ரோட்டில் பறந்தது 1000 ரூபாய் நோட்டு-பறிமுதல் செய்த பெண் ஏட்டு!

Google Oneindia Tamil News

சென்னை: நடுரோட்டில் திடீரென பறந்த 1,000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் போட்டி போட்டு எடுக்க குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆனால் இந்த நோட்டுகள் அனைத்தையும் பெண் போலீஸ் ஏட்டு பறிமுதல் செய்தார்.

சென்னை ஆவடி - பூந்தமல்லி (காமராஜர் சிலை அருகே) சாலையில் உள்ள ரெயில்வே பாலத்தின் அருகே நேற்று மதியம் 1 மணியளவில் வாகனங்கள் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நேரத்தில் ஒரு அதிசயம் நடந்தது.

திடீரென ஏதோ ஒரு வாகனத்தில் இருந்து 1,000 ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்து வந்து சாலையில் விழுந்தன. இதைப் பார்த்ததும் அந்த வழியாக சென்ற பொதுமக்களும், சாலையின் இருபக்கம் நின்று கொண்டிருந்தவர்களும் ஓடி வந்து ரூபாய் நோட்டுகளை எடுக்க ஆரம்பித்தனர். வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்களும் சாலையின் ஓரமாக தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, ஓடி வந்து ரூபாய் நோட்டுகளை எடுத்தனர்.

மக்கள் போட்டி, போட்டுக்கொண்டு ரூபாய் நோட்டுகளை எடுக்க குவிந்ததால், சாலையில் சென்ற வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. கார்கள், மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள், விஷயம் கேள்விப்பட்டு, தங்கள் வாகனங்களை அப்படியே போட்டுவிட்டு ரூபாய் நோட்டைப் பொறுக்க ஆரம்பித்தனர்.

இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி கொண்டிருந்த ஏட்டு கல்யாணி, அங்கு விரைந்து வந்தார்.

பொதுமக்கள் போட்டி, போட்டுக் கொண்டு நடுரோட்டில் ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்து வியப்படைந்தார். அவர், ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டிருந்தவர்களிடமிருந்து அவற்றைப் பறிமுதல் செய்தார்.

சிலர் கொடுக்க மாட்டேன் என அடம்பிடிக்க, 'இது கள்ள நோட்டாகவோ, திருட்டுப் பணமாகவோ கூட இருக்கலாம். இதனை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதுதான் நல்லது" எனக் கூறி பறிமுதல் செய்தார். அப்படியும் சிலர் நோட்டுக்களுடன் ஓடினர்.

இறுதியில் பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.33 ஆயிரம். அவர், அந்த பணத்தை போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பெரியகருப்பனிடம் ஒப்படைத்தார். பெரியகருப்பன் இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு, ரூ.33 ஆயிரத்தையும் சட்டம், ஒழுங்கு பிரிவு போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

இந்தப் பணம் கள்ள நோட்டுக்கள் அல்ல என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் எப்படி, எதனால், யாரிடமிருந்து பறந்தது என விசாரணை தொடர்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X