For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறுவனின் பாதுகாப்பை கருதியே கடத்தல்காரர்களை வேண்டுமென்றே தப்ப விட்டு பின்னர் பிடித்தோம்-கமிஷனர்

By Chakra
Google Oneindia Tamil News

Commissioner Rajendran with Keertivasan
சென்னை: சென்னை மாணவன் கீர்த்திவாசன் கடத்தல் தொடர்பாக இரு இளைஞர்களைப் பிடித்துள்ளோம். இருவரும் பட்டதாரிகள். சிறுவனை பத்திரமாக மீட்க வேண்டும் என்பதற்காகவே கடத்தல்காரர்கள் பணத்தைப் பெற வந்தபோது வேண்டும் என்றே தப்ப விட்டு பின்னர் வளைத்துப் பிடித்தோம் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாணவன் கீர்த்திவாசனைக் கடத்திச் சென்று பணம் பறித்த கும்பலை போலீஸார் வளைத்துப் பிடித்துள்ளனர். இந்தக் கும்பலுக்குக் கொடுக்கப்பட்ட பணத்தையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து இன்று பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கினார் ஆணையர் ராஜேந்திரன்.

அவர் கூறியதாவது...

கடத்தல் தொடர்பாக 2 பேரைப் பிடித்துள்ளோம். ஒருவரது பெயர் பிரபு, இன்னொருவர் பெயர் விஜய்.

சிறுவன் கடத்தப்பட்ட அன்றைய இரவு இவர்கள் தந்தை ரமேஷுக்குப் போன் செய்து பணம் தருமாறு கேட்டனர். முதலில் ரூ. 3 கோடி கேட்டனர். நாங்கள் பேரம் பேசி படிப்படியாக அதை குறைத்து வந்தோம். ரூ. 1 கோடியாக கடைசியில் முடிவானது.

அதைக் கொடுப்பதற்கு முன்பு பையனுடன் பேச வேண்டும் என்றோம். இரவு எட்டரை மணியளவில் பையனுடன் பேச அனுமதித்தனர். அப்போது பையன் பயத்தில் அழுது விட்டான். பின்னர் பையனுடன் பேச முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று பணத்தைக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்று கூறினர்.இடத்தையும் தெரிவித்தனர். அவர்கள் காரில்தான்வருவார்கள் என நினைத்து நாங்கள் சம்பந்தப்பட்ட இடத்தைச் சுற்றி படையினரைக் குவித்தோம்.

ஆனால் அவர்கள் காரில் வரவில்லை. மாறாக மோட்டார் பைக்கில் வந்து விட்டனர். இதனால் எங்களது திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. மேலும் நாங்கள் ஏதாவது ஆக்ஷன் எடுத்து அது பையனுடைய உயிருக்கு ஆபத்தாகி விடக் கூடாது என்று தயங்கினோம். பையனின் பெற்றோரும் பெரும் பதட்டத்துடன் இருந்தனர். நாங்களும் கூட பையனின் பாதுகாப்புக்கே முக்கியத்துவம் கொடுத்தோம்.

இதனால் அவர்களை அப்படியே தப்ப விட அனுமதித்தோம். வேண்டும் எனறேதான் அவர்களை போக விட்டோம்.அதன் பின்னர் எங்களது படையினர் அந்தக் காரை பின் தொடர்ந்தனர். அவர்களது இருப்பிடத்தை நாங்கள் அடையாளம் கண்டுகொண்டோம்.

பையன் பத்திரமாக வந்ததைத் தொடர்ந்து அவர்களை வளைத்துப் பிடிக்க விடிய விடிய நடவடிக்கையில் ஈடுபட்டோம். இதில் இருவரும் பிடிபட்டனர்.

இருவரும் பணத்தை வாங்க வந்தபோது ஹெல்மட் அணிந்திருந்தனர். மேலும் அவர்கள் வந்த கார் திருட்டுக்காராகும். அந்தக் காரைத் திருடி நம்பர் பிளேட்டை மாற்றியிருந்தனர். ஆனால் பைக் அவர்களுடையதாகும். அதை வைத்துதான் அவர்களை எளிதில் பிடிக்க முடிந்தது.

ரமேஷிடம் ரூ 20 லட்சம் மட்டும் வைத்துக் கொடுக்குமாறு கூறியிருந்தோம். ஆனால் பையனுக்கு என்ன ஆகி விடுமோ என்று பயந்து கூடுதலாக வைத்து விட்டார்.

