For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாராஷ்டிர முதல்வராக பிரிதிவிராஜ் சவாண் தேர்வு

Google Oneindia Tamil News

Prithviraj Chavan
மும்பை: ஆதர்ஷ் அடுக்குமாறு குடியிருப்பு ஊழல் காரணமாக மகாராஷ்டிர முதல்வர் பதவியிலிருந்து அசோக் சவாண் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அம் மாநில புதிய முதல்வராக பிரிதிவிராஜ் சவாண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் பதவிக்கு மத்திய அமைச்சர்கள் விலாஸ் ராவ் தேஷ்முக், பிரிதிவிராஜ் சவாண், சுஷில்குமார் ஷிண்டே, பாலாசாகிப் தொராட் உள்ளிட்ட பலர் போட்டியிட்டனர்.

ஆனால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்துக்கு மிக நெருக்கமான சுஷில்குமார் ஷிண்டே மற்றும் விலாஸ் ராவ் தேஷ்முக் ஆகியோருக்கும் ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் புகாரில் தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாயின.

இந் நிலையில் இந்தப் பதவிக்கு நேர்மையான ஒருவர் தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி வெளிப்படையாக கருத்துத் தெரிவித்தார்.

இதையடுத்து முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே.ஆண்டனி ஆகியோர் நேற்றிரவு மகாராஷ்டிர எம்எல்ஏக்களிடையே ஆலோசனை நடத்தினர். அக் கூட்டத்தில் அடுத்த முதல்வரை தேர்வு செய்ய சோனியா காந்திக்கு அதிகாரம் அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து எம்எல்ஏக்களிடம் தாங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பான விவரத்தை இன்று காலை சோனியா காந்தியிடம் பிரணாபும் ஆண்டனியும் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பிரிதிவிராஜ் சவாணை சோனியா காந்தி இன்று காலை அழைத்துப் பேசினார்.

இதையடுத்து இந்தப் பதவிக்கு பிரிதிவிராஜ் சவாணை சோனியா காந்தி தேர்வு செய்துள்ளாதாக பிரணாப் முகர்ஜி நிருபர்களிடம் தெரிவித்தார்.

முதல்வராக பதவியேற்பதற்காக தனது மத்திய இணையமைச்சர் பதவியை சவாண் உடனடியாக ராஜினாமா செய்தார். அவரது பொறுப்பு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபலிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகத்துறை இணையமைச்சராக உள்ள பிரிதிவிராஜ் சவான் சோனியா காந்திக்கு மிக நெருக்கமானவர் ஆவார். பிரதமருக்கும் சோனியாவுக்கும் இடையே பாலமாக செயல்பட்டு வந்தவர்.

மேற்கு மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பிரிதிவிராஜ் சவாண், அம் மாநிலத்தின் முக்கிய ஜாதியான மராட்டா சமூகத்தைச் சேர்ந்தவர். எந்த கெட்ட பெயரும் இல்லாத அரசியல்வாதி.

நாளை இவர் மகாராஷ்டிர முதல்வராகப் பொறுப்பேற்கிறார்.

துணை முதல்வரையும் மாற்றிய பவார்:

இந் நிலையில் ஆதர்ஷ் வீட்டுவசதிக் கழக ஊழலில் சிக்கி மகாராஷ்டிர மாநில முதல்வர் அசோக் சவான் பதவி இழந்ததைத் தொடர்ந்து தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை முதல்வர் ஜகன் பூஜ்பாலும் தனது பதவியை இழக்கிறார்.

அவருக்குப் பதில் புதிய துணை முதல்வராக அஜீத் பவாரை நியமிக்கிறது தேசியவாத காங்கிரஸ் கட்சி. இவர் அக் கட்சியின் தலைவர் சரத் பவாரி்ன் நெருங்கிய உறவினர் ஆவார்.

புதிய முதல்வராக பிருத்விராஜ் சவான் தேர்வு செய்யப்பட்ட சில மணி நேரங்களில் துணை முதல்வரை மாற்ற தேசியவாத காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

முன்னதாக தன்னை நீக்குவதற்கு பூஜ்பால் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்திருந்தார். இதனால் அவரை நீக்கும் முடிவை அறிவிப்பதில் தேசியவாத காங்கிரஸ் காலதாமதம் செய்து வந்தது. இருப்பினும் அஜீத் பவாரை துணை முதல்வராக்க பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து பூஜ்பாலை நீக்க தேசியவாத காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X