முதலில் ரூ. 3 கோடி வரை பேரம் பேசினர் கடத்தல்காரர்கள். பின்னர் ஒரு கோடியாக அதைக் குறைத்தோம். இருப்பினும் ரமேஷ் பதட்டத்தில் ரூ. 98 லட்சத்து 73 ஆயிரம் மட்டுமே சூட்கேஸிஸ் வைத்துக் கொடுத்துள்ளார். தற்போது அதை அப்படியே பறிமுதல் செய்து விட்டோம்.

கடத்தல்காரர்களை பணம் வாங்க வந்தபோதே பிடித்திருக்கலாம். ஆனால் அவர்கள் ஒருவேளை துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கலாம். அது பையனுக்கு ஆபத்தாகியிருக்கும். எனவேதான் விட்டுப் பிடித்தோம். எனக்கு நம்பிக்கை இருந்தது. அவர்கள் சிட்டியை விட்டு எங்கும் போய் விட முடியாது. நிச்சயம் பிடிப்போம் என்ற நம்பிக்கை இருந்ததால் அவர்களை அப்படியே போக அனுமதிக்குமாறு உத்தரவிட்டேன்.

மேலும் சிலருக்கு தொடர்பு இருக்குமா என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர்தான் தெரிய வரும். தொடர்ந்துவிசாரித்து வருகிறோம் என்றார் ராஜேந்திரன்.

முதல்வர், கமிஷனருக்கு நன்றி-சிறுவனின் தந்தை:

பேட்டியின்போது உடன் இருந்த சிறுவன் கீர்த்திவாசனின் தந்தை ரமேஷ் பேசுகையில், மகன் கடத்தப்பட்டான் என்ற தகவல் கிடைத்ததும் உடனடியாக போலீஸுக்குத் தெரிவித்தேன். உடனடியாக கூடுதல் ஆணையர், இணை ஆணையர், துணை ஆணையர் உள்ளிட்டோர் வந்து விட்டனர்.

அதன் பின்னர் கமிஷனர் முதல் ஒட்டுமொத்த காவல்துறையினரும் ஒரு நிமிடம் கூட தூங்காமல், தங்களது பையனைப் போல எனது மகனை நினைத்து அவனை மீட்க முழுமையாக முயற்சிகள் எடுத்தனர். அவர்களது முயற்சியால்தான் எனது மகனை இன்று நான் மீண்டும் பெற முடிந்தது.

ரூ. 20 லட்சம் வரை மட்டுமே கொடுங்கள் என்று போலீஸார் கூறினர். நான் தான் பயத்தில் கூடுதல் பணத்தைக் கொடுத்தேன். இப்போது எனது பையனும், பணமும் திரும்பக் கிடைத்து விட்டது. இதற்காக முதல்வருக்கும், கமிஷனர்உள்ளிட்ட காவல்துறையினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

பிடிபட்ட இருவரும் தனது உறவினர்கள் இல்லை என்றும், அவர்களது உறவினர் தனது நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிவதாகவும் ரமேஷ் தெரிவித்தார்.

கீர்த்திவாசனைக் கடத்தப் போவதாக 3 மாதங்களுக்கு முன்பே ரமேஷின் உறவினர் ஒருவர் மிரட்டியிருந்தார். தற்போது அவருக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரிக்கவுள்ளனர்.

பேட்டியின்போது இரு குற்றவாளிகளையும் போலீஸார் செய்தியாளர்களுக்கு காட்டினர். பின்னர் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தையும் கட்டுக் கட்டாக அடுக்கி வைத்து காட்சிக்கு வைத்திருந்தனர். அனைத்தும் ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களாகும்.

இந்தப் பணத்தை முழுமையாக ரமேஷால் ஒரே இரவுக்குள் சேகரிக்க முடியவில்லையாம். இதையடுத்து போலீஸாரும் பணத்தை ஏற்பாடு செய்து கொடுத்ததாக கமிஷனர் தனது பேட்டியின்போது தெரிவித்தார்.

கமிஷனர் தனது பேட்டியின்போது கூறுகையில், கோவையில் நடந்த சம்பவத்திற்குப் பிறகுதான் இந்த கடத்தல் நடந்தது. எனவே அதையும் மனதில் கொண்டு நாங்கள் செயல்பட நேரிட்டது என்று கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